‘கீனோ’ ( Kenophobia ) – விமர்சனம்!

‘கீனோ’ ( Kenophobia ) இது ஒரு சைக்காலஜிக்கல் ட்ராமா,  திரில்லர் திரைப்படம். கிட்டத்தட்ட உருவமில்லாத ஒன்றினை, தன்னுடைய கற்பனைக்கு ஏற்றவாறு உருவகப்படுத்திக்கொண்டு அதற்கு பயப்படுவது. இது ஒருவிதமான மனம் சம்பந்தப்பட்ட, பயம் சார்ந்த மனநோய்.

பள்ளி படிக்கும் மாணவன் சிவா சுகந்த். இவரது தந்தை மகாதாரா பகவத். அம்மா  ரேணு சதிஷ். வழக்கமாக பள்ளி சென்று வரும் சிவா சுகந்திடம், ஒரு ஏலியன் போன்ற ஒரு உருவம் தன்னை ‘கீனோ’ என்று அறிமுகப் படுத்திக்கொண்டு சிவா எங்கு சென்றாலும் அவர் பின்னால் தொடர்ந்து வருகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இந்த விஷயம் அவரது தந்தை மகாதாராவுக்கு தெரியவர, தனது மகனுக்கு மன நல சிகிச்சை அளிக்க முடிவு செய்கிறார். கீனோ யார்? மன நல சிகிச்சைக்கு பிறகு என்ன நடந்தது? என்பது தான், கீனோ படத்தின் வித்தியாசமான கதை, மற்றும் புதிய முயற்சி.

சிவா சுகந்தின் அப்பாவாக நடித்த மகாதாரா, அம்மாவாக நடித்த ரேணு ஆகியோரை விட , சிறுவன் சிவா சுகந்த் நன்றாக நடித்திருக்கிறார். கீனோவை அவர் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போது அதை பார்த்து, பயந்து நடுங்கும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், படம் பார்ப்பவர்களுக்குத்தான் பயம் வரவில்லை!

சிவா சுகந்தின் அப்பா, அம்மாவாக நடித்தவர்களையும் குறை சொல்ல முடியாது. அப்பாவாக நடித்திருந்த மகாதாரா, அப்பாவித்தனமான அப்பாவாக கவனிக்கும்படி நடித்திருக்கிறார்.  பேக்குத்தனமான அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரேணுவும் கவனிக்க வைக்கிறார்.

இவர்களுடன் கந்தர்வா, ஆர்.கே.திவாகர், ராஜேஷ் கோபிசெட்டி, சுந்தர் அண்ணாமலை, கண்ணதாசன், சிவம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கவனிக்கும்படி நடித்திருக்கிறார்கள்.

ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவு பாராட்டும்படி இருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து இயக்கியிருக்கும் ஆர்.கே.திவாகர், கனவு,  பயம் அதற்கான தீர்வினை வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறார்.

கீனோ – சிறுவர்களுக்கானது!