‘தினசரி’  – விமர்சனம்!

ஸ்ரீகாந்த், மிடில் கிளாஸ் வாழ்க்கையிலிருந்து எப்படியாவது உயர் நிலையை அடைய விரும்பும் ஐடி ஊழியர். தன்னை விட அதிகமாக சம்பாரிக்கும் பெண்ணை திருமணம் செய்ய ஏகப்பட்ட நிபந்தனையோடு அவரது பெற்றோர் எம்.எஸ் பாஸ்கர், மீரா கிருஷ்ணன் ஆகியோர் பெண் தேடி வருகின்றனர். ஜோசியர் அறிவுரையின் படி, விரைவில் திருமணம் செய்ய வேண்டிய சூழலில், அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண்ணான சிந்தியா லூர்தை, ஶ்ரீகாந்திடம் சில பொய்களை சொல்லி அவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு, ஶ்ரீகாந்தின் நேர் எதிர் குணம் கொண்ட சிந்தியாவுடன் வாழ்வது பிரச்சனையில் முடிகிறது. இதன் பின்னர் என்ன நடந்தது? சொல்லும் படமே, தினசரி.

ஶ்ரீகாந்த், அவரது கதாபாத்திரத்திற்கேற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார். நடுத்தர குடும்பத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று அவர் தவிக்கும் காட்சியிலும், சிட் ஃபண்ட் அதிபர் ராதாரவியிடம் கெஞ்சும் காட்சியிலும், தனது தவறினை உணர்ந்து குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரி நிற்கும் காட்சியிலும், கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

சிந்தியா லூர்துவின் தோற்றம், அவரது அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நடிப்பினையும் குறை சொல்ல முடியாது.

ஸ்ரீகாந்தின் அப்பா, அம்மாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன், அக்காவாக நடித்திருக்கும் வினோதினி, நண்பராக நடித்திருக்கும் பிரேம்ஜி மற்றும் கே.பி.ஒய்.சரத், சாம்ஸ், சாந்தினி தமிழரசன், ராதாரவி என அனைவருமெ அவர்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசை, ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு ஓகே.

எழுதி, இயக்கியிருக்கும் ஜி.சங்கர், இருப்பதை கொண்டு நிம்மதியான வாழ்க்கையை வாழாலாம். என  எம் எஸ் பாஸ்கர் மூலமாக, அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில், ’தினசரி’ ஆடம்பர வாழ்க்கையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கன படம்.