விஷாலின் ‘மதகஜராஜா’ திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு!

Toxic கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி முதன் முறையாக விஷாலுடன் கூட்டணி சேர்ந்து உருவான படம் ‘மதகஜராஜா’. ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2012ல் துவங்கிய இந்தப்படம் 2013லேயே ரிலீஸுக்கு தயாரானாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது பல நல்லவர்களின் கூட்டு முயற்சியால் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜ ராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதில் கதாநாயகிகளாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி இருவரும் நடித்துள்ளனர். அப்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து முழு நீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிவண்ணன் மற்றும் மனோபாலா போன்ற மறைந்த  நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குநர் சுந்தர்சியுடன் அவருக்கு இது முதல் படம். பொங்கலுக்கு படம் வெளியாவதை தொடர்ந்து மதகஜராஜா படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த படம் வெளியாவது குறித்த மகிழ்ச்சியையும் இந்த படம் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது,

“மதகஜராஜா படத்திற்காக மீண்டும் உங்களை சந்திப்பேன் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ஒரு இயக்குனராக அவ்வளவு சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராமல் ஆரம்பித்த ஒரு சந்தோஷமான நிகழ்வு இது. சில தினங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு 12 மணி அளவில் திருப்பூர் சுப்பிரமணியம் எனக்கு போன் செய்தார். இந்நேரத்தில் அழைக்கிறாரே என நினைத்தால் மதகஜராஜா படத்தை பார்க்க தயாரிப்பாளர் அழைத்தார், பல வருடங்கள் ஆகிவிட்டதால் படம் எப்படி இருக்குமோ என்று நினைத்தபடி பார்க்க சென்றால் படம் சூப்பராக இருப்பதாகவும் கூறி படத்தைப் பற்றி அரை மணி நேரம் ரசித்து பேசினார். இந்த முப்பது வருடங்களில் என்னிடம் படங்களின் வசூல் நிலவரங்கள் பற்றி தான் பேசுவாரே தவிர படத்தின் விமர்சனம் பற்றி எதுவும் சொல்ல மாட்டார். அப்படிப்பட்டவர் இந்த படத்தை பற்றி பாராட்டி பேசினார் என்கிறபோது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. அதோடு நிற்காமல் அந்த படம் சம்பந்தப்பட்டவர்களிடம் அவர் பேசி இதோ பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆகப் போகிறது. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த படம் துவங்கிய போது தான் எனக்கு என் குடும்பத்தில் ஒரு நபராக விஷால் கிடைத்தார். அப்போது ல்முரட்டுக்காளை, போக்கிரி ராஜா போன்ற ஒரு ஜனரஞ்சகமான, குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக எடுக்கலாமே என்று ஆசைப்பட்டோம்.

இந்தப் படம் சில பிரச்சினைகளை தாண்டி இப்போது பொங்கல் ரிலீஸ் ஆக வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்ட போது சிறிய தயக்கம் இருந்தது. காரணம் பல வருடங்கள் கழித்து இந்த படம் வருகிறது. படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கும் ? சிலபேர் இப்போது இந்த படத்தை ரிலீஸ் பண்ண வேண்டியது ரொம்ப அவசியமா என்று கிண்டல் செய்வார்களோ என்றெல்லாம் தோன்றியது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் போஸ்டர் வெளியானதுமே சோசியல் மீடியாவில் அவ்வளவு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்தது. இத்தனை வருடங்கள் தாமதம் ஆனாலும் இந்த படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்று நினைக்கும்போது படத்தின் இயக்குனராக எனக்கு சந்தோசம். முதலில், பொங்கல் ரிலீஸ் என்று தான் ஆரம்பித்தோம். அப்போது மிஸ் ஆனாலும் இதோ இந்த பொங்கலுக்கு ரிலீஸாகிறது. பொங்கலுக்கான ஒரு கொண்டாட்டமான படமாகத்தான் இது இருக்கும்.

மேலும் சென்டிமென்டாக என்னுடைய குருநாதர் மணிவண்ணன் கடைசியாக நடித்த படம் இது. அவர் நிச்சயமாக மேலிருந்து என்னை ஆசிர்வாதம் செய்வார் என நினைக்கிறேன். அதேபோல மறைந்த நடிகர் மனோபாலா இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும், ரிலீஸானால் என்னுடைய ரேஞ்சே வேற என்று சொல்லிக் கொண்டிருப்பார். குறிப்பாக இந்த படத்தில் விஷால், சந்தானம், மனோபாலா மூவரும் இடம் பெறும் ஒரு 15 நிமிட காட்சி இருக்கிறது. என்னுடைய படங்களிலேயே என் ஃபேவரைட் காமெடி காட்சி என்றால் இதுதான் என்று சொல்வேன்.

ஆரம்பத்தில் எனக்கும் விஷாலுக்கும் அவ்வளவு பழக்கமில்லை. குஷ்புவுக்கு தான் அவர் நண்பராக இருந்தார். அந்த சமயத்தில் அவருக்காக வேறு ஒரு ஸ்கிரிப்ட்டுடன் அவரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றிருந்தோம் எங்களை வரச் சொன்னவர் நாங்கள் சென்ற அதே நேரத்தில் வெளியே கிளம்பி போய்விட்டார். எனக்கு அப்போது அவர் மீது மிகப்பெரிய கோபம் வந்துவிட்டது. அவர் முகத்தில் இனி முழிக்கவே கூடாது என்று நினைத்தேன். இரண்டு மாதம் கழித்து ஒரு பொதுவான பங்ஷனில் கலந்து கொண்டபோது அவரும் வந்திருந்தார். அவரை பார்க்காதவாறு நான் ஒதுங்கி சென்றேன். ஆனால் விடாமல் என்னை தேடி வந்து அவராகவே பேசினார். அன்றைய தினம் ஒரு மருத்துவ வேலை காரணமாக அவசரமாக செல்ல வேண்டியதாகிவிட்டது,. உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, நீங்கள் எப்போது சொன்னாலும் நான் உங்களை தேடி வந்து கதை கேட்கிறேன் என்று கூறினார், அப்போது ஆரம்பித்த நட்பு இப்போது வரை தொடர்கிறது. பழகப்பழக தான் அவர் ஒரு நல்ல ஆத்மா என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. கார்த்திக் முத்துராமன் சாரை என் அண்ணன் என்று சொன்னால் எனது தம்பி விஷால் என்பேன்.

இந்த படத்தில் விஷாலை ஒரு பாடல் பாட வைத்திருக்கிறோம். அதற்காக அவர் ஜானகி அம்மாவை விட ராகத்தை இழுத்து ஒரு ஆலாபனை எல்லாம் செய்திருக்கிறார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பாடி முடித்ததும் விஷால் இப்போது வரை தன்னை ஒரு சீரியஸான பாடகராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். சார் இந்த படம் வெளியானால் எனக்கு கட்டாயம் பாடகருக்கான விருது கிடைக்கும் பாருங்கள் என்று சொல்லி வருகிறார்.” என்றார்.