ஹவுஸ் மேட்ஸ்’ –  விமர்சனம்!

‘ஹவுஸ் மேட்ஸ்’, இது ஒரு அறிவியல் புனைவு திரைப்படம். இதில் தர்ஷன், அர்ஷா சாந்தினி பைஜூ, காளி வெங்கட், வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தர்ஷன், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்குகிறார். கனவு வீடு, காதல் மனைவி அர்ஷா சாந்தினி பைஜூவுடன் வாழ்க்கை சந்தோஷமாக செல்கிறது. ஒரு சில வாரங்களுக்குள்ளேயே அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை எதிர்கொள்கிறார், அர்ஷா சாந்தினி பைஜூ. இதை தர்ஷனிடம் தெரிவிக்கிறார். ஆனால், அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சில நாட்கள் சென்ற நிலையில், அவர்களது வீட்டினில், கண்களுக்கு புலப்படாத வகையில் இன்னொரு குடும்பம் வசிப்பது தெரிய வருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே ‘ஹவுஸ் மேட்ஸ்’.

பிரபஞ்சத்தில் ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள் ஏராளம். அதில் ஒன்றை, தனது கற்பனையின் மூலமாக, வித்தியாசமான கதையை உருவாக்கியிருக்கிறார், இயக்குநர் டி.ராஜவேல்.  ஒரு மின்னல் மூலமாக ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசித்து வருவதாக, சுவாரசியமாக கதையை உருவாக்கிய அவர், அதற்கான திரைக்கதையில் போதிய கவனம் செலுத்தவில்லை. இது பலருக்கு புரியாத, ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருக்கிறது.

கதையின், முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் தர்ஷன், அர்ஷா சாந்தினி பைஜூ, காளி வெங்கட்,  வினோதினி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். சில இடங்களில் காளி வெங்கட்,  வினோதினி  ஆகிய இருவரும், மிகையான நடிப்பினை கொடுத்திருக்கிறார்கள். இவர்களுடன் தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே. ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷின் ஒளிப்பதிவு படத்தின் பலமாக இருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் டி.ராஜவேல், நம்ப முடியாத விஷயத்தை நம்பும்படியாக கொடுக்கவில்லை! கிளைமாக்ஸ் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். இருந்தாலும், புதிதாக சிந்தித்த அவரை பாராட்டலாம்!