‘லவ் மேரேஜ்’ (விமர்சனம்)  ஃபேமிலி என்டர்டெயினர்!

திருமண வயதினைத் தாண்டிய ராமச்சந்திரன் என்கிற ராம்,  சொந்தமாக ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். உள்ளூரிலேயே தொழில் செய்து வருவதால் அவருக்கு பெண் கொடுக்க மறுக்கின்றனர். ஒவ்வொரு வரனும் வெவ்வேறு காரணங்களால் தட்டிப்போகிறது. இதனால் அவரின் சொந்த பந்தங்களும், உள்ளூர் வாசிகளும் அவரை ராசியில்லாதவர் என முத்திரை குத்துகின்றனர். அவரும், அவரது குடும்பத்தினரும் பெண் பார்த்து… பார்த்து.. ஓய்ந்து விட்ட நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த (சுஷ்மிதா பட்) அம்பிகா என்பவர், அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்.

ராம் குடும்பத்தினர், நெருங்கிய உறவுகளுடன் கோவையிலிருக்கும் (சுஷ்மிதா பட்) அம்பிகாவின் வீட்டிற்கு செல்கின்றனர். பரஸ்பரம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. மாப்பிள்ளை ராம் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்கிறார். சந்தோஷமாக மதுரைக்கு கிளம்ப தயாராகும் சமயத்தில், அரசு, ‘கொரோனா’ ஊரடங்கு உத்தரவை அமல் படுத்துகிறது. இதனால், மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டிலேயே தங்க நேர்கிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ராம், அம்பிகாவிடம் நெருக்கம் காட்டுகிறார். ஊரடங்கு தளராமல் நாட்கள் செல்வதால், கல்யாணம செய்து வைக்க இரு வீட்டினரும் முடிவு செய்கின்றனர். அதன் படி நாள் குறிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடை பெறுகிறது. இந்த சமயத்தில் அம்பிகா தனது காதலனுடன் ஓடிவிடுகிறார். ராம் விரக்தி அடைகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘லவ் மேரேஜ்’ படத்தின் கலகலப்பான கலாட்டா கதை.

ராமச்சந்திரன் என்கிற ராம் கதாபாத்திரத்தில், விக்ரம் பிரபு தன்னை இலகுவாக பொருத்திக் கொண்டுள்ளார்.  அவர், திருமண வயதினைக் கடந்தவராக சிறப்பாக நடித்திருக்கிறார். கல்யாண ராசியில்லாதவன், அடுத்தவர்களின் கேலிப்பேச்சு இவைகளை தாண்டியவராக, இயலாமை, கோபம், காதல் தோல்வி போன்ற உணர்வுகளை கச்சிதமாக பிரதிபலித்துள்ளார். அதிலும் தலையில் நரைத்த ஒற்றை முடியை, கண்ணாடி பார்த்தபடி, கருப்பு முடிகளின் அடியே மறைக்கும் காட்சியில், அவரின் நடிப்பு சிறப்பு. இப்படி பல இடங்களில் நன்றாக நடித்திருக்கிறார்.

அம்பிகா கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் சுஷ்மிதா பட், சில காட்சிகளில் மட்டும் அழகாக தெரிகிறார். நடிப்பில் குறையில்லை.

அம்பிகாவின் தங்கையாக நடித்திருக்கும் மீனாட்சி தினேஷ், குறும்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.

அருள்தாஸ், ரமேஷ் திலக், கோடாங்கி வடிவேலு, ‘சித்தன்’ கே ஜி மோகன் ஆகியோர், படத்தினை கடைசி வரை கலகலப்பாக கொண்டு செல்வதற்கு பயன்பட்டுள்ளனர். இதில், வெட்டிங் போட்டோகிராபரான ரமேஷ் திலக் அல்ட்டிமேட் அட்டகாசம் செய்கிறார். அதற்கு மேலே அருள்தாஸ்.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், பெரிதாக கவனம் பெறவில்லை.

விக்ரம் பிரபுவின் அப்பா, அம்மாவாக நடித்த கஜராஜ், திவ்யா சிவக்குமார் உள்ளிட்டோரும் நன்றாகவே நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டனின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. இசை படத்தின் பலமாக இருக்கிறது.

மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு குறை சொல்லும்படி இல்லை. கலர்ஃபுல்லாக இருக்கிறது.

சில குறைகள் மற்றும் முன்னரே யூகிக்க கூடிய கதையாக இருந்தாலும், எழுதி, இயக்கியிருக்கும் சண்முக பிரியன், கலாட்டா, காதல் கல்யாணத்தை கலகலப்புடன் குடும்பம் சகிதமாக, ரசிக்கும் வண்ணம் இயக்கியிருக்கிறார்.

‘லவ் மேரேஜ்’ –  ஃபேமிலி என்டர்டெயினர்!