அறிமுக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் & ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரித்து, அறிமுக நாயகன் ருத்ரா, மிதிலா பால்கர் , நிர்மல் பிள்ளை, மிஷ்கின், கருணாகரன், கீதா கைலாசம் மற்றும் பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள படம், ‘ஓஹோ எந்தன் பேபி’. இதில் விஷ்ணு விஷால், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
திரைப்பட இயக்குநராகும் தீவிர முயற்சியிலிருப்பவர், (ருத்ரா) அஸ்வின். இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான இவருக்கு, நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கதை சொல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஏற்கனவே வைத்திருந்த கதைகளை சொல்ல, விஷ்ணு விஷாலிற்கு எந்தக்கதையும் பிடிக்காமல் போகிறது. விஷ்ணு விஷாலின் மேனேஜர் ரெடின் கிங்ஸ்லியின் அறிவுரைப்படி, ஒரு காதல் கதையை அவரிடம் சொல்கிறார். அது அவருக்கு மிகவும் பிடித்துப்போகிறது. ஆனாலும் க்ளைமாக்ஸை மாற்றச்சொல்லி விடுகிறார். அதற்கு அஸ்வின் மறுக்கிறார். ஏன்? மறுக்கிறார். அஸ்வின் இயக்குநராக ஆனாரா, இல்லையா? என்பது தான், ‘ஓஹோ எந்தன் பேபி’. படத்தின் இளமை துள்ளும் ஜாலியான காதல் கதை!
இளைஞர்களுக்கான கலக்கலான காமெடிப்படம். அறிமுக நாயகன் ருத்ரா, தமிழுக்கு அறிமுகமாகும் நாயகி மிதிலா பால்கர், நாயகனின் நண்பர் என இப்படி பல நடிகர்கள் புது முகங்களாக இருந்தாலும் அது நடிப்பில் தெரியவில்லை. அஸ்வின் தனது பள்ளிப்பருவத்தில் நடந்த சம்பவங்களை, விஷ்ணு விஷாலிடம் கதையாக விவரிக்கும்போது சுவாரசியம். அஸ்வினை, அவரது சீனியர் மாணவி காதலில் வீழ்த்தும் காட்சியும், பிறகு துரத்தி விடும் காட்சியும் சிரிப்பு + கவர்ச்சி. பெண் அமைப்பினர் கண்டனக்குரல் எழுப்பக்கூடியக் காட்சி! அடுத்தாக, முதல் அத்தியாயம் பிறகு மூன்றாவது அத்தியாயம் என கதை சொல்லும் காட்சிகளில், காமெடிக்கும் பஞ்சமில்லை.
அறிமுக நாயகன் ருத்ரா, முதல் படத்திலேயே அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் நடித்திருக்கிறார். பள்ளி மாணவனாக, கல்லூரி மாணவனாக, உதவி இயக்குநர் வேலைக்கு செல்லும் இளைஞனாக, அனைத்து விதமான காட்சிகளிலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். காதலியுடன் சண்டை போடும் காட்சிகளிலும், சீனியர் மாணவியிடம் மாட்டிக்கொண்டு கதறும் காட்சியிலும் சிறப்புகவனம் பெறுகிறார்.
தமிழில் அறிமுகமாகியிருக்கும் மராட்டிய நடிகை மிதிலா பால்கரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். காட்சிகளுக்கேற்ற அனைத்து உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துகிறார்கள்.
நடிகராகவே நடித்திருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநராகவே நடித்திருக்கும் மிஷ்கின், இருவரும் திரைக்கதை நகர்வுக்கு பலம் சேர்த்திருப்பதோடு, படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்கள். குறிப்பாக, மிஷ்கினின் ‘க்ளைமாக்ஸ்’ ஷூட்டிங் ஸ்பாட் காட்சி ரகளை!
ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை, படத்தொகுப்பு என தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பான முறையில் பணிபுரிந்துள்ளனர்.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம குமார், இன்றைய இளைஞர்களின் காதல், குடும்ப உறவுகளை புரிந்து கொள்ளும் நிலை, இவற்றின் பின்னணியில் ஜாலியான காதல் படத்தை ரசிக்கும் வண்ணம் கொடுத்திருக்கிறார்.
‘ஓஹோ எந்தன் பேபி’ – இளமை கொண்டாட்டம்!