‘ஏ ஆர் என்டர்டைன்மென்ட்’ சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி ஆகியோர் தயாரித்து, லோகேஷ் அஜ்ல்ஸ் எழுதி, இயக்கியிருக்கும் படம் லெவென். நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ஆடுகளம் நரேன், ரவிவர்மா , அர்ஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். என் பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.
சென்னை புறநகர் பகுதியில், தொடர்ச்சியாக பலர் கொலை செய்து, எரிக்கப்பட்ட நிலையில் பொது இடங்களில் அவர்களது பிணங்கள் வீசப்பட்டு வருகிறது. ஒரே மாதிரயாக நடக்கும் இந்த சம்பவங்கள் போலீஸூக்கு பெரும் சவாலைக் கொடுக்கிறது. இது குறித்த எந்தவித தடயமும் கிடைக்கவில்லை! அதை விசாரிக்கும் அதிகாரி விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு செல்கிறார். இதன் பிறகு இந்த கொலை வழக்கு, இன்ஸ்பெக்டர் நவீன் சந்திராவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. மொத்த காவல் துறையும் அதிர்ச்சியில் உறைகிறது! அப்படி என்ன நடந்தது? என்பது தான், ‘லெவன்’ படத்தின் பல திருப்பங்கள் நிறைந்த, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
முதல் காட்சியிலேயே திகிலூட்டி, கதையை நகர்த்தும் இயக்குநர் லோகேஷ் அஜ்ல்ஸ், படத்திற்கான பெயரை எப்போது கூறுவார்? என்ற மன நிலையிலேயே படம் பார்த்து வரும் ரசிகர்களுக்கு, இடைவேளைக்கு பின்னர், அதற்கான காரணம் தெரியவரும்போது அடடே சூப்பர்ப்பா! என சொல்ல வைத்து விடுகிறார். அதன் பிறகு க்ளைமாக்ஸ் வரை கொலையாளி யார் என நமக்கு தெரியவில்லை. ஒரு சில யூகங்கள் நம்மை ஏமாற்றவும் செய்துவிடுகிறது. நல்ல திரைக்கதை என சொல்லவும் வைக்கிறது.
நவீன் சந்திரா, எப்போதும் இறுக்கமான முகத்துடன், கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவரது இறுக்கத்திற்கான காரணம் தெரியவரும் போது கதாபாத்திரத்தின் தன்மை மேலும் உயர்ந்து நிற்கிறது. மிகச்சரியான முறையில் கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்து சபாஷ் போட வைக்கிறார்.
தலைமை ஆசிரியையாக நடித்திருக்கும் அபிராமி, மிகச்சரியான தேர்வு! சிறப்பாக நடித்திருக்கிறார். பாசம் காட்டுவதிலும், குற்ற உணர்ச்சியின் மிகுதியால் வருந்துவதிலும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்துகிறார்.
அதேபோல் ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ஆடுகளம் நரேன், ரவிவர்மா , அர்ஜய் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
கொலையாளி யார், எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள்? என்பதை சிறிது சிறிதாக வெளிப்படுத்தி க்ளைமாக்ஸில், ஒரு பெரிய டிவிஸ்டோடு படம் முடிவது சிறப்பான திரைக்கதை. ஆனால், அதற்கான சரியான காட்சிப்படுத்தல் இல்லாதது குறை! இருந்தும் ரசிக்க வைக்கிறார். எழுதி, இயக்கியிருக்கும் அஜ்ல்ஸ் லோகேஷ்.
இசையமைத்திருக்கும் டி.இமானின் பின்னணி இசை, படத்தின் பலம்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு சிறப்பு.
பள்ளி, கல்லூரிகளில் செய்யப்படும் ‘பகடி வதை’ யை முன்னிறுத்தி, ஒரு பார்க்கக்கூடிய க்ரைம் ட்ராமாவை கொடுத்திருக்கிறார், இயக்குநர் அஜ்ல்ஸ் லோகேஷ்.
லெவன் – கல்வித் துறையினருக்கான எச்சரிக்கை!