அரசுத் துறையில், லஞ்ச, லாவண்யங்கள் மலிந்து கிடக்கும் ஒரு இடம் சார் பதிவாளர் அலுவலகம். அதில், மிகவும் நேர்மையான அதிகாரி சமுத்திரக்கனி. சமுத்திரக்கனி, பிரமோதினி இவர்களுடைய ஒரே மகன், தனராஜ் கொரனானி.
சமுத்திரக்கனி, தன்னைப் போலவே தனது மகன் தனராஜ் கொரனானியும் நேர்மையாக இருக்க வேண்டும் என கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். ஆனால் அவரது மகன், சிறு வயதில் இருந்தே சரியாக படிக்காமல், சிகரெட் பிடிப்பது, சூதாட்டம் என்று அனைத்து கெட்டப் பழக்கங்களுடன் வளர்ந்து நிற்கிறார். மகன் அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் சமுத்திரக்கனி, என்றாவது ஒரு நாள் நல் வழிக்கு மகன் திருந்துவான் என நினைக்கிறார். காலமும் நேரமும் சென்றாலும் மகன் தனராஜ் கொரனானி, திருந்தியபாடில்லை. ஒரு கட்டத்தில் அப்பாவை கொலை செய்ய, மகன் முயற்சிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்த்து என்பது தான், ‘ராமம் ராகவம்’.
சமுத்திரக்கனி, எல்லா அப்பாக்களிடமும் காணப்படும் அதே அன்பு, கண்டிப்பினை நடிப்பின் மூலம் நன்றாக வெளிப்படுத்துகிறார். மகனின் மீது அன்பு கொண்டு, பாசத்தை காட்டுவதற்கு தடுமாறும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நல்ல நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கலாம். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில், இவருக்கும், ஹரீஷ் உத்தமனுக்கும் இடையே நடக்கும் உரையாடலில், நன்றாக நடித்திருக்க வேண்டிய சமுத்திரக்கனி, தடுமாறியிருக்கிறார். அதே காட்சியில், ஹரீஷ் உத்தமன் மிகச்சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார். நடித்தவர்களை வரிசை படுத்தினால், முதலில் இடம் பெறுவது, ஹரீஷ் உத்தமன் மட்டுமே.
நாயகனாக நடித்திருக்கும் தனராஜ் கொரனானி, கண்டிப்பான அன்பு காட்டும், அப்பாக்களின் மனதை புரிந்துக்கொள்ளாத இளைஞராக, நல்ல நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். க்ளைமாக்ஸில், இவரும் ஹரீஷ் உத்தமனும் பேசும் வசனங்கள் வீரியமானவை, சிறப்பானவை.
சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் பிரமோதினி, கதாநாயகியாக நடித்திருக்கும் மோக்ஷா இருவரும் ஓகேவான நடிப்பினை கொடுத்துள்ளனர்.
ஹனுமன் பக்தராக சுனில். ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் தனது இருப்பினை பதிவு செய்கிறார்.
ஹரீஷ் உத்தமனுக்கு முக்கியமான கதாபாத்திரம். அதை லாவகமாக பயன்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில், எளிதில் இடம் பிடித்து விடுகிறார். லாரியில் அமர்ந்தபடியிருக்கும் போது சமுத்திரக்கனி அவரிடம் பேசும் காட்சியில், பதறியபடியே லுங்கியை சரி செய்துவிட்டு பேசும் போது மிகச்சிறப்பு.
சத்யா, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்விராஜ் ஆகியோர் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை ஓகே.
எழுதி இயக்கியிருக்கும் தனராஜ் கொரனானி, அப்பா – மகன் உறவில் இதுவரை சொல்லாத ஒரு விசயத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார். அதை இன்னும் கொஞ்சம் சிறப்பாக் சொல்லியிருக்கலாம்.
மொத்தத்தில், ‘ராமம் ராகவம்’ – அப்பா, மகன் இருவருக்குமான படம்!