‘ஸ்வீட் ஹார்ட்’ – விமர்சனம்!

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம், ‘ஸ்வீட் ஹார்ட்’.  அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார், எழுதி இயக்கியிருக்கிறார். ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாச்சலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம், முழுக்க முழுக்க  இன்றைய இளைஞர்களுக்கான படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

நாயகன் ரியோ. அவரின் பால்ய பருவத்திலேயே, அவருடைய அம்மா, அப்பா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிகின்றனர். அதனைத் தொடர்ந்து சில வருடங்களில், அப்பாவை இழக்கிறார். இந்த சம்பவங்கள், அந்த சிறிய வயதிலேயே ஆறாத வடுக்களாக மாறுகிறது. ஆண் – பெண் இருவரும் சந்தோஷமாக சேர்ந்து வாழமுடியாது. என்ற முடிவுக்கு வருகிறார்.

ரியோ, வாலிப வயதை அடைகிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில், அவருக்கும், கோபிகா ரமேஷூக்கும் இடையே நடக்கும் மோதல், பின்னர் காதலாக மாறுகிறது. இருவரும் நெருக்கமாக பழகிவரும் நிலையில், கோபிகா ரமேஷ் கர்ப்பமாகிறார். கோபிகாவிடம் கருவினை கலைக்க, ரியோ வற்புறுத்த, அவர் மறுக்கிறார். அதற்குப் பின்னர் என்ன நடந்தது? என்பது தான்,  ‘ஸ்வீட் ஹார்ட்’  இளமை ததும்பும் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

‘ஸ்வீட் ஹார்ட்’  திரைப்படத்தின் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார், கதையை தட்டுத்தடுமாறி தான் கொண்டு செல்கிறார். முதல் பாதி கொஞ்சம் சுமார். ரெகுலர் சினிமா டச்! அதன் பிறகு ரொமன்ஸ், எமோஷனல், லவ் அப்படி இப்படின்னு கொஞ்சம் ரசிக்கும் படியாகவே செல்கிறது. நடிகர்களிடம் தேவையான நடிப்பினை வாங்கியிருக்கிறார். கோபிகா ரமேஷின் குடும்பத்தினர் கதாபாத்திரங்கள் இன்னும் சரியாக வடிவமைத்திருக்க வேண்டும்.  குறிப்பாக, கோபிகா ரமேஷின், அப்பாவாக நடித்த ரெஞ்சி பணிக்கர், கதாபாத்திரத்தை. க்ளைமாக்ஸ் முன்பு இடம்பெறும், அரை மணி நேரக்காட்சிகள் சிறப்பு! குடி, சிகெரெட் இவைகளை கொஞ்சமாவது தவிர்த்திருக்கலாம். இவைகள் இல்லாமல் திரைக்கதையே எழுத முடியாது என்பது போல், திரைக்கதை அமைத்திருப்பது படத்தின் பலவீனம். அதிலும் ‘காத்தாடி’ ராமாமூர்த்தியை புகை பிடிக்க வைத்திருப்பது, இயக்குநருடைய முட்டாள்த் தனத்தின் உச்சம்!

நடிகர், நடிகைகளின் நடிப்பினை பொறுத்தவரை, மனு கதாபாத்திரத்தில் நடித்த கோபிகா ரமேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு நடிக்க ஏராளமான காட்சிகள். அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். ரியோ நன்றாக நடித்திருந்தாலும், அவரது பாவனையில் ஒருவித செயற்கை தெரிகிறது. மற்றபடி, ஃபௌசி, சுரேஷ் சக்கரவர்த்தி, அருணாசலேஸ்வரன், துளசி, ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்டவர்களும் நடித்திருக்கிறார்கள்.

ரியோவின் அக்காவாக, டாக்டர் ‘கீதா’ கதாபாத்திரத்தில் நடித்த, ரேஷ்மி கார்த்திகேயன் வெகு சிறப்பாக, இயல்பாக நடித்திருக்கிறார்.

‘ஸ்வீட் ஹார்ட்’, இந்தக் கால இளைஞர்களை மட்டும் கவர்ந்தால் போதும், என்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர்களும் கொண்டாடுவார்கள்!