‘டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில்’ வெளியாகியுள்ள வெப் சீரிஸ், பாராசூட். இந்த வெப் சீரிஸை, ராசு ரஞ்சித் இயக்கியுள்ளார். இதில், கிஷோர், கிருஷ்ணா, கனி, பவா செல்லத்துரை, காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
கர்நாடாக மாநில எல்லைக்கருகே, தமிழ் நாட்டில் கேஸ் சிலிண்டர் டெலிவெரி செய்பவராக கிஷோர். இவரது மனைவி (கனி), மகன் (சக்தி), மகள் (இயல் ). கிஷோர், தனது குழந்தைகளுக்கான நல்ல எதிர்காலத்தை, எப்படியாவது உருவாக்கிக்கொடுத்திட கடுமையாக உழைத்து வருகிறார். கிஷோரின் மகனை விட, மகள் நன்றாக படிக்கிறார். மகன் படிப்பில் மந்தம் விளையாட்டில் சுட்டி. இதனால், கிஷோர் தனது மகனிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்து வருகிறார்.
தனது தங்கையின் பிறந்த நாளன்று, அவர்கள் செல்லமாக அழைக்கும் ‘பாராசூட்’ என பெயரிடப்பட்ட, அப்பாவின் மொபட்டில் தங்கையை அமரவைத்து மகிழ்ச்சியாக ரவுண்ட் அடிக்கிறார். மொபெட்டை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றவர்கள், திரும்பி வந்து மொபெட்டை காணாமல் அதிர்ச்சியாகின்றனர். கடுமையாக நடந்து கொள்ளும் அப்பாவையும், பாராசூட் என ஆசையாக வைத்திருந்த மொபெட்டைத் தேடி கர்நாடக எல்லிக்குள் சென்றுவிடுகின்றனர். அங்கு காவிரி நீர் பிரச்சனை வெடிக்க, பெரிய கலவரம் ஏற்படுகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே, பாராசூட் வெப்சீரிஸின் எமோஷனலான கதை, திரைக்கதை.
திரைக்கதை நகர்வுக்கு கிஷோர், கிருஷ்ணா, கனி, பாவா செல்லதுரை, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிறுவன் சக்தி, சிறுமி இயல் ஆகியோரது நடிப்பு, பாராசூட் வெப்சீரிஸை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. அதிலும் க்ளைமாக்ஸில், கிஷோரை பார்த்து மிரண்டு அழ, சமாதானம் செய்ய்த்தெரியாமல் தவிக்கும் அப்பாவாக கிஷோர். இந்தக்காட்சியில், சிறுவன் சக்தி அபாராமாக நடித்திருக்கிறான்.
கிருஷ்ணா, அலட்டலில்லாத சிறப்பான நடிப்பு!
கனி அம்மா கதாபாத்திரத்தில் நெகிழ்ச்சியான நடிப்பினைக் கொடுத்துள்ளார்.
குழந்தைகளை நல்லபடியாக உருவாக்கும் முயற்சியில், அவர்களை கண்டிக்கும் விதம் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லி, பெற்றோர்களை யோசிக்க வைத்துள்ளனர்
காணாமல் போன குழந்தைகளை தேடும் ஒரு பயணத்தில், ஒரு க்ரைம் எபிசோடையும் அழகாக பொருத்தி திரைக்கதையில் தொய்வில்லாமல் இயக்கியிருக்கிறார், இயக்குநர் ராசு ரஞ்சித். அதோடு, காவல் துறைக்குள் நடக்கும் ஈகோ மோதல்களை, சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்கும்? என்பதை எதிர்பார்க்கவைக்கும் திரைக்கதைக்கு, சிறப்பான பின்னணி இசையமைத்திருக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா.
ஓம் நாராயணின் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பும் தொடரை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறது.
இணையத் தொடர்கள் என்றாலே, போதைப்பொருள் பயண்படுத்துதல், அருவருப்பு, ஆபாசம், திகில், ரத்தம் தெறிக்கும் கொலைகள் என மாறிப்போன தொடர்களிலிருந்து, குழந்தைகளின் உலகத்தையும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பது, பாராட்டத்தக்கது. வரவேற்கத் தக்கது.
பாராசூட் – சேஃப் லேண்டிங்!