‘வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்’ சார்பில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம், அகத்தியா. இப்படத்தினை ஸ்ட்ரா பெர்ரி, ஆருத்ரா படங்களுக்குப் பிறகு, தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பா.விஜய் எழுதி இயக்கியிருக்கிறார்.
அகத்தியா திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன் , ராஷி கண்ணா , ஷாரா, இந்துஜா, ராதாரவி, நிழல்கள் ரவி , எட்வர்ட் சோனென்ப்ளிக், மெட்டில்டா, ரெடின் கிங்ஸ்லி, கின்னஸ் பக்ரு, அபிராமி, சார்லி, ரோகினி , யோகி பாபு, செந்தில், பூர்ணிமா பாக்யராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைத்துறையில் கலை இயக்குநராக, பணிபுரிய ஆசைப்படுகிறார் (ஜீவா) அகத்தியா. இதற்கு துணையாக இருந்து வருகிறார், அவரது (ராஷி கண்ணா) காதலி வீணா. கலை இயக்குநராக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், தயாரிப்பாளர் ஒருவருக்கு தனது சொந்த செலவிலேயே அரங்கம் அமைத்து கொடுக்கிறார். ஒரு நாள், ஷூட்டிங் நடப்பதற்கு பரபரப்பாக நடந்து வரும் நேரத்தில், அந்தப்படத்தின் நாயகனும், நாயகியும் திருமணம் செய்து கொண்டு தலை மறைவாகின்றனர். படம் பாதியில் நின்று விடுகிறது. அகத்தியா, செலவு செய்த பணத்தை எப்படி மீட்பது என்று கடும் குழப்பத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் வீணா, அந்த அரங்கினை அப்படியே, திகிலூட்டும் பேய் மாளிகையாக மற்றி, மக்களின் பார்வைக்கு வைத்து கட்டணம் வசூலித்து அதன் மூலம் செலவு செய்த பணத்தினை திரும்ப எடுக்கலாம் என கூறுகிறார். அப்படியே செய்கின்றனர்.
பேய் மாளிகையை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். வசூல் கொட்டுகிறது. ஒரு நாள் அந்த ஏரியாவின் கவுன்சிலரின் தம்பி, தனது காதலியுடன் வருகிறார். மளிகைக்குள் நுழைந்தவர், காணாமல் போகிறார். பொது மக்களிடம் பீதி ஏற்படுகிறது. அகத்தியா, காணாமல் போனவரை சில போராட்டங்களுக்கு பிறகு மீட்கிறார்.
அகத்தியா உண்மையிலேயே அந்த மாளிகக்குள் அமானுஷ்யங்கள் இருப்பதாக உணருகிறார். அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, அவரும் வீணாவும் முற்படுகின்றனர். அதன் பின்னர், அந்த பங்களவினுள் இருக்கும் சித்த மருந்தினையும், அது குறித்த ரகசியத்தையும் வெளியே எடுத்து வர முயற்சிக்க, எட்வர்ட் சோனென்ப்ளிக் என்ற பிரெஞ்சுக்காரரின் ஆவி தடுக்கிறது. அவர்களை கொல்லவும் முயற்சிக்கிறது. இதன் பிறகு, என்ன நடந்தது? என்பதே அகத்தியா.
அறம் சார்ந்த படங்களை இயக்கி வரும், எழுதி, இயக்கியிருக்கும் பா.விஜய், இந்தப்படத்திலும் அதை கடை பிடித்திருக்கிறார். தமிழர்களின் சித்த மருத்துவம் குறித்து அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில், ஃபேன்டசி திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார். ஆபாசங்களை தவிர்த்து, அனைவரும் பார்க்கக்கூடிய விதமாக, சிறுவர், சிறுமியர்களுக்கு ஏற்ற வகையில் படத்தினை ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார்.
பிரம்மாண்டமான வகையில், அமைக்கப்பட்டிருக்கும் பிரெஞ்சு அரண்மனை, வாய்பிளந்து பார்க்க வைக்கிறது. 1940 காலத்திய உடைகள் மற்றும் ஆபரணங்கள், இன்ன பிற பொருட்களும் அப்படியே காட்சிப் படுத்தப் பட்டிருக்கின்றன. கலை இயக்குநர் பி.சண்முகத்தின் அரங்க வடிவமைப்பினை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி. கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கிறது. கலை இயக்கம் பொறுத்தவரை, ஜீவா பிறக்கும் தருவாயில் ‘செட்’ அப்படியே அப்பட்டமாக செயற்கையாக தெரிகிறது.
யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது. ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் சிறப்பு.
ஜீவாவின் நடிப்பு ரசிக்கும் படி இருக்கிறது. அர்ஜூனும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். இருவருமே இரண்டு நாயகர்களாக வலம் வருகிறார்கள். இருவரும் குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்துள்ளனர்.
ஜீவா – ரோகிணி இடையேயான காட்சிகள் அமெச்சூர் தனமாக இருக்கிறது. ராஷி கண்ணா – ஜீவா சம்பந்த காட்சிகள் நன்றாக இருக்கின்றன. ராஷி கண்ணாவுக்கு நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை. கிடைத்த காட்சிகளில், குறை சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார். கடைசியில் இருவரும் ஆடும் பாடல் காட்சி, ஒன்ஸ் மோர் கேட்கும் படி இருக்கிறது.
அர்ஜூன் – மெட்டில்டா இடையேயான காட்சிகள் ரசனையானவை. சாப்பிட கைவராமல் தவிக்கும் மெட்டில்டாவிடம், அர்ஜூன் நடந்து கொள்ளும் விதம் எந்த மருத்துவத்தை சார்ந்த்து என்பது தெரியவில்லை.
சார்லி, ரோகினி, ராதாரவி, செந்தில், பூர்ணிமா பாக்யராஜ், யோகி பாபு, விடிவி கணேஷ், ஷாரா, இந்துஜா என அனைவரும் இயக்குநரின் தேவையறிந்து நடித்துள்ளனர்.
ஒரு ஹாரர் படத்தில் வழக்கமான விஷயங்களை தவிர்த்து, சித்த மருத்துவத்தின் பெருமையை சிறப்பாக அனைவருக்கும் புரியும் வண்ணம் சொல்லியதற்காக இயக்குநர் பா.விஜய்யை பாராட்டலாம்.
அகத்தியா – சித்த மருத்துவத்தின் பெருமையை கூறும், பொழுது போக்கு படம்!