‘ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ்’ சார்பில், மவுலி எம் ராதாகிருஷ்ணா தயாரித்துள்ள திரைப்படம், உசுரே. இதில் டீஜய் அருணாசலம், ஜனனி, மந்த்ரா, ஆதித்யா கதிர், தங்கதுரை, கிரேன் மனோகர், செந்தில் குமாரி, பாவல் நவகீதன், மெல்வின் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்க, எழுதி இயக்கியிருக்கிறார், நவீன் டி கோபால்.
அனுசுயாவின் (மந்த்ரா) மகள் ரஞ்சனா (ஜனனி). அம்மாவின் தூண்டுதலின் பேரில் ரஞ்சனா, இளைஞர்கள் மீது காதல் வலைவீசி, அதன் மூலம் பணம் கறந்து வருகின்றனர். அப்படியாக சித்தூர் அருகே இருக்கும் இளைஞன் ராகவாவை (டீஜய் அருணாசலம்), காதல் வலைவீசு கவிழ்த்து விடுகிறார், ரஞ்சனா. திட்டமிட்டபடி பணம் பறிக்கும் சமயத்தில், ரஞ்சனா உண்மையிலேயே ராகவாவின் மீது காதல் வயப்பட்டுவிடுகிறார். அதோடு அவரிடமிருந்து பணம் பறிக்கவும் மறுக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், உசுரே படத்தின் கதை.
டீஜய் அருணாசலம், கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவர், கதாநாயகியாக நடித்திருக்கும் ‘பிக் பாஸ்’ பிரபலம் ஜனனியை விரட்டி, விரட்டி, உருகி உருகி காதலிக்கிறார். ஆடல் பாடல் காட்சிகளிலும், வசனக் காட்சிகளிலும் குறை சொல்ல முடியாத அளவில் நடித்திருக்கிறார். கதாநாயகி ஜனனி, இளமையாகவும், அழகாகவும் இருக்கிறார். ஸ்கோர் செய்ய வேண்டிய இடங்களில் சற்றுத் தடுமாறியிருக்கிறார். 90 களில் ரசிகர்களை கலங்கடித்த கவர்ச்சி கதாநாயகி மந்த்ரா வில்லியாக நடித்திருக்கிறார்.கிரேன் மனோகர், செந்தி குமாரி, தங்கதுரை, ஆதித்யா கதிர், பாவல் நவகீதன், மெல்வின் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரத்தின் மூலம் திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கிரண் ஜோஷ் இசை, காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது. ஒளிப்பதிவாளர் மார்க்கி சாய், காட்சிகளை ரசனையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார். செய்தி தாள்களில் இடம்பெறும் ஒரு செய்தியை கருப்பொருளாக்கி, காதலை மய்யப்படுத்தி, முடிந்தவரை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்.
‘உசுரே’ – பரவாயில்லை!