இந்தியத் திரையுலகில் சமீபத்தில், ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம், ‘புஷ்பா 2 : தி ரூல்’. புஷ்பா முதல் பாகம் வெளியாகி, தேசிய விருதுகள் உள்ளிட்ட மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் வசூலை வாரிக்குவித்தது. அதன் காரணமாகவே புஷ்பா 2 வெளியாக ஒரு காரணம் ஆகவும் அமைந்தது.
‘புஷ்பா 2 : தி ரூல்’ சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், நரேன், தனஞ்சயா, ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள புஷ்பா 2, தமிழ், மலையாளம், கன்னடா, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது!
‘புஷ்பா 2 : தி ரூல்’ படம் எப்படி இருக்கிறது?
முதல் பாகத்தில்,கடத்தல் செம்மரங்களை வெட்டும் கூலித்தொழிலாளியான புஷ்பா, பல கடத்தல்காரர்களை ஒருங்கிணைத்து அதன் தலைவராக உருவெடுத்தான். இவனை ஒழிக்க போலீஸ் எஸ்.பி.ஃபஹத் ஃபாசில் திட்டமிடுகிறார். புஷ்பாவின் அரசியல் பலத்தால் அது முடியாமல் போகிறது. ‘புஷ்பா 2 : தி ரூல்’ பாகத்தில் புஷ்பா அரசியல்வாதிகளின் ஆதரவால் சர்வதேச அளவில் செல்வாக்கும், முதலமைச்சரை நியமிக்கும் அளவில், அசூரத்தனமாக வளர்ந்து நிற்கிறான். போலீஸ் எஸ்.பி.ஃபஹத் ஃபாசில் அவனை ஒழிக்க கடும் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் நரேனுடன் தனது கணவன் புஷ்பா போட்டோ எடுக்கவேண்டும் என, புஷ்பாவின் மனைவி விரும்புகிறாள். நரேன், ஒரு கடத்தல் காரனுடன் போட்டோ எடுத்து கொள்ள விரும்பவில்லை. இதனால் புஷ்பாவுக்கும் முதலமைச்சர் நரேனுக்கும் பகை உருவாகிரது. புஷ்பா, இன்னொரு அரசியல்வாதியான ராவ் ரமேஷை முதலமைச்சராக்க முடிவு செய்கிறான். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘புஷ்பா 2 : தி ரூல்’.
துளியும், லாஜிக்கில்லாமல் அல்லு அர்ஜூனுக்கான மாஸ், செண்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு பக்கா கமர்ஷியல் படம். ‘புஷ்பா 2 : தி ரூல்’. புஷ்பா மூன்றாம் பாகத்தின் தொடர்ச்சியாக ஜப்பான் நாட்டு துறைமுகத்தில், புஷ்பாவின் அறிமுக சண்டைக்காட்சியுடன் அமர்க்களமாக ஆரம்பமாகிறது. அதன் பிறகு ஆந்திர வனப்பகுதி, வழக்கமான செம்மரக் கடத்தல். அதை தடுக்கும் போலீஸ் எஸ்.பி. என, விறுவிறுப்பாக நகர்கிறது திரைக்கதை.
அல்லு அர்ஜுன் வித்தியாசமான உடல் மொழியுடன் ரசிகர்களை எல்லாக் காட்சிகளிலும் எளிதாக கவர்ந்து விடுகிறார். பெண் வேடமிட்டு நடனமாடுவதிலும், சண்டை செய்வதிலும் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறார். ஸ்டைல், மாஸ், ஆக்ஷன், செண்டிமெண்ட் காட்சிகள் என அனைத்து ஏரியாவிலும் ஆல்ரவுண்டராக வலம் வருகிறார்.
அல்லு அர்ஜுனுக்கு மனைவி, நாயகியாக நடித்திருக்கிறார், ராஷ்மிகா மந்தனா. படத்தின் பாதி வெற்றிக்கு இவரது நடனம் காரணமாக இருக்கிறது. அல்லு அர்ஜூனுடன் இவர் போடும் ஆட்டம், ஜோர். இவரது பாடல், நடன அசைவுக்கு, ரசிகர்கள் மீண்டும் தியேட்டருக்கு வருவார்கள்.
ஃபஹத் ஃபாசில், தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் அதகளம் செய்கிறார். புஷ்பாவை ஒழிக்க முயற்சித்து தோற்றுப்போனாலும் சூப்பர்!
மற்றபடி, அரசியல்வாதி ராவ் ரமேஷ், வில்லன் சுனில், அவரது மனைவி அனுஷ்யா பரத்வாஜ் உள்ளிட்டவர்கள் திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போடவைக்கிறது.
பின்னணி இசை, சாம் சி எஸ். திரைக்கதையின் விறுவிறுப்புக்கு உதவியாக அமைந்திருக்கிறது. காட்சிகளை மேம்படுத்துகிறது.
ஒளிப்பதிவு, (Miroslaw Broze) மிரொஸ்லவ் பிரோசெக். சண்டைப்பயிற்சி, (Peter Hein) பீட்டர் ஹெய்ன் இரண்டுமே படத்திற்கான பலம், சிறப்பு!
ஒரு கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அயிட்டங்களும் பக்காவாக அமைந்திருக்கிறது.
தேவையற்ற சில காட்சிகளை நீக்கினால், ‘புஷ்பா 2 : தி ரூல்’ இன்னும் ஃபயராக இருந்திருக்கும்!