‘விடாமுயற்சி’ புகழ் கணேஷ் சரவணன் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது!

சமீபத்திய ஆண்டுகளில் மீடியாத் துறையில் இருந்து திறமை மிக்க பல இளம் இயக்குநர்கள் கோலிவுட்டில் வந்திருக்கின்றனர். அவர்களின் புதிய கதை சொல்லல் முறையும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான ஜாபர். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில், ’இராவணக் கோட்டம்’ மற்றும் நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கணேஷ் சரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை அஃப்ரிஞ்ச் தயாரிக்கிறார். கதாநாயகியாக ஆயிஷா (பிக்பாஸ் சீசன் 6 மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெப்சீரிஸ் ‘உப்புப்புளி காரம்’ புகழ்) நடிக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி புகழ் எம். புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லன் மற்றும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

காமெடி திரில்லர் திரைப்படமான இதில் பல திருப்பங்கள் உண்டு. திருமணத்திற்குப் பிறகு தனது முன்னாள் காதலியை ஒருவன் சந்திக்கும் போது, அந்த நாள் முழுவதும் அவர்களுக்கு ஒரு பயங்கரமான ரோலர்-கோஸ்டர் ரைடாக மாறுகிறது. அந்த நாளில் நடக்கும் திருப்பங்கள் தான் கதை.

இப்படத்திற்கு சி சத்யா இசையமைக்கிறார். படத்தொகுப்பாளராக ஸ்ரீகாந்த் பணியாற்றுகிறார். வைசாக் மற்றும் மோகன்ராஜா பாடல் எழுதுகின்றனர். சதீஷ் குமார் சுந்தரராஜன் ஒளிப்பதிவு செய்கிறார், ஆக்‌ஷன் சந்தோஷ் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றுகிறார். பாபு கலை இயக்குநராக பணிபுரிகிறார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.