‘மாரீசன்’ – (விமர்சனம்) ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்!

‘அல்சைமர்’ (ஞாபக மறதி) நோயினால் பாதிக்கப்பட்ட, வீட்டிற்குள் சங்கிலியால்  கட்டப்பட்டிருந்த, வடிவேலுவை, அவரின் விருப்பப்படி விடுவிக்கிறார், பகத் பாசில்.  அதன் பிறகு இருவரும் கோவையிலிருந்து திருவண்ணாமலைக்கு பயணிக்கின்றனர். அப்போது வடிவேலுவிடமிருக்கும் 25 ரூபாயை திருட முயற்சிக்கிறார், பகத் பாசில். பயணம் முடியும் இடத்தில் வடிவேலுவின் இன்னொரு முகத்தை பார்த்து கொல்லத்துடிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை!

வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் சிறப்பாக நடிக்கத்தெரிந்த நடிகர்கள். இவர்களை வைத்துக்கொண்டு இப்படி ஒரு சொதப்பலா? என கேட்கத்தோன்றும் மெதுவாக, சுவாரசியமில்லாமல் செல்லும் முதல் பாதி. இடைவேளை காட்சி சற்று நிமிர்ந்து உட்கார வைக்கிறது. சிலரால் யூக்கிக்க முடியும் காட்சிகள், யூகிக்க முடியாத காட்சிகள் என செல்லும் இரண்டாம் பாதி.மிது தான் மொத்த படமும்.

அல்சைமர் நோயாளியாக,  ஒரு சில காட்சிகளில், சிறந்த  மிரட்டலான நடிப்பினை கொடுத்திருக்கிறார், வடிவேலு. பகத் பாசிலும் சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார். ஆனாலும் இயக்குநர் இவர்களை சரியாக பயண் படுத்தவில்லையோ எனத்தோன்றுகிறது.

இவர்களுடன் கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா, லிவிங்ஸ்டன், பி.எல்.தேனப்பன், கிருஷ்ணா, ஹரிதா ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கேற்ப நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில், பாடல்களும், பின்னணி இசையும் பெரிதாக சொல்லும்படியாக இல்லை! சில இடங்களில் மட்டுமே பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார், கிருஷ்ணமூர்த்தி.  இன்னும் கூடுதல் சுவாரசியங்களை உருவாக்கியிருக்கலாம்.

விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சொல்ல வேண்டிய ஒரு கதையை, இயக்குநர் சுதீஷ் சங்கர் ஏனோ தானோவாக சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘மாரீசன்’ ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்!