‘வீர தீர சூரன் 2’  –  விமர்சனம்!

விக்ரம், துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, மாருதி பிரகாஷ் ராஜ், பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்க, எழுதி இயக்கியிருக்கிறார், எஸ் யு அருண்குமார். ‘ஹெச் ஆர் பிக்சர்ஸ்’ சார்பில்  ரியா சிபு, மும்தாஜ்.எம். ஆகியோர் தயாரித்துள்ளனர்.

மதுரை, புறநகர் பகுதியில் செல்வாக்குமிக்க ஒரு குடும்பம். அதன் தலைவர், பெரியவர் என்றழைக்கப்படும் மாருதி பிரகாஷ் ராஜ். அவரது மகன் சுராஜ் வெஞ்சரமூடு. வருடந்தோறும் நடக்கும் ஊர் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது, பெரியவர் வீட்டிற்கு வரும் ஒரு பெண், தனது கணவனை காணவில்லை! அதற்கு காரணம் நீங்கள் தான். என, பெரியவர் மீது குற்றம் சாட்டுகிறார். இதனால், ஆத்திரமடையும் சுராஜ் வெஞ்சரமூடு அந்தப் பெண்ணை அடித்து விரட்டுகிறார். அதன் பிறகு, அந்தப்பெண்ணின் கணவன், பெரியவர் வீட்டிற்கு சென்ற, தன் மனைவியை காணவில்லை! என போலீஸ் எஸ். பி, எஸ். ஜே. சூர்யாவிடம் புகார் செய்கிறார். அதனால், எஸ். ஜே. சூர்யா பெரியவரை என்கவுன்டர் செய்ய திட்டமிடுகிறார். இதை அறிந்து கொள்ளும் பெரியவர், மளிகை கடை நடத்தி வரும் விக்ரமிடம் எஸ். ஜே. சூர்யாவை கொல்லுமாறு அவரது காலில் விழுந்து கெஞ்சுகிறார். இதற்கு, விக்ரமின் மனைவியான துஷாரா விஜயன், விக்ரமை தடுக்கிறார். இதன் பிறகு, என்ன நடந்தது? என்பது தான், வீர தீர சூரன் 2 படத்தின் மீதிக்கதை!

சுமார் இரண்டரை மணி நேரம் ஓடும் படத்தில், படத்தின் கதாநாயகன் சீயான் விக்ரம், 15 நிமிடங்களுக்குப் பிறகே வருகிறார். ஆனாலும், படம் ஆரம்பித்த அடுத்தடுத்த காட்சிகளிலேயே வேகமெடுத்து விடுகிறது. சீயானின் வருகைக்குப்பிறகு  மேலும் வேகமெடுக்கிறது. இந்த வேகம் க்ளைமாக்ஸ் முன்புவரை செல்கிறது. இடைவேளை வரை, ஒவ்வொரு காட்சிகளும், படம் பார்ப்பவர்களை நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்க வைக்கிறது. இடைவேளைக்குப் பிறகு சற்று தொய்வு. அதன் பிறகு மீண்டும் வேகமெடுக்கிறது. எதிர்பாராத திருப்பங்களும், யூகிக்க முடியாத காட்சிகளும் திரைக்கதையை சுவாரசியப்படுத்துகிறது. ஆனால், க்ளைமாக்ஸூம் அதையொட்டிய சண்டைக்காட்சியும், விறுவிறுப்பான மொத்தப்படத்திற்கும் திருஷ்டியாக அமைந்து விடுகிறது.

காளி, கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் அசத்தியிருக்கிறார். மளிகைக் கடையில், அவர் வியாபாரம் செய்யும் ஸ்டைல், பரம்பரை வியாபாரியையே தோற்கடித்து விடும். அவரைப்போலவே நடித்திருக்கிறார், துஷாரா விஜயன். விக்ரமிடம் பேசிக்கொண்டே வியாபாரத்தை கவனிக்கும் அந்த ஸ்டைல், இருவரையுமே நிஜமான மளிகை கடை நடத்திவரும், கணவன் மனைவியாக காட்சியளிக்கிறார்கள். கன கச்சிதமான நடிப்பு! கணவன், மனைவியாக இருவருக்குமான நெருக்கமும் சிறப்பாக இருக்கிறது.

விக்ரம் சண்டைக்காட்சிகளில் அதிரடி காட்டியும், காதல் காட்சிகளில் குறும்புகாட்டியும் நடித்திருக்கிறார். சண்டைக்கட்சிகளின் போது, அவரது ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரிக்கிறார்கள்.

கலைவாணி கதாபாத்திரத்தில், கச்சிதமாக பொருந்திப்போகிறார், துஷாரா விஜயன். ஒவ்வொரு படங்களிலுமே தன்னிருப்பினை அழுத்தமாக பதிவு செய்யும் அவர், இந்தப்படத்திலும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இவரது நடிப்பிற்கு, காட்சிகளுக்கேற்ற வசனங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன.

போலீஸ் எஸ்.பியாக, எஸ் ஜே சூர்யா. வழக்கம்போல் அலட்டாமல் நடித்து அசத்தியிருக்கிறார். அவரது மேக்கப் தான் சிரிப்பினை வரவழைக்கிறது. கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.  மற்றபடி அவரது நடிப்பினில் எந்த குறையும் இல்லை.

பெரியவராக மாருதி பிரகாஷ் ராஜ். அவரது மகனாக சுராஜ் வெஞ்சரமூடு. இருவருமே குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர். கலர்ஃபுல்லாக காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருவிழாக்காட்சிகள், கோலாகலமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சண்டைக்காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. சில காட்சிகளில் செயற்கை.

இசை ஜிவி பிரகாஷ் குமார். பின்னணி இசை படத்திற்கான பலமாக இருக்கிறது. பாடல்கள் ஓகே!

ஒரு சில குறைகளுடன், எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ். யூ. அருண்குமார், ‘வீர தீர சூரன் 2’  படத்தினை, முழுக்க முழுக்க விக்ரம் ரசிகர்களுக்கான, கமர்ஷியல் பிரியர்களுக்கான படமாக கொடுத்திருக்கிறார்.

‘வீர தீர சூரன் 2’  – மாஸ்!