‘ரிங் ரிங்’ –  விமர்சனம்!

விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா உள்ளிட்டோரது நடிப்பினில், வெளிவந்திருக்கும் திரைப்படம்,ரிங் ரிங். எழுதி இயக்கியுள்ளார் சக்திவேல்.

ஒளிப்பதிவு பிரசாந்த் டி எஃப் டெக், இசை வசந்த் இசைப்பேட்டை, எடிட்டிங் பிகே , கலை இயக்கம் தினேஷ் மோகன், பாடல்கள் பா. ஹரிஹரன்,தயாரிப்பு ஜெகன் நாராயணன்.

நான்கு நண்பர்கள், சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில், நண்பர் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டியில்,விவேக் பிரசன்னா -ஸ்வயம் சித்தா,டேனியல் அன்னி போப் – ஜமுனா , பிரவீன் ராஜா – சாக்ஷிஅகர்வால், அர்ஜுனன் – சஹானா என, தம்பதிகள் சகிதமாக சந்திக்கின்றனர். அப்போது நடக்கும் ஒரு நிகழ்வினில் இவர்களது அந்தரங்கம் வெளிப்பட்டு, சிக்கல்கள் உருவாகிறது. அவைகள் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பது தான், ரிங் ரிங் திரைப்படத்தின் கதை.

நாம் நேசிக்கிறவர்களின் சந்தோஷத்திற்காக, சில ரகசியங்களை மறைப்பதில் தவறில்லை. என்பதாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார், இயக்குநர் சக்திவேல்.

ரிங் ரிங் படத்தில், தியாகு பாத்திரத்தில் விவேக் பிரசன்னா,  பூஜாவாக சாக்ஷி அகர்வால், கதிராக டேனியல்,சிவாவாக பிரவீன் ராஜா, அர்ஜுனாக அர்ஜுனன்,சுயமாக ஸ்வயம் சித்தா, இந்துவாக சஹானா, ஜமுனாவாக ஜமுனா  நடித்திருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களின் சித்தரிப்பு சரியாக இருந்தாலும் இவர்கள் நடிக்கும் ஒவ்வொரு காட்சியுமே நடிப்பு! என்பது அப்பட்டமாக இருக்கிறது.

விதி விலக்காக, விவேக் பிரசன்னா – ஸ்வயம் ஜோடி நிறைய நடிப்பு தருணங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

டேனி, தனது வழக்கமான நடிப்பினால் ஓவர் ஆக்டிங். ஆனால், இன்னொரு பெண்ணுடனான தொடர்பு தெரிந்து காதலியிடம்  மாட்டிக் கொள்ளும் போது போதையில் செஞ்சிட்டேன் என்று விழி பிதுங்கி சமாளித்து உளறும் டேனியல், கலகலப்பினை உருவாக்கியிருக்கிறார்.

பிரவீன் ராஜா – சாக்ஷி அகர்வாலுக்குள் நடக்கும் உரையாடலும், அவர்களுக்குள் விழும் சந்தேக முடிச்சு அவிழ்வதும் நல்லதொரு உணர்வு வெளிப்பாடுகள்.அர்ஜுனன் – சஹானா இருவருக்குள் நிலவும்  புரிதலின்மையின் வெளிப்பாடுகளை நன்றாகவே நடிப்பில் காட்டியுள்ளனர்.குறிப்பாக அர்ஜுனன் அதிகம் பேசாமலே விழிகளாலே உணர்வுகளைக் கடத்தி உள்ளார்.

ஒரே லொகேஷன். ஒரே மாதிரியான பெரும்பாலான காட்சிகள், கதாபாத்திரங்களின் உரையாடல்கள் சலிப்பினை உருவாக்குகிறது. இடைவேள காட்சியின் போது அடுத்து என்ன என்ற, எதிர்பார்ப்பினை உருவாக்குகிறது. அதன் பிறகும் காட்சிகள் சற்று வேகம் எடுக்கிறது. ஜோடிகளின் அந்தரங்கமே திரைக்கதையின் விறுவிறுப்புகளுக்கு காரணமாக இருக்கிறது. ஜோடிகளின் ஒவ்வொரு ரகசியங்கள் வெளியே வரும்போது, திரைக்கதையில் கலகலப்பும் பரபரப்பும் உருவாகின்றன.

படத்திற்கு ஏற்ற துல்லியமான வண்ணமயமான ஒளிப்பதிவு செய்துள்ளார், ஒளிப்பதிவாளர் பிரசாத்.

கதைக்குப் பொருத்தமான பின்னணி இசை வழங்கி இருக்கிறார், இசையமைப்பாளர், வசந்த் இசைப்பேட்டை.

தம்பதிகள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை, எந்தவிதமாக அணுக வேண்டும் என்பதை அழகாக கொடுத்திருக்கிறார், இயக்குநர் இயக்குநர் சக்திவேல்.