ரவி மோகன் (ஜெயம் ரவி), நித்யா மேனன் இருவரும் நாயகன் நாயகியாக நடித்திருக்க, அவர்களுடன் வினய், யோகிபாபு, T.J.பானு, ‘இயக்குநர்’ லால், ஜான் கோக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், ‘பாடகர்’ மனோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுதி, இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்க, கவேமிக் U ஆரி ஒளிப்பதிவு செய்திருக்க படத் தொகுப்பினை லாரன்ஸ் கிஷோர் செய்துள்ளார்.
ரவி மோகன், J பானு இருவரும் காதலர்கள். திருமணம் குறித்த பேச்சு வரும்போது இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள்.
ஜான் கோக்கன் – நித்யா மேனன் இருவரும் தம்பதிகள். ஜான் கோக்கன் மற்றொரு பெண்ணுடன் உறவில் இருப்பதால், நித்யா மேனன் டைவர்ஸ் செய்கிறார். இந்த சம்பவம் அனைத்து ஆண்களின் மீது கோபத்தை உருவாக்குகிறது.
ரவி மோகன், வினய், யோகிபாபு மூவரும் நண்பர்கள். இவர்களில் வினய் ஒரு கே (Gay). விந்து தானம் செய்ய விரும்புகிறார். அவர் செல்லும்போது ரவி மோகனும், யோகிபாபுவும் செல்கின்றனர். அவர்களும் விந்து தானம் செய்கின்றனர்.
ஜான் கோக்கனை பிரிந்த நித்யா மேனன் செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்புகிறார். அப்படியே விந்து தானம் பெற்ற கருவினை சுமக்கிறார். இந்நிலையில், தன் கருவுக்கு விந்து தானம் செய்தது யார்? என தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்படுகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது. என்பது தான், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் பாலச்சந்தர் பாணியிலான, இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் தைரியமான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
நாயகி நித்யா மேனனுக்கு அழுத்தமான கதாபாத்திரம். இயல்பாக கையாண்டு வெகுஜன ரசிகர்களை ஈர்த்து விடுகிறார். சிங்கிள் மதராக வரும் காட்சிகளிலும், தான் கர்ப்பமுற்றிருப்பதை பெற்றோரிடம் தெரிவிக்கும் காட்சிகளிலும், ரவி மோகனுடனான காதல் காட்சிகளிலும் இயல்பான அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது.
நாயகன் ரவி மோகன். ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான இளைஞனாக வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறார். கிளைமாக்ஸ் காட்சியில், நித்யா மேனனுடன் சேரத்துடிக்கும் காட்சிகள் சூப்பர்.
ரவி மோகனின் காதலியாக T.J.பானு. கதாபாத்திரத்திற்கேற்ற சரியான தேர்வு.
வினய், வித்தியாசமாக, துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
யோகி பாபு, சிரிக்க வைக்கிறார்.
டிஜே பானு, லால், பாடகர் மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி என அனைவரும் அளவான நடிப்ப்பின் மூலமாக திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக, திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறது..
ஒளிப்பதிவாளர் கவேமிக் U ஆரியின் ஒளிப்பதிவு படத்தின் பலம். மொத்த படத்திற்கும் சிறப்பு சேர்த்திருக்கிறது.
தன்பாலின உறவின் மூலமாக திருமணம், திருமணமில்லாமல் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல், உறவுகளுக்குள்ளான முக்கியத்துவம் என முற்போக்கு காட்சியமைப்போடு திரைப்படத்தினை கொடுத்திருக்கிறார், இயக்குநர் கிருத்திகா உதயநிதி.
வெகுஜன மக்கள் எல்லோராலும் இந்தப்படத்தின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்றே ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் பலவீனம்.
காதலிக்க நேரமில்லை – பாலச்சந்தர் பாணியிலான தைரியமான படைப்பு!