‘ஃப்ரீடம்’ – விமர்சனம்!

‘விஜய கணபதி பிக்சர்ஸ்’ சார்பில் பாண்டியன் பரசுராமன், சுஜாதா பாண்டியன் ஆகியோரது தயாரிப்பில் வெளிவந்துள்ள படம், ஃப்ரீடம். சத்திய சிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் , மு.இராமசாமி, ரமேஷ் கண்ணா, போஸ் வெங்கட், ஆண்டனி, மணிகண்டன் , மாளவிகா அவினாஷ், ரீல்ஸ் அம்ருதா, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு என்.எஸ். உதயகுமார். இசை ஜிப்ரான். எடிட்டிங் என். பி .ஸ்ரீகாந்த்.

பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசால் திட்டமிட்டு, ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட  இனப்படுகொலையை கண்டித்த ‘விடுதலை புலி’ அமைப்பினைச் சேர்ந்த 43 பேர், இந்திய அரசால் கைது செய்யப்பட்டு வேலூர் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 1995 ஆண்டு 15 ஆம் தேதி, சுரங்கம் தோண்டி தப்பித்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அகதிகள் தப்பியதாக  இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

‘ஃப்ரீடம்’ திரைப்படத்தின் கதைப்படி, பேரினவாத சிங்கள அரசை எதிர்த்து விடுதலை புலிகள் 3 ஆம் கட்ட உச்சகட்டப்போரினை நடத்திய சமயம். இலங்கையிலிருந்து, தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரத்துக்கு வருகின்றனர். அந்த சமயத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுகிறார். இந்தியா முழுவதும் பதற்றம் ஏற்படுகிறது. அகதிகளாக வந்த பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார்கள். அதில், இலங்கையைச் சேர்ந்த சசிகுமாரும் ஒருவர். கைது செய்யப்பட்ட இவர்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதோடு, பல்வேறு சித்ரவதைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். அதன் காரணமாக சுரங்கம் தோண்டி தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். அதன் பிறகு என்ன நடந்த்து என்பது தான் ஃப்ரீடம் படத்தின் கதை.

இயக்குநரும், நடிகருமான சசிகுமார், ‘மாறன்’ கதாபாத்திரத்தில் வழக்கமான நடிப்பினை கொடுத்துள்ளார். திரைக்கதையில் போதிய அழுத்தமில்லாத இவரது கதாபாத்திரத்தின் தன்மை பெரிதாக ரசிகர்களை ஈர்க்கமுடியவில்லை. அதேபோல் அவரது மனைவியாக நடித்த லிஜோமோல் ஜோஸ் நடிப்பும் அப்படியே!

அகதிகளின் வழக்கறிஞராக மாளவிகா அவினாஷ், வேலூர் கோட்டை ஜெயிலராக வரும் சுதேவ் நாயர், ராமேஸ்வரம் காவல்துறை அதிகாரியாக போஸ்ட் வெங்கட், ஈழத்து பெரியவராக மு. இராமசாமி போன்றோரின் கதாபாத்திரங்களும், போதிய அழுத்தமின்றி உருவாக்கப்பட்டதால்  எந்தவிதமான உணர்வினையும் வெளிப்படுத்த வில்லை.

உணர்ச்சிகரமான காட்சிகளும் உணர்வுபூர்வமான தருணங்களும் நிறைந்த படமாக ‘ப்ரீடம் ‘உருவாகி  இருக்கிறது.

ஃப்ரீடம் – தமிழனா இருந்தா லைக் பண்ணு. எனும் வகையிலான படம்!