‘மஞ்சள் சினிமாஸ்’ சார்பில், கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி தயாரித்து, அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் வேம்பு. இதில் ஹரிகிருஷ்ணன், ஷீலா ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்திருக்க அவர்களுடன் மாரிமுத்து, ஜெயராவ், ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிகண்டன் முரளி இசை அமைத்துள்ளார். குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘வேம்பு’ படத்தின் கதை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள், பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒரு கிராமத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாத ஒரு ஊரில், ஷீலா தனது அம்மா, அப்பாவுடன் வசித்து வருகிறார். பள்ளி சென்று வரும் அவர் தனது முறைமாமன் ஹரிகிருஷ்ணன் மீது அன்பாக இருந்து வருகிறார். அவருக்கு சிலம்பம் மீது அலாதி பிரியம். எப்படியாவது அதில் சிறந்து விளங்க நினைக்கிறார். ஆனால், ஊராரின் ஏச்சு, பேச்சு காரணமாக ஹரி கிருஷ்ணனுக்கும் ஷீலாவுக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் தனது மனைவி ஷீலாவை சிலம்பம் கற்றுக்கொள்ள அனுமதிக்கிறார், ஹரிகிருஷ்ணன். சில நாட்கள் கடந்த நிலையில், ஒரு விபத்தில் தன்னுடைய கண் பார்வையை இழக்கிறார், ஹரி கிருஷ்ணன். குடும்பதை கவனிக்கும் பொறுப்பு முழுவதும் ஷீலாவுக்கு வருகிறது. ஏழ்மையில், கஷ்டப்பட்டு நாட்களை நகர்த்துகிறார்கள். சிலம்பம் கனவுகள் தகர்ந்த நிலையில், ஷீலா என்ன செய்தார்? என்பதே வேம்பு படத்தின் கதை.
‘வேம்பு’ என்ற கதாபாத்திரத்தின் பெயர் தாங்கி நடித்திருக்கும் ஷீலா, அந்த கதாபாத்திரத்திற்கு குறைவில்லாமல் நடித்திருக்கிறார். பள்ளி படிக்கும் காலத்திலும் திருமணம் ஆன பின்பும், இருவேறு விதமான நடிப்பினைத் தந்து, அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். போதிய காரணங்கள் இல்லாமலேயே பெண்கள் மீது குறை சொல்லும் சமூகத்தில், ஒரு பெண்ணுக்கு கல்வியும், தற்காப்பும் எவ்வளவு அவசியம் என்பதை வேம்பு கதாபாத்திரம் மூலம், இயக்குநர் ஜஸ்டின் பிரபு சிறப்பாக எடுத்துக் கூறுகிறார்.
வெற்றி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹரிகிருஷ்ணன், மிகையான நடிப்பினை கொடுத்திருந்தாலும் குறிப்பிடும்படி நடித்துள்ளார். பெண்கள் சாதிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் அவரது கதாபாத்திரம் சிறப்பானது.
மற்றபடி ஷீலாவின் அம்மா, அப்பாவாக நடித்திருப்பவர்கள், ஹரிகிருஷ்ணனின் அம்மாவாக நடித்திருப்பவர், செங்கல் சூலை முதலாளி, எம். எல். ஏ. மாரிமுத்து உள்ளிட்ட படத்தில் நடித்தவர்கள், அந்த கிராமத்தினரைப் போலவே நடித்திருக்கிறார்கள்.
மணிகண்டன் முரளியின் இசையும், குமரனின் ஒளிப்பதிவும் பெரிதாக கவனம் பெறவில்லை.
அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு, வேம்பு படத்தின் மூலம் பெண்களின் முன்னேற்றம் குறித்தும், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் பேசியிருக்கிறார். அதாவது ஒரு பெண்ணுக்கு எப்பொழுதும் காவல்துறையோ, தனிப்பட்ட நபரோ அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. அவர்களின் பாதுகாப்பு அவர்களின் கையில் மட்டுமே. இந்த சூழலில் ஒவ்வொரு பெண்ணும் அவர்களுக்கான பாதுகாப்பினை, அவர்கள் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். என்ற ஒரு கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
வேம்பு – சாதிக்கத் தூண்டும் பெண்!