‘Cine craft productions’ நிறுவனம் தயாரித்து, இயக்குநர் சாய் ராஜகோபால் எழுதி, இயக்கியிருக்கும் படம், ‘ஒத்த ஓட்டு முத்தையா’. இந்தப் படத்தில் கவுண்டமணி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவர்களுடன் சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், C.ரங்கநாதன், வாசன் கார்த்தி, அன்பு மயில்சாமி, கஜேஷ், பிந்து, சாய் தான்யா, அபர்ணா, ராஜேஸ்வரி, சிங்கமுத்து, தாரணி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, பயில்வான் ரங்கநாதன், டாக்டர் காயத்ரி, லேகாஶ்ரீ, படத்தின் இயக்குநர் சாய் ராஜகோபால் டி.எஸ்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.
‘சித்தப்பா பெரியப்பா மக்கள் கட்சி’ யின் மாவட்டச் செயலாளர் ஆன கவுண்டமணி, ஒரு சட்டமன்ற தேர்தலில் ஒரே ஓட்டு மட்டும் வாங்கியதால், அவரை எல்லோரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என அழைத்து வருகின்றனர். கவுண்டமணிக்கு மூன்று தங்கைகள். அவர்களுக்கு ஒரே குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்.
அண்ணனின் விருப்பப்படியே தங்கை ஒருவர் மூன்று சகோதரர்கள் உள்ள குடும்பத்தில் உள்ள ஒருவரை காதலிக்கிறார். சில நாட்கள் சென்ற பிறகே அது உண்மை இல்லை, எனத் தெரிய வருகிறது. மற்ற இரண்டு சகோதரிகளும் வேறு நபர்களை விரும்புகின்றனர். இதனால், சகோதரிகள் மூவரும், கவுண்டமணியிடம் பொய் சொல்லி பெண் பார்க்க ஏற்பாடு செய்கின்றனர்.
இந்நிலையில், கவுண்டமணி ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மாப்பிள்ளைகள் தேடி வருவது சிங்கமுத்துக்கு தெரிய வருகிறது. திருட்டு தொழிலையே குலத்தொழிலாக செய்து வரும் அவர், தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் கவுண்டமணி வீட்டிற்கு வருகிறார்.
அதே சமயத்தில், சகோதரிகள் காதலித்துக் கொண்டிருக்கும் மூவரும், டி எஸ் கே தலைமையில் கவுண்டமணியின் வீட்டிற்கு வருகின்றனர்.
இதனிடையே, சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிறது. அதில், ‘சித்தப்பா பெரியப்பா மக்கள் கட்சி’ கட்சியின் சார்பில் கவுண்டமணியின் டிரைவர், யோகிபாபுவை நிறுத்த முடிவு செய்யப்படுகிறது. இதனால், கட்சித் தலைமைக்கும் கவுண்டமணிக்கும் இடையே பிரச்சனை உருவாகி, கவுண்டமணி தனித்து போட்டியிட முடிவு செய்கிறார். இந்தப்போட்டியில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ ஜெயித்தாரா, இல்லையா? சகோதரிகளின் காதல், கவுண்டமணியின் ஒரே வீட்டில் பெண் கொடுக்கும் திட்டம் என்ன ஆனது? என்பது தான், ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் கதை.
சமகால அரசியலில் நடந்த, நடக்கும் அத்தனை கேலிக்கூத்துக்களையும், நக்கலும் நையாண்டியுமாக காட்சிப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் சாய் ராஜகோபால். அவர் பாரபட்சம் இல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் நக்கலடித்திருப்பது தான் சிறப்பு. ஆனால், இதை கவுண்டமணியின் துணையுடன் சொல்ல முயற்சித்திருப்பது தான் சோதனை. கவுண்டமணியின் மிகப் பெரிய பலமே, அவரது டைலாக் டெலிவரி தான். கத்திப் பேசி அவர் அடிக்கும் டைலாக் தான் ஹைலைட்! இதில் பேசுவதற்கே மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். அதனால், பல காட்சிகள் ரசிக்க முடியாமல் போகிறது. இருந்தாலும், நகைச்சுவை அரசன் கவுண்டமணியை அவரது ரசிகர்கள் மீண்டும் திரையில் பார்ப்பதே சந்தோஷம் தான்.
கவுண்டமணி தான் கைவிட்டு விட்டார். யோகிபாபுவாது சிரிக்க வைப்பார் என்று எதிர்பார்த்தால் அவரும் ஏமாற்றி விட்டார்.
டி எஸ் ஆர், காயத்ரி இருவரும் சிரிக்க வைக்கின்றனர். சிங்கமுத்து கோஷ்டியினரும் முடிந்த அளவு சிரிக்க வைக்கின்றனர்.
கவுண்டமணியின் வீட்டிற்குள் நுழையும் சிங்கமுத்து – தாரணி கோஷ்டியையும் டி எஸ் ஆர் – காயத்ரி கோஷ்டியையும் இன்னும் பயண் படுத்தியிருக்கலாம். காமெடிக்காட்சிகளுக்கு அதிக இடம் இருந்தும் அதை கோட்டை விட்டுள்ளனர்.
மற்றபடி, செயின்ட் ஜார்ஜ் கோட்டை முதல் கூவத்தூர் வரை, நடந்த அரசியல் அவலங்களை பிரித்து மேய்ந்துள்ளனர். விழுந்து, விழுந்து சிரிக்க வேண்டிய ஒரு படத்தை, சாதரணமாக கொடுத்துள்ளனர்.
ஒத்த ஓட்டு முத்தையா – ‘ஒத்த ஓட்டு’, அதுவும் செல்லாத ஓட்டு!