‘7 ஜி பிலிம்ஸ்’ சார்பில், 7ஜி சிவா தயாரிப்பில், அறிவழகன் இயக்கியிருக்கும் படம், சப்தம். இதில் ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன், எம்எஸ் பாஸ்கர், அபிநயா, விவேக் பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
குன்னூரில் உள்ள பிரபலமான மருத்துவக் கல்லூரியில் மாண்வர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களது தற்கொலை, மருத்துவத்திற்கு சவால் விடும் வகையில் வித்தியாசமாக இருக்கிறது. மேலும், அவர்களது பிணத்தின் தோற்றம், வித்தியாசமான முறையில் மாறி வருகிறது. மருத்துவர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர். பொது மக்களிடையே, அந்தக் கல்லூரியில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், அதனால் அங்கே உயிர் பலிகள் நடப்பதாகவும் கூறுகின்றனர். இதை பொய் என உறுதி படுத்த, அமானுஷ்யங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிபுனர் ஆதியை கல்லூரிக்கு வரவழைக்கின்றனர்.
ஆதி, மருத்துவக்கல்லூரி மாணவர்களின் உடல்களையும், அவர்கள் தங்கியிருந்த அறைகள், பயன்படுத்திய பொருட்கள் குறித்து ஆராய்ந்து வருகிறார். அப்போது, அந்தக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் லட்சுமி மேனனை ஒரு அமானுஷ்ய சக்தி பின் தொடர்வதை கண்டுபிடிக்கிறார். மேலும், ஆராயும் போது சுமார் 40 க்கும் மேற்பட்ட ஆவிகள், அவரை பின் தொடர்வதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.
லட்சுமி மேனனுக்கும், நடந்த தற்கொலைகளுக்கும் என்ன காரணம். அவரை ஏன், ஆவிகள் பின் தொடர்கின்றன? என்பதைச் சொல்வதே ‘சப்தம்’ படத்தின் மீதிக்கதை.
‘ஈரம்’ படத்தின் மூலமாக, மொத்த தமிழ் சினிமாவையும், தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர், இயக்குநர் அறிவழகன். இந்த ‘சப்தம்’ படத்தின் மூலமாகவும் கவனிக்க வைத்திருக்கிறார். ஆவிகள் பொதுவாக ஏதாவது ஒரு பொருளின் துணையோடு பேசுவதாக கூறுவார்கள். அந்த வகையில், வௌவால்கள் பயன் படுத்தும் அல்ட்ரா சோனிக் சப்தம் மூலம் பேசுவதாக காட்டியிருக்கிறார். அதற்கான ஒலிகளை மிகச்சிறப்பாக, இசையமைப்பாளர் எஸ். தமனும் அவரது குழுவினரும் செய்துள்ளனர். அதாவது சவுண்ட் டிசைன், சூப்பராக இருக்கிறது. டி.உதயகுமார் மற்றும் ஒலி வடிவமைப்பு செய்துள்ள சிங்க் சினிமா குழுவினரையும் பாராட்டலாம்.
படம் ஆரம்பிக்கும் போது திகிலோடு தான் ஆரம்பிக்கிறது. அதன் பிறகு ஒன்றுமில்லை! ஆனால், போதிய திகிலோ, எமோஷனலோ இல்லாததால் இந்தப்படம் அனைவரையும் மகிழ்ச்சி படுத்தாது! திரைக்கதையில் போதிய திகிலையும், விறுவிறுப்பினையும் கூட்டியிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும்.
ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், திகில் படங்களுக்கு ஏற்றத்தக்க வகையில்,பாராட்டும்படி படமாக்கியிருக்கிறார்.
ஆதி, அமானுஷ்யங்கள், ஆவிகள் குறித்த ஆராய்ச்சியாளராக தன்னால் என்ன முடியுமோ, அதை செய்திருக்கிறார். இவருக்கு உதவும் நண்பராக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நின்று விடுகிறார்.
லட்சுமி மேனன், பேராசிரியராகவும், ஆவியால் பாதிக்கப்பட்டவராகவும் நடித்து, தன் இருப்பினை பதிவு செய்கிறார்.
கதையின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன் ஆகியோரில், லைலா, தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம், ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.
சப்தம் படத்தின் மொத்த பலவீனமும் ரெடின் கிங்ஸ்லி. சிரிக்க வைப்பதாக நினைத்து வெறுப்பேற்றுகிறார். இவருடைய கதாபாத்திர வடிவமைப்பில் இயக்குநர் அறிவழகன் மிகப்பெரிய தவறு செய்திருக்கிறார். திகில் ஏற்படுத்தும் நேரத்தில் அவரது கதாபாத்திரம் அந்த திகிலை நிர்மூலமாக்குகிறது.
எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா மிகச் சில காட்சிகளில் நடித்திருந்தாலும், மனதில் நிற்கிறார்கள்.
மொத்தத்தில், ‘சப்தம்’ வரவேற்கத்தக்க, வித்தியாசமான, நல்ல முயற்சி!