காவல் ஆய்வாளராக சாய் தன்ஷிகா நடிக்கும் ‘யோகிடா’ திரைப்படத்தின் இசை வெளியீடு!

‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’. இத்திரைப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் கௌதம் கிருஷ்ணா. மலையாளத்தில் ‘லூசிஃபர்’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட  படங்கள் மற்றும் தமிழில் ‘சாது மிரண்டா’ போன்ற படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்ற தீபக் தேவ் படத்திற்கு இசையமைத்துள்ளார். தவசி,நரசிம்மா போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.KA.பூபதி ஒளிப்பதிவை மேற்கொள்ள, G சசிக்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விவேகம், சிறுத்தை போன்ற படங்களில் அதிரடி காட்சிகளை உருவாக்கிய சண்டை பயிற்சியாளர் K. கணேஷ்குமார் குமார் படத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்.

இத்திரைப்படத்தில் சாய்தன்ஷிகா குறுகிய காலத்தில் அதிக டிரான்ஸ்ஃபர் பெற்ற நேர்மையான காவல் ஆய்வாளராக நடிக்கிறார். தான் வேலை பார்க்கும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதை அவரது குடும்பத்தார் தற்கொலை என மாற்ற முயற்சிக்கின்றனர். இருப்பினும் அதை கொலை என நிரூபித்து குற்றவாளியை கைது செய்கிறார் சாய் தன்ஷிகா. ஆனால் குற்றவாளியை விடுவிக்க சொல்லி பல தரப்பில் இருந்தும் அவருக்கு அழுத்தம் தரப்படுகிறது. அதற்கு மறுப்பதால், இதைவிட மோசமான பகுதிக்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் மீண்டும் அவரை டிரான்ஸ்ஃபர் செய்கிறார்கள்.

இங்கு சாய் தன்ஷிகா சந்திக்கும் பல்வேறு திகைக்க வைக்கும் சம்பவங்களால், அவர் அனுபவிக்கும் பல்வேறு இன்னல்களை சமாளித்து வெற்றி பெற்றாரா? என்பதே யோகிடா.

இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராதாரவி, நடிகர் விஷால், இயக்குனர் சங்க தலைவர் RV உதயகுமார், பேரரசு, மித்ரன் R ஜவஹர், மீரா கதிரவன் ஆகியோருடன் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு விஷால்-சாய் தன்ஷிகா திருமண அறிவிப்பு மேடையாகவும் மாறியதால் அனைவரும் இருவரையும் வாழ்த்திப் பேசினர்.

நடிகர் ராதாரவி பேசும்பொழுது,

“இந்நிகழ்வுக்கு என்னை அழைத்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும்  வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். நடிகர் விஷால் எனது அன்புச் சகோதரர், அவ்வப்போது மன வருத்தங்கள் வந்து போவது சகஜம். அவருக்கு சாய்தன்ஷிகா ஒரு நல்ல துணையாக இருப்பார். விஷாலுக்கு சாய்தன்ஷிகா பொருத்தமான ஜோடி. விஷால் குழந்தை அல்ல அனைத்தும் தெரிந்த  அவர் நல்ல இதயம் கொண்ட மனிதர்.பேராண்மை படத்தில் இருந்து பார்க்கிறேன்; சாய்தன்ஷிகா ஒரு கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்.

இத்திரைப்படம் வெற்றியடைய படக் குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்”, என்றார்.

நடிகை சாய் தன்ஷிகா

படத்தின் கதாநாயகி சாய்தன்ஷிகா பேசும்போது,”17- வருடங்களாக மூத்த பத்திரிக்கையாளர்களுடன் பயணித்துக் கொண்டே,  தமிழ்த்திரையுலகில் எனக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறேன். உழைப்பை மட்டுமே நம்பி இந்த திரைத்துறையில் இத்தனை வருடம் பயணித்ததால்தான் ‘யோகிடா’ வரைக்கும் வந்துள்ளேன். அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்புக்கலை போய்சேர வேண்டும். 15-ஆண்டுகளுக்கும் மேலாக விஷால் அவர்களைத் தெரியும். நானும் அவரும் வரும் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். ஊடகத்தினர் அனைவரும் எங்களை வாழ்த்த வேண்டும்”, என்றார்.

நடிகர் விஷால்

‘யோகிடா’ திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. சண்டை காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. தயாரிப்பாளர் V. செந்தில்குமார் எனக்கு நீண்டநாள் நண்பர், படம் வெற்றியடைய அவருக்கு வாழ்த்துகிறேன்.

சாய் தன்ஷிகாவும் நானும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இரு வீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்துள்ளோம். திருமணத்திற்கு பிறகும் அவர் நடிப்பை தொடர்வார்.

‘யோகிடா’ திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் சாய்தன்ஷிகா சிறப்பாக நடித்துள்ளார். சண்டைப் பயிற்சியாளர் K.கணேஷ்குமார் சண்டைக் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார். இயக்குனர் கௌதம் கிருஷ்ணா அவர்கள் திரைத்துறையில் மேன்மேலும் சாதிக்க வேண்டும்”, என படக்குழுவினரை வாழ்த்தி நிறைவு செய்தார்.