ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
நடிகர் மிர்ச்சி சிவா, பேசியதாவது..,
“ராம் சாருடன் படம் என்றம் கொஞ்சம் பயம் இருக்கதான் செய்தது. ’நானே இதுவரை செய்யாத படம் இது. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்’ என்று ஸ்கிரிப்ட் கொடுத்தார். உடனே ஒத்துக் கொண்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநராக மட்டுமில்லாமல் எல்லா வேலைகளும் அவர் எடுத்துப் போட்டு செய்தார். அவர் இன்னும் கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர். படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் அனைவரது ஆதரவும் வேண்டும்” என்றார்.
நடிகர் சித்தார்த், பேசியதாவது..,
”ராம் மிகச்சிறந்த படைப்பாளி. அவரது படைப்புகளில் உண்மையும் நேர்மையும் இருக்கு. அவரது படைப்புகளில் எனது பங்களிப்பு எதாவது ஒரு வகையில் இருக்கும் என்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நான் பாடியிருக்கும் பாட்டு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ். ரொம்ப ஜாலியான, அழகான படம் இது. ராம் சின்ன பசங்களிடம் நன்றாக வேலை வாங்குவார். மிதுனும் நன்றாக நடித்திருக்கிறார். சிவா முன்பிருந்தே எனக்கு பழக்கம். சிவாவுக்கு ஒரு நடிகராக இந்தப் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும். கிரேஸூடைய நடிப்பு சென்சேஷனலாக இருந்தது. ராம்-சிவா- கிரேஸ் மூன்று பேருடைய கூட்டணி நன்றாக வந்திருக்கிறது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். ஜூலை 4 எங்களுக்கு முக்கியமான நாள். நான் நடித்திருக்கும் ‘3 BHK’ மற்றும் ‘பறந்து போ’ இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவது மகிழ்ச்சி. குடும்பங்களுடன் நீங்கள் வந்து பார்க்கலாம். நன்றி”.
இயக்குநர் மிஷ்கின், பேசியதாவது..,
” இயக்குநர் ராம் இந்த கதை சொன்னதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போனது. ஒரு நாளைக்கு படவிழாவில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்து ஐந்து முதல் ஆறு ஃபோன் கால்கள் வருகிறது. இது போன்ற விழாவுக்கு என்னை அழைத்தால் இனிமேல் அதற்கான தொகையாக குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் கொடுத்து விடுங்கள். சீக்கிரம் சினிமாவை விட்டு போக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சினிமாவில் அவ்வளவு சந்தோஷமாக நான் இல்லை. மிகவும் சந்தோஷமாக படங்கள் செய்த காலம் போய்விட்டது. இப்போது அதிக போட்டி இருக்கிறது. ராம் படங்களை பார்க்கும் பொழுது எப்போதுமே அதிசயம் போல தான் இருக்கும். ‘பறந்து போ’ படமும் நிச்சயம் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் இருக்கும். அழகான படம்” என்றார்.
இயக்குநர் ராம், பேசியதாவது..,
” எல்லோரையும் போல நிறை குறைகள் இருக்கக்கூடிய சாதாரண மனிதன் நான். முதலில் இந்த படத்திற்கு யுவன் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், அவருடைய ஷெட்யூல் அடுத்தடுத்து பிஸியாக இருந்தது. படத்திற்கும் 20 பாடல்கள் தேவைப்பட்டதால் யுவனால் அந்த ஷெட்யூலில் செய்து தர முடியாததால் தான் சந்தோஷ் உள்ளே வந்தார். ஜியோ ஹாட்ஸ்டார் எனக்கு வேலை செய்வதற்கு மிகவும் இலகுவான இடம். பிரதீப்பை பார்த்தாலே தனி எனர்ஜி வரும். சிவா,கிரேஸ் போன்ற திறமையான நடிகர்களை என் படத்தில் பயன்படுத்திக் கொண்டது மகிழ்ச்சி. தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக வேலை செய்திருக்கின்றனர் இந்த செட்டில் தான் நாம் ரிலாக்ஸாக இருந்தேன். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை முதலில் பார்த்து வாழ்த்து சொன்னார். அவர் படம் பார்த்து வாழ்த்தியதுடன் உலக அளவில் வெளியிடுவது எங்களின் பெரும் பலம். படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.