‘சரண்டர்’ –  விமர்சனம்!

சரண்டர் திரைப்படத்தினை ‘அப்பீட் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது. கௌதமன் கணபதி இயக்கியிருக்கிறார். இதில் ‘பிக் பாஸ்’ தர்ஷன், பாடினி குமார், லால், சுஜித் சங்கர், மன்சூர் அலிகான், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சென்னைக்குட்பட்ட ஒரு காவல் நிலையம். அந்த காவல் நிலையத்தில், ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறவிருக்கும் காவலர், லால். புதிதாக பணிக்குச்சேர்ந்த பயிற்சி உதவி ஆய்வாளர் தர்ஷன். பழக்கமில்லாத இருவருக்குள்ளும் நல்ல நட்பு உருவாகிறது.

அந்த காவல் நிலையத்தில் தனது துப்பாக்கியை ஒப்படைக்கிறார், நடிகர் மன்சூர் அலிகான். (நடிகராகவே நடித்துள்ளார்.) அந்த துப்பாக்கி காணாமல் போகிறது. அரசியல் பலமிக்க சுஜித் சங்கர், கட்சிக்கு பல கோடி ரூபாய் கொடுக்கிறார். அதுவும் காணாமல் போகிறது. அரசியல்வாதிகளுக்குள் உருவான பகை காரணமாக கள்ளச்சந்தையில் துப்பாக்கி வாங்குகிறார், ஒருவர். இந்த மூன்று சம்பவங்களும் ஒரு இடத்தில் சந்திக்க, அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன? என்பதை, பரபரப்பகவும், விறுவிறுப்பாகவும் சொல்வது தான், சரண்டர்.

இயக்குநர் கௌதமன் கணபதி, கதாபாத்திரங்களை நன்கு வடிவமைத்திருப்பதால், ரசிகர்கள் படத்துடன் ஒன்றிவிட முடிகிறது. க்ளைமாக்ஸ் வரை, யூகிக்க முடியாத திரைக்கதையும் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. அரசியல்வாதிகளுடன் காவல்துறை இயங்கும் விதம். இந்த இரண்டும் கைகோர்க்கும்போது நேர்மையான காவலர்களின் மனநிலை, காவலர்களுக்குள்ளான ஈகோ. கட்டளைக்கு கீழ்ப்படிதல் என அனைத்தும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

‘பிக் பாஸ்’ தர்ஷன், நாயகனாக நடித்திருக்கிறார். அவரது தோற்றமும், முகபாவனைகளும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. காவல்துறை சீறுடை கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. அவரது நடிப்பும், தோற்றமும் கதாபாத்திரத்திற்கு கம்பீரம் சேர்த்துள்ளது.

ஓய்வு பெறும் நிலையில், நேர்மையான காவலராக மனதுக்குள்ளேயே புழுங்கும் காவலராக நடித்திருக்கும் லால், தனது அனுபவமிக்க நடிப்பின் மூலம் ‘தலைமை காவலர்’ கதாபாத்திரத்தை பெருமை படுத்தியிருக்கிறார்.

வில்லனாக சுஜித், ரவுடி கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். முனிஷ்காந்த் வரும்  ஒரு சில காட்சிகள் சிரிக்க வைக்கிறது. பாடினி குமார், அருள் டி.சங்கர், நடிகராகவே நடித்திருக்கும் மன்சூர் அலிகான், கெளசிக், சுந்தரேஸ்வரன் போன்றோரும் கவனிக்கத்தக்க வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு, சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக இரவு நேர காட்சி. இசையமைப்பாளர் விகாஷ் படிஷாவின் பின்னணி இசை,  காட்சிகளுக்கு விறுவிறுப்பினை கூட்டுகிறது. படத்தொகுப்பாளர், ரேணு கோபாலின் படத்தொகுப்பு நேர்த்தி.

‘சரண்டர்’ –  விறுவிறுப்பான த்ரில்லர்!