‘பாட்டல் ராதா’ –  விமர்சனம்!

சாராயத்தொழில் மூலம் கிடைக்கும் வருவாய் இல்லாவிட்டால், அரசை நடத்த முடியாது. என்று ஆளும் கட்சிகளும், ஆண்ட கட்சிகளும் நம்பிக்கொண்டிருக்கும் சூழலில், வருவாயை பெருக்க வேறு வழியைத்தேடாமல் இருக்கும் அரசுகளிடமிருந்து, சாமானியர் தங்களது வாழ்வாதாரத்தை காத்துக்கொள்வதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமே, ‘பாட்டல் ராதா.’

குரு சோமசுந்தரம், ஒரு கட்டுமானத் தொழிலாளர். அதிலும் ‘டைல்ஸ்’ ஒட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவர். தனது காதலி சஞ்சனா நடராஜனை வாழ்க்கைத்துணையாக கரம்பிடிக்கிறார். இரண்டு குழந்தைகளுடன் அழகாக செல்கிறது, அவரது வாழ்க்கை.  இந்நிலையில், அரசு நடத்தும் ‘டாஸ்மாக்’ சென்று குடிக்கும் பழக்கம் அவருக்கு ஏற்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தில் இருந்து வந்த சந்தோஷம், நிம்மதி அனைத்தும் தொலைகிறது. வேலைக்கு செல்லாமல், எந்த நேரமும் குடித்து விட்டு சுய நினைவை இழந்து சுற்றி வருகிறார். குடும்பம் கடும் வறுமையை சந்திக்கிறது. அவரது தெருவில் வசிப்பவர்கள் குரு சோமசுந்தரத்தை ‘பாட்டல் ராதா’ என பெயரிட்டு அழைக்கும் அளவிற்கு எந்நேரமும் பாட்டிலும் கையுமாக இருக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதை கலகலப்பாகவும், விழிப்புணர்வினை ஏற்படுத்தும் திரைக்கதை மூலம், தொகுத்தளித்திருக்கிறார் இயக்குநர் தினகரன் சிவலிங்கம்.

கதையின் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், எதார்த்தமான நடிப்பின் மூலம் ‘பாட்டல் ராதா’ வாக படம் முழுவதும் வலம் வருகிறார். குடிப்பழக்கத்தினால் தனது திறமைகளை மறந்து, மரியாதைகளை இழந்து, குடியை விடமுடியாமல் தவிக்கும் காட்சிகளிலும் குடிகாரனை கண்முன் நிறுத்துகிறார். அவரது உடல் மொழியின் மூலம் பாட்டல் ராதா கதாபாத்திரத்தை கச்சிதமாக உருவகப்படுத்தியுள்ளார். போதை மறு வாழ்வு மைய்யத்தில் ஜான் விஜய்யிடம் பம்மும் காட்சிகள் சூப்பர்.

பாட்டல் ராதா கதாபாத்திரத்திற்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார், குரு சோமசுந்தரத்தின் மனைவியாக நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன். குடிகார கணவனிடமிருந்து தன்னை மீட்பதற்கு இவர் முயற்சிக்கும் பல காட்சிகளில் இவரது நடிப்பு பளிச்சிடுவதோடு, பார்வையாளர்களை பரிதாபப்பட வைத்து விடுகிறது.

குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன் இவர்கள் இருவரை விட, ஜான் விஜய் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கு அதிகமான டைலாக்குகள் இல்லை. ஆனால், பார்வைகளினாலேயே மிரட்டியிருக்கிறார். போதை மறுவாழ்வு மைய்யம் நடத்தி வரும் அவர், தரையில் உட்கார்ந்திருக்கும் குரு சோமசுந்தரத்தை, தனது மிரட்டும் விழிகளால் அசால்ட்டாக எழுந்திருக்கச் சொல்லும் ஒரு காட்சியே, இவரது நடிப்புக்கு சாட்சியாக நிற்கிறது.

முக்கிய கதாபாத்திரங்களான இவர்கள் தவிர, ‘லொள்ளு சபா’ மாறன் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.

மற்றபடி ஆண்டனி, பாரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ்.கருணா பிரசாத், சுஹாசினி சஞ்சீவ், ஓவியர் சோவ்.செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், காலா குமார், அன்பரசி ஆகியோர் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜியின் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை இரண்டும் படத்தின் கதைக்கேற்கேற்றபடி அமைந்திருக்கிறது.

இன்றைய சமுதாயத்திற்காக, தக்க தருணத்தில் பேசப்பட வேண்டிய கதை. அதை கொஞ்சம் ஜாலியாக, விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக திரைக்கதை அமைத்துள்ளார், இயக்குநர் தினகரன் சிவலிங்கம். இருந்தாலும், இதில் அரசின் பங்கு என்ன? என்பதை தவிர்த்திருப்பதும்,  சஞ்சனா நடராஜன் இன்னொரு ஆணுடனான தொடர்பு?! பற்றி தெளிவில்லாமல் இருப்பதும் பெரும் குறையாக இருக்கிறது.

மற்றபடி, ‘பாட்டல் ராதா’ இளைஞர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்!