ZEE Studios & Parallel Universe Pictures – சார்பில் GV Prakash Kumar, Umesh KR Bansal, Bhavani Sri ஆகியோர் தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ், இயக்கியிருக்கிறார். பாடகராக, இசையமைப்பாளராக, நடிகராக வெற்றி பெற்ற ஜீ வி பிரகாஷ் குமாரின் முதல் தயாரிப்பு கிங்ஸ்டன். இந்தியாவின் முதல் கடல் பின்னணியிலான திகில் படம். ஜிவி பிரகாஷ் நடித்த 25 வது படம். எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் தூவத்தூர். இது ஒரு கடற்கரை கிராமம். இந்த மக்கள் மீன் பிடித்தொழிலை நம்ப்பியிருந்தாலும், அவர்களால் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாது. மீறி போனவர்கள் மாயமாகி விடுவர். அதற்கு காரணமாக பல கதைகள் சொல்லப்பட்டாலும், இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவரது ஆவி அந்தக்கடலை ஆட்டிப்படைக்கிறது. இதனால், இளைஞர்கள் சட்டவிரோத செயலால் பணம் சம்பாதிக்கின்றனர். நாயகன் ஜி.வி.பிரகாஷும், அதையே செய்து வருகிறார். இதனால், பல தொல்லைகள் வருகிறது. எனவே மக்கள் மீண்டும் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க செய்வதற்கு, மர்மக்கடலுக்குள் தனது நண்பர்களுடன் செல்கிறார். மீண்டும் கரைக்கு வந்தாரா, இல்லையா? என்பதே கிங்ஸ்டன் படத்தின் கதை.
‘கிங்ஸ்டன்’ ஃபேன்டசி திரைப்படம், முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டுள்ளது. எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ், கடலில் நடக்கக்கூடிய கதைக்கு ஏற்ற திரைக்கதையை உருவாக்குவதற்கு திணறியிருக்கிறார். காமிக்ஸ் கதைகள் ஏற்படுத்தும் அனுபவத்தினை கூட, திகில் ஏற்படுத்தவில்லை. அழுத்தமில்லாத திரைக்கதையால், படம் பார்ப்பவர்களிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை.
கிராபிக்ஸ், பிராஸ்தடிக் மேக்கப் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் உருவங்களில் படக்குழுவினரின் கடின உழைப்பு கண்முன் தெரிந்தாலும், அந்த உருவங்களை காட்சிப்படுத்துவதில் சொதப்பியிருக்கிறார்கள். முதல் பாதித் திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், இரண்டாம் பாதி ஏமாற்றுகிறது.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய்யின் ஒளிப்பதிவில் க்ரீன் மேட் காட்சிகள் அப்பட்டமாக தெரிகிறது. பல இடங்களில் செட் ஒர்க்கும் அப்படியே தெரிகிறது. இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம்.
இசையமைப்பாளராக, பல படங்களுக்கு உயிர் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் குமார், கிங்ஸ்டன் படத்திற்கு உயிர் கொடுக்கத் தவறிவிட்டார்.
மீனவ இளைஞராக, நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார். எந்த பெரிய வித்தியாசமுமின்றி நடித்திருக்கிறார்.
நாயகியாக திவ்ய பாரதி. வந்து போகிறார். ரசிகர்களை அவரும் ஈர்க்கவில்லை. அவரது நடிப்பும் ஈர்க்கவில்லை!
மற்றபடி, அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் பெயரளவிற்கு நடித்துள்ளனர்.
மொத்தத்தில், ‘கிங்ஸ்டன்’ பெரிதாக கவரவில்லை!