உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு ‘வேர்ல்ட் இண்டர்நேஷ்னல் தமிழ் பிலிம் அசோசியேஷன்ஸ் – விட்ஃபா’. (World International Tamil Film Association – WITFA) சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் முதல் மாநாடு, சென்னையில் உள்ள பிரசாத் லேபில், ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெற்றது.
மேலும், இந்த நிகழ்வில், விட்ஃபா அமைப்பின் தேசிய கீத பாடல் மற்றும் விட்ஃபா மூலம் தயாரிக்கப்படும் முதல் திரைப்படமான ’Expired மருந்து’-வின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் விட்ஃபா அமைப்பின் சர்வதேச தலைவரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ரஷீம் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில்,
“நான் தெய்வத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளவன். எவ்வளவு பெரிய விசயமாக இருந்தாலும் நடக்கும், தெய்வம் துணை இருக்கும், என்ற நம்பிக்கையில் அதில் ஈடுபடுவேன், அந்த வகையில் தான் சர்வதேச அளவிலான இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறேன்.
ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன், அது நடக்கும், நடக்காது, என்று எல்லாம் நான் யோசிக்கவில்லை, ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும், என்று தான் நினைத்தேன். அது நடக்கவில்லை என்றாலும், ரஜினிகாந்தின் அண்ணனை வைத்து இன்று படம் எடுத்திருக்கிறேன். யார் படத்திலும் நடிக்காத ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா இன்று என் படத்தில் நடித்திருக்கிறார். தெய்வத்தின் அருளால் தான் அவர் என் படத்தில் நடித்திருக்கிறார். இன்றைய விட்ஃபா மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கங்கை அமரன் சார் எவ்வளவு பெரிய மனிதர், அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது கடவுளின் அருள் தான். இயக்குநர் பேரரசுக்கு தெரியாமல் அவரது பழனி படத்தில் ஆறு நாட்கள் பயணித்திருக்கிறேன், அதனால் அவர் என்னுடைய குருநாதர். இயக்குநர் சங்க தலைவராக இருக்கும் ஆர்.வி.உதயகுமார் மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர். சிறு முதலீட்டு படங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கே.ராஜன் சார், ஆகியோரை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
’மாம்பழம் திருடி’ என் ஆறாவது படம், நான் இயக்கும் ஏழாவது படம், விட்ஃபா தயாரிக்கும் முதல் படமாகும். இதில், இலங்கையில் பிரபலமாக இருக்கும் ஒருவரை அறிமுகப்படுத்த இருக்கிறோம். விட்ஃபா தயாரிக்கும் அனைத்து படங்களையும் நான் மட்டுமே இயக்க மாட்டேன். விட்ஃபா ஒவ்வொரு வருடமும் இரண்டு படங்களை தயாரிப்பதோடு, பத்து படங்களை வெளியிட போகிறது. ஆக, ஆண்டுக்கு 12 படங்கள் விட்ஃபா மூலம் வெளிவரும். இதன் மூலம், இரண்டு தயாரிப்பாளர்கள், இரண்டு இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என பல புதுமுகங்களை உருவாக்கப் போகிறோம்.’ என்றார்.
இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பேசுகையில்,
“விட்ஃபா அமைப்பை பற்றி கேட்ட போது இது மிகவும் சிறப்பான அமைப்பாக இருக்கிறது. ஒரு கதையை உயிராக நினைத்து சுமப்பவர்களை தேடி பிடித்து வாய்ப்பு கொடுக்க வேண்டும், அப்படிப்பட்ட கதைகளை தயாரித்தால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம். இப்போது வருகின்ற படங்களில் வன்முறை அதிகம் இருக்கிறது. கமலே அப்படிப்பட்ட படங்களுக்கு சென்று விட்டார். அதற்கு காரணம் மக்கள் தான், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, எதை விரும்புகிறார்களோ அதை நோக்கியே படம் இயக்க தயாராகி விட்டோம். நம் வாழ்க்கையிலேயே நிறைய கதைகள் இருக்கிறது, அதை வைத்து படம் இயக்கினாலே வெற்றி பெற்று விடலாம்.
நான் இயக்கிய கரக்காட்டக்காரன் படத்தை பற்றி பாராட்டி பேசுகிறார்கள், தில்லானா மோகம்மாள் படத்தின் கரு தான் கரக்காட்டக்காரன், இதை நான் சொன்னால் தான் உங்களுக்கு தெரியும், இல்லை என்றால் தெரியாது. இசையும் அப்படித்தான் நீங்கள் கொண்டாடுகின்ற பல பாடல்களுக்கு வேறு ஒரு பாடல் உதாரணமாக இருக்கும். இதை காபி என்று சொல்லக்கூடாது, பாதிப்பு என்று சொல்ல வேண்டும். இங்கு யாரும் எதையும் தெரிந்துக் கொண்டு வரவில்லை, அவர்களுக்கு அமைகின்ற சூழலுக்கு ஏற்றபடி, நம் முன்னோர்கள் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும்.
விட்ஃபா அமைப்பின் செயல்கள் மிக சிறப்பானவையாக இருக்கிறது. நீங்கள் நல்ல கதையம் அம்சம் கொண்ட படங்களை தயாரித்தான், நாள் இளையராஜாவிடம் சொல்லி இலவசமாக இசை அமைக்க சொல்வேன், அதேபோல் நானும் இலவசமாக பாடல் எழுதி கொடுக்கிறேன், என்பதை இங்கே பதிவு செய்து கொண்டு, விட்ஃபா மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி” என்றார்.