‘YNOT’ ஸ்டுடியோஸ் சார்பில், சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் ஆகியோர் தயாரித்துள்ள படம், டெஸ்ட். இப்படத்தினை, முதன்முறையாக இயக்குவதன் மூலம், தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த், இயக்குநராக அறிமுகமாகிறார். இதில், ஆர். மாதவன், நயன்தாரா சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘டெஸ்ட்’ திரைப்படம், ஏப்ரல் 4 ஆம் தேதி முதல், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் நடைபெறும் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மூன்று பேரின் வாழ்க்கையை புரட்டிப்போடுவது தான் கதை. அதாவது, இந்திய கிரிக்கெட் அணியில், மிகப் பெரிய நட்சத்திர வீரராக இருப்பவர் சித்தார்த். சமீப காலத்திய போட்டிகளில் அவர் குறைந்த அளவிலான ரன்களை எடுப்பதுடன், இந்திய அணிக்கு சரிவை ஏற்படுத்துவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. எனவே, வழக்கமாக கிரிக்கெட்டில் ஃபார்மில் இல்லாத வீரர்களை, ஓய்வெடுக்க வலியுறுத்துவது போல், சித்தார்த்தையும் வலியுறுத்துகிறது. அதை சித்தார்த் மறுத்து பல போராட்டங்களுக்குப் பிறகு, சென்னையில் நடக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்குப்பிறகு ஓய்வெடுக்க முடிவு செய்கிறார்.
நயன்தாராவின் அப்பாதான் சித்தார்த்தின் கிரிக்கெட் கோச். சித்தார்த்தும் நயன்தாராவும் பள்ளியில் படித்த நண்பர்கள். நயன்தாரா, அமெரிக்காவில் படித்த விஞ்ஞானி மாதவனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். சொந்த நாட்டில் சாதிக்க, மக்களுக்கு பயண்படும், உலகமே திரும்பிப்பார்க்கும் வகையில், பெட்ரோலுக்கு மாறாக, ஒரு கருவியை கண்டுபிடிக்கிறார். அதை, அரசின் மூலமாக நடைமுறைக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறார். இதனிடையே மாதவன் – நயன்தாரா தம்பதியினர், செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும், மார்வாடி ஒருவரிடம் விஞ்ஞானி மாதவன் தன்னுடைய ஆராய்ச்சிக்கு வாங்கிய 50 லட்சம் கடனுக்காக, மாதவன் கடத்தப்படுகிறார். அப்போது அங்கே கிரிக்கெட் சூதாட்டம் குறித்த உரையாடல்களை கவனிக்கும் மாதவன், சித்தார்த்தின் மகனை கடத்திவிடுகிறார். இதன் பிறகு என்ன நடந்த்து என்பது தான் டெஸ்ட் படத்தின் மீதிக்கதை.
டெஸ்ட் படத்தின் மூலமாக அறிமுகமான இயக்குநர் சஷிகாந்த் , கதையையும் திரைக்கதையையும் சுவாரசியமாக எழுதி, இயக்கியிருக்கிறார். அவர், முதன்முறை இயக்குநராக அவர் தெரியவில்லை. மாறாக அனுபவம் வாய்ந்த ஒரு இயக்குநரைப் போல் படத்தினை இயக்கியிருக்கிறார். முதல் படமே அவருக்கு வெற்றி. ஒரு டிராமாவாக இருந்தாலும் படம் முழுவதும் ஒருவிதமான பதட்டம் இருந்து வருகிறது. அடுத்தது என்ன நடக்கும்? என ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும் திரைக்கதை, படத்தின் வெற்றி. க்ளைமாக்ஸில் சித்தார்த்தின் பங்கு அனைவராலும் யூகிக்கக்கூடியது தான். ஆனால் மாதவன் சம்பந்தப்பட்ட க்ளைமாக்ஸ்! எதிர்பாராதது. மாதவனின் கதாபாத்திரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நாட்டிற்காக வாழ்க்கையையே அர்ப்பணித்த அவர், சிறுவனை கடத்தும் நிலைக்கு செல்வாரா?! அதற்காக சொல்லப்படும் காரணமும் ஏற்றுக்கொள்ளும்படியில்லை.
மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் சிறப்பான முறையில், அவர்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள். இவர்களோடு, காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட சிறு வேடங்களில் நடித்த அனைவருமே குறிப்பிடும்படி நடித்துள்ளனர். இருந்தாலும்
நடித்த நடிகர்களின் நடிப்பினை வரிசைப்படுத்தினால், முதலில் மாதவன், மீரா ஜாஸ்மின், சித்தார்த். அதன் பிறகு, நயன்தாரா என வரிசைப்படுத்தலாம்.
இசையமைப்பாளர் சக்திஸ்ரீ கோபாலனின் இசையில், படத்தின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பின்னணி இசை, சிறப்பாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் விராஜ் சிங் கோஹிலின் ஒளிப்பதிவு நேர்த்தி.
படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ், கலை இயக்குநர்கள் என்.மதுசூதன் மற்றும் சுவேதா சாபு சிரில், ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்கள். குறிப்பாக தொழில்நுட்பத்திலும் படம் சிறப்பாக இருக்கிறது.
சுமன் குமார் எழுதியிருக்கும் கதைக்கு, இயக்குநர் எஸ்.சஷிகாந்த், கிரிக்கெட் போட்டியை மைய்யமாக கொண்டு ஒரு விறுவிறுப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார்.
‘டெஸ்ட்’ – விறுவிறுப்பான, டிராமா!