நாக சைதன்யா, சாய் பல்லவி, பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், தண்டேல்.
2018-ம் ஆண்டு குஜராத் பகுதியில், ஆந்திர மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, வழி தவறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றவர்கள், அந்த ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். அந்த உண்மை சம்பவத்தினை கதையாக எழுதிய கார்த்திக் தீடாவின் கதையைத் தான் ‘தண்டேல்’ என்ற பெயரில் எழுதி இயக்கியிருக்கிறார், இயக்குநர் சந்து மொண்டேட்டி ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் நாக சைதன்யாவுக்கு தண்டேல் வெற்றியைக்கொடுத்ததா, இல்லையா? பார்க்கலாம்.
தண்டேல், என்றால் மீன் பிடிக்குழுவின் தலைவன் என்று பொருள்.
நாக சைதன்யாவின் அப்பாவிற்கு பிறகு, நாக சைதன்யா மீன் பிடி குழுவினரை வழி நடத்தி செல்லும் பொறுப்பினை ஏற்கிறார். இவரது தலைமையில், வருடத்தில் ஒன்பது மாதங்கள் மீன் பிடிக்கச் செல்கின்றனர். 3 மாதம் விடுமுறை. இந்த விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கின்றனர். நாக சைதன்யா தன்னுடைய காதலி சாய்பல்லவியுடன் சந்தோஷமாக பொழுதினை கழிக்கின்றார்.
மீனவர்களின் வாழ்வில் நிச்சயத்தன்மை இல்லாத சூழ்நிலை இருப்பதால், சாய் பல்லவிக்கு, நாக சைதன்யா மீன் பிடி தொழில் செய்வது பிடிக்கவில்லை. இதனால், மீன்பிடி தொழிலை கைவிடுமாறு பலவிதங்களில் சாய்பல்லவி, நாக சைதன்யாவை வற்புறுத்தி வருகிறார். அதற்கு நாக சைதன்யா மறுத்துவிடுகிறார். சாய் பல்லவியின் அப்பா, மீனவராக இருந்தாலும் நாக சைதன்யாவிற்கு பெண் கொடுக்க தயங்குகிறார்.
நாக சைதன்யா குழுவினர், வழக்கம் போல் குஜராத் கடலில் மீன் பிடித்து வருகின்றனர். அப்போது வீசும் புயல் காற்றினால், அவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிடுகின்றனர். இதனால், பாகிஸ்தான் கடற்படையினர், நாக சைதன்யா குழுவினரை கைது செய்து, கராச்சி சிறையில் அடைக்கின்றனர்.
சாய் பல்லவி, தன் பேச்சை மீறி, நாக சைதன்யா கடலுக்கு சென்றதால், அப்பாவின் விருப்பத்தின் பேரில் கருணாகரனை மணந்து கொள்ளச் சம்மதிக்கிறார். திருமண நிச்சயதார்த்தமும் நடக்கிறது.
அதே நேரத்தில், நாக சைதன்யா குழுவினர் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட விபரம் நாக சைதன்யா வசிக்கும் மீனவ கிராமத்திற்கு தெரிய வருகிறது. சாய் பல்லவி உட்பட எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.
நாக சைதன்யா குழுவினர் விடுதல செய்யப்பட்டார்களா? சாய் பல்லவி திருமணம் யாருடன் நடந்தது? என்பது தான் தண்டேல் படத்தின் கதை.
படத்தின் முதல் பாதி, நாக சைதன்யாவிற்கும் சாய் பல்லவிக்குமான காதல், ஆடல் பாடல்களாக செல்கிறது.
நாக சைதன்யா, தன்னால் முடிந்த அளவிற்கு மீனவ இளைஞராக மாறியிருக்கிறார். சாய் பல்லவியுடன் ரொமேன்ஸ் செய்யும் காட்சிகள் ரசனையாக இருக்கின்றன. பாகிஸ்தான் சிறையில் இந்திய தேசியக்கொடிகாக செய்யும் செயல்கள் கை தட்டி ஆரவாரம் செய்ய வைக்கின்றது. சாய் பல்லவி பேச மறுக்கும் காட்சிகளில் அவரிடம் பேசக் கெஞ்சும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சாய் பல்லவி, தன்னை அற்புதமாக கதாபாத்திரத்தில் பொருத்திக் கொண்டுள்ளார். காதல், சந்தோஷம், துக்கம் என அனைத்து முகபாவனைகளையும் காட்டி ரசிகர்களை எளிதில் ஈர்த்து விடுகிறார். ரொமான்ஸ் காட்டுவதிலும், கோபம் காட்டுவதிலும் சிறப்பான நடிப்பினை வெளிக்காட்டியிருக்கிறார்.
பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிரித்விராஜ், மைம் கோபி ஆகியோறும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பினை கொடுத்துள்ளனர்.
படத்தின் பலமாக ஒளிப்பதிவு இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஷ்யாம் தத் காட்சிகளை அழகாக படமாக்கியிருப்பதோடு, பாடல் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் பலவீனமாக கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. கடலில் புயல் காட்சிகள் கொடுமை
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
எமோஷலான கதையில், சிறிதும் எமோஷனல் இல்லாமல், முழுக்க முழுக்க சினிமாத்தனமாகவும், நாயகனை முன்னிலைப்படுத்தியும் சொல்லியிருப்பது, படத்தின் பெரும் பலவீனம்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி, தூக்கலான கமர்ஷியல் மசாலாவில், நாக சைதன்யாவை ஏமாற்றியதோடு, ரசிகர்களையும் ஏமாற்றியிருக்கிறார்.