தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சுவின் எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்புமிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்தப் படத்தை 24 பிரேம்ஸ் ஃபேக்டரி, ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் நடிகர் மோகன் பாபு பிரம்மாண்டமான செலவில் தயாரித்துள்ளார். மதுபாலா, ஐஸ்வர்யா பாஸ்கர், பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
ஷெல்டன் சாவு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்டீபன் தேவஸி இசையமைத்துள்ளார். ஆண்டனி படத் தொகுப்பு செய்திருக்கிறார். இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார்.
வரும் ஜூன் 27-ம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தக் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு திரையிடும் நிகழ்வு இன்று(மே 30) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், விஷ்ணு மஞ்சு, மதுபாலா, இயக்குநர் முகேஷ் குமார் சிங், படத்தொகுப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டார்கள்.
‘கண்ணப்பா’ படத்தின் பிரேத்யக காட்சிகளை பார்த்த பத்திரிகையாளர்கள் நடிகர் விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட படக் குழுவை வெகுவாக பாராட்டினார்கள்.
“குறிப்பாக, நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட காட்சிகள், மிக பிரமாண்டமாக இருப்பதோடு, இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்திலும் காட்டாத லொக்கேஷன்களாக இருக்கிறது. முழுக்க, முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் கதை சொல்லாமல், இதுபோன்ற லொக்கேஷன்களில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது, நிச்சயம் ரசிகர்களை கவரும்” என்று பத்திரிகையாளர்கள் பாராட்டினார்கள்.
இயக்குநர் முகேஷ் குமார் சிங் பேசுகையில்,
“தமிழ்நாடு என்னுடைய இரண்டாவது சொந்த இடம். இங்கு ஏராளமான கோவில்கள் இருக்கிறது. நான் இங்கு திரும்ப வந்ததும், ’கண்ணப்பா’ படத்திற்காக உங்கள் முன்பு நிற்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் தயாரிப்பாளர் மோகன் பாபு சார், விஷ்ணு ஆகியோருக்கு நன்றி.
இந்தக் ‘கண்ணப்பா’ திரைப்படம் வாழ்க்கைப் பயணத்தில் நிறைய விசயங்களை கற்றுக் கொடுத்தது. எனக்கு மட்டும் அல்ல, இங்கு இருக்கும் அனைவருக்கும் இந்தக் கண்ணப்பா சிறந்த பயணமாக அமைந்தது. அனைத்து படங்களுக்கும் கஷ்டங்கள் வரும். அதுபோல் இந்தக் ’கண்ணப்பா’ படத்திலும் நாங்கள் ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொண்டோம். ஆனால், அவை அனைத்தையும் கடவுள் சிவன் பார்த்துக் கொண்டார். சிறந்த படைப்பாக ‘கண்ணப்பா’ படத்தை உருவாக்கியிருக்கிறோம். கடவுள் சிவனுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகை மதுபாலா பேசுகையில்,
“நிறைய விசயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்து, எதுவும் சொல்ல முடியாமல் போகும். அப்படி ஒரு நிலையில்தான் நான் இருக்கிறேன். இந்த படம் பண்ணுவதற்கு என்னை சிவன்தான் தேர்வு செய்தார். என்று விஷ்ணு சார் நேர்காணலில் சொன்னார். அதுபோலத்தான் நானும்.
சிறு வயதில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். யார் படத்தில் நடிக்க வேண்டும்… அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல், எதுவுமே தெரியாமல் நடிக்க வந்தவள் நான். நடிகையாக எப்படி அறிமுகமாக வேண்டும் என்றால், பெரிய பெரிய இயக்குநர்கள் பெயரை சொல்வார்கள், ஆனால் நான் அப்படி எல்லாம் சொல்லாமல், எதாவது ஒரு படம், இயக்குநர் யாராக இருந்தாலும் பரவாயில்லை என் முகம் திரையில் வர வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே நடிக்க வந்தேன்.
அது ஏ கிரேட் படமா, பி கிரேட் படமா, நல்ல படமா, கெட்ட படமா என்று எதையும் கேட்காமல் நடிக்க வந்தவள்தான் நான். அதுபோலத்தான் இந்த படத்தின் வாய்ப்பும் அமைந்தது. இந்தப் படத்திற்காக எனக்கு கால் வந்தபோது உடனே எஸ் சொல்லிவிட்டேன். என்ன கதாபாத்திரம், என்ன கதை என்று எதையும் கேட்கவில்லை. உடனே சம்மதம் தெரிவித்துவிட்டேன்.
இப்போது இந்தப் படத்தை பார்க்கும்போது, இரண்டாவது முறை எதையும் கேட்காமல் ஓகே சொன்னது சரிதான் என்று தோன்றுகிறது. என் கதாப்பாத்திரத்தை திரையில் பார்க்கும்போது மிகவும் சந்தோஷப்பட்டேன். நமக்கு பலர் மீது பல கோபங்கள் இருக்கும். ஆனால் அந்தக் கோபத்தை வெளிக்காட்ட முடியாது. இந்த படத்தில் சண்டைக் காட்சியில் எனக்கான கோபத்தை வெளிக்காட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாளை என்னிடம் கொடுத்து அடிக்க சொல்லியதும், எதிரே வந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்துவிட்டேன். இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தது சந்தோஷமாக இருந்தது.
இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது இருந்த ஒரே கஷ்டம், அந்த வெயிட்டான வாளைத் தூக்குவதுதான். போர் வீராங்கனையாக உடை அணிந்து கம்பீரமாக நிற்பேன். கையில் வாளைக் கொடுத்ததும், அதன் வெயிட் தாங்க முடியாது. கை எல்லாம் வலி எடுக்கும். அது ஒன்றுதான் கஷ்டமாக இருந்தது.
இந்தப் படத்தில் நடிக்க வந்தபோது, மோகன் பாபு சார் “1990-களில் நான் இரண்டு முறை உனக்கு வாய்ப்பளித்தேன். என்னுடன் சேர்ந்து ஏன் நடிக்கவில்லை..?” என்று கேட்டார். இப்போது அவர் படத்திலும் நடித்துவிட்டேன். அதனால் அவர் ஏன் நடிக்கவில்லை என்று கேட்க முடியாது. அதேபோல் 35 வருடங்களுக்குப் பிறகு மோகன்லாலுடன் சேர்ந்து நடித்து விட்டேன். அக்ஷய் குமார் படங்களிலும் நிறைய நடித்திருக்கிறேன், அவருடனும் இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சி.
இந்த படத்தின் மூலம் சிறந்த நட்பு எனக்கு கிடைத்திருக்கிறது. விஷ்ணு உடன் இணைந்து பயணித்தது மகிழ்ச்சி. கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் கண்ணப்பாவாக விஷ்ணு மஞ்சு சிறப்பாக பங்களித்திருக்கிறார். இயக்குநர் முகேஷ் குமார் சிங் மிக அமைதியானவர். அவரது பணி மிக சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. நடிகர் சம்பத் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். இந்த சிறப்பான ஒரு படக் குழுவினருடன் மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.
இளம் அம்மா என்ற இமேஜ் எனக்கு இருக்கிறது, தற்போது அந்த இமேஜை கண்ணப்பா படம் உடைத்து, போர் வீராங்கனை என்ற புதிய பிம்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. நான் அந்தக் கதாபாத்திரத்தில் மிக மகிழ்ச்சியாக நடித்தேன். இந்தப் படத்தின் காட்சியை பார்த்த நீங்கள் வியந்திருப்பீர்கள், என்று நினைக்கிறேன். படமும் மக்களை வியக்க வைக்கும் என்று நம்புகிறேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. திரையில் பார்க்கும்போது ரசிகர்களும் அதை உணர்வார்கள். நன்றி.” என்றார்.
நாயகன் விஷ்ணு மஞ்சு பேசுகையில்,
“சமீபகாலமாக சில சர்ச்சையான சம்பவங்கள் நடப்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றி நான் இங்கு பேச விரும்பவில்லை. அதே சமயம், என்ன நடந்தது? என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். கண்ணப்பா பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லண்டன் மற்றும் துபாய் நாடுகளிலும், இந்தியாவில் 8 இடங்களிலும் பணிகள் நடக்கிறது.
பொதுவாக படத்தின் காட்சிகள் அடங்கிய டிரைவ் இரண்டு காப்பிகள் எடுக்கப்படும். ஒன்று எடிட்டிங் ஸ்டுடியோவுக்கும், மற்றொன்று தயாரிப்பு அலுவலகத்திற்கும் அனுப்பப்படும், இதுதான் நம்முடைய வழக்கம். அதன்படி, கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதன் சில காட்சிகள் டிரைவ் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால், அதை எங்கள் தரப்பு கேட்கவில்லை. கிராபிக்ஸ் நிறுவனத்தினர் எங்கள் முகவரிக்கு அனுப்பி விட்டார்கள். எங்களுக்கு நிறுவன முகவரி மற்றும் ஜி.எஸ்.டி முகவரி என இரண்டு உள்ளது. ஜி.எஸ்.டி. முகவரி அப்பாவுடைய வீடு. அங்குதான் எங்கள் தொடர்புடைய அனைத்து கடிதங்கள் மற்றும் கூரியர்கள் வரும். சம்மந்தப்பட்டவர்கள் அதை அங்கு சென்று வாங்கிக் கொள்வோம்.
அதுபோல், எனக்கான அந்த டிரைவ் அந்த முகவரிக்கு வந்திருக்கிறது. அப்போது, மனோஜ் வீட்டில் இருக்கும் இரண்டு பேர் அந்த கூரியரை வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த விசயமே எங்களுக்கு தெரியாது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு கண்ணப்பா படத்தின் காட்சிகள் லீக் ஆனால் எப்படி இருக்கும் என்ற ஒரு எக்ஸ் பதிவு வெளியானது. அதை வைத்துதான் எங்களுடைய காட்சிகள் அடங்கிய டிரைவ் கைமாறியிருப்பது தெரிய வந்தது. சரி இதை பெரிதுப்படுத்தக் கூடாது என்று நினைத்தேன். சமாதானமான முறையில் அதை கேட்டோம். ஆனால் அதற்கு சரியான பதில் வரவில்லை. சரி, போலீஸ் மூலம் சமாதனமாக கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்து அதையும் செய்தோம். அப்போதும் எங்களுக்கு சரியான பதில் வரவில்லை. போலீஸும் முறையாக எப்.ஐ.ஆர். போடாமல் எங்களால் விசாரிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அப்போதுகூட இந்த தகவலை ஊடகங்களிடம் நான் தெரிவிக்கவில்லை.
போலீஸில் புகார் அளிக்கும்போது, அங்கிருந்த நிருபர் ஒருவர் மூலமாகத்தான் இந்தச் செய்தி வெளியானது. பிறகு என்ன செய்வது என்று அப்பாவிடம் கேட்டபோதுதான் வேறு வழியில்லை. எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டிய நிலை வந்தது. இப்போது எப்.ஐ.ஆர். பதிவு செய்துவிட்டோம். போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்தக் காட்சிகள் வெளியானாலும், அதை ரசிகர்கள் நிராகரிக்க வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை. காரணம், நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பு அதில் இருக்கிறது. அந்த உழைப்பை நீங்கள் திரையில் வந்து பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காகத்தான் நான் இந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன். இதுதான் இந்தப் பிரச்சனை.
நான் குடும்ப பிரச்சனைப் பற்றி பேச விரும்பவில்லை. அனைத்து குடும்பத்திலும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. அது சரியாகி விடும். இன்றுவரை எனது தம்பிக்கு என்ன பிரச்சனை… ஏன் அவர் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. தெரிந்தால் நிச்சயம் அதை சரி செய்ய நான் முயற்சிப்பேன். இந்தக் ‘கண்ணப்பா’ திரைப்படத்தை பொறுத்தவரை இதுவரை ‘கண்ணப்பா’ பற்றி வந்திருக்கும் படங்களைவிட மிக வித்தியாசமான அதே சமயம் பிரம்மாண்டமான படமாக இருக்கும். குறிப்பாக ‘கண்ணப்பா’ சிவன் பக்தராக மாறிய பிறகு என்ன நடந்தது என்பதைத்தான் அனைத்து படங்களும் காட்டியிருக்கின்றன. ஆனால், சிவ பக்தர் ஆவதற்கு முன்பு அவரது வாழ்க்கை எப்படி இருந்தது? என்பதை இந்தப் படத்தில் பார்க்கலாம். அதை சாதாரண படமாக அல்லாமல் விஷுவல் விருந்தாக பார்க்கும் அளவுக்கு படத்தை மிக பிரமாண்டமாக எடுத்திருக்கிறோம். நிச்சயம் இந்திய சினிமாவில் இந்தக் ‘கண்ணப்பா’ திரைப்படம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
படம் தொடர்பாக ஏகப்பட்ட கேள்விகள் எழலாம், ஆனால் வரலாறு மற்றும் இதிகாசங்கள் என்ன சொல்கிறதோ அதைத்தான் காட்சிகளாக எடுத்திருக்கிறோம். தணிக்கை குழுவினர் ஏகப்பட்ட கேள்விகளை முன் வைத்தார்கள். குறிப்பாக “கண்ணப்பா’ தனது வாயில் தண்ணீர் எடுத்து வந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. வட இந்தியாவில் ஏற்க மாட்டார்கள்” என்று சொன்னார்கள். “ஆனால், உண்மையில் அப்படித்தானே எழுதப்பட்டிருக்கிறது. உண்மையைத்தானே நாங்கள் காட்சியாக எடுத்திருக்கிறோம்…” என்று வாதிட்டேன். இதைவிட பெரிய விசயம், காதல் பாடலை பார்த்துவிட்டு, “கண்ணப்பா காதலித்தாரா?” என்று கேட்கிறார்கள். “சிவனும், பார்வதியும் காதலிக்கவில்லையா..? அவர்களுக்கு இடையே இருக்கும் காதல்தான் ‘கண்ணப்பா’ விடமும் இருக்கிறது…” என்று விளக்கம் அளித்தேன்.
இப்படி பல கேள்விகளை தணிக்கை குழுவினர் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி புரிய வைத்து படத்திற்கு சான்றிதழ் பெறப் போகிறேன் என்று தெரியவில்லை. அனைத்தையும் சிவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்காக எடுக்கப்பட்ட படம். நிச்சயம் அவர் அனைத்து தடைகளையும் தகர்த்தெரிவார் என்ற நம்பிக்கை இருக்கிறது…” என்றார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வரும் ஜூன் 27-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.