‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’. –  விமர்சனம்!

வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ்வரன் தேவதாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பினில் வெளிவந்துள்ள படம், ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’. அனீஸ் அஷ்ரஃப் இயக்கியிருக்கிறார். ‘சின்னத்தம்பி’ புரடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளரின் மகன் வெற்றி. அந்த எழுத்தாளர் குறித்த தொடர் ஒன்றை எழுதுவது தொடர்பாக நிருபர் ஷில்பா மஞ்சு நாத், வெற்றியை சந்திக்கிறார்.இந்நிலையில், காவல்துறை அதிகாரி ராமையா, ஒரு கொலை தொடர்பாக வெற்றியின் உதவியை நாடுகிறார். அவரும் கொலை குறித்த தடயங்களை கண்டறிந்து, கொலையாளியை கண்டுபிடிக்க உதவுகிறார். இதற்கிடையே ராமையாவின் மகள்  தற்கொலை செய்து கொள்கிறார். தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய வெற்றியை அனுகுகிறார். காரணத்தை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பதே ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’.

நாயகன் வெற்றி, இந்தப்படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறார். அது அவருக்கான கதாபாத்திரத்தின் தன்மையா, நடிப்பா தெரியவில்லை. எப்படியோ அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது. நிருபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத்துக்கு, பெரிதாக நடிப்பதற்கு காட்சிகள் இல்லை. தொடக்கக் காட்சிகளில் வருகிறார். இடையில் காணாமல் போகிறார். மீண்டும் க்ளைமாக்ஸில் எட்டிப்பார்க்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக தம்பி ராமையா. தனது வழக்கமான கடியை வாரி வழங்கியிருக்கிறார். இவர் ஒரு கொடுமை என்றால், ரெடின் கிங்ஸ்லி இன்னொரு கொடுமை. சிங்கப்பூரில் ‘தேசிய ஆணழகன்’ பட்டத்தை வென்ற மகேஷ்வரன் தேவதாஸ், வில்லனாக நடித்திருக்கிறார். தோற்றத்தில் பயமுறுத்துகிறார். முடிந்தவரை நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஜே.ஆர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே! அரவிந்தின் ஒளிப்பதிவும், விஷாலின் படத்தொகுப்பும் படத்தின் பலம்.

எழுதி இயக்கியிருக்கும் அனீஸ் அஷ்ரஃப், பெண்களுக்கெதிரான குற்றங்களை, சைக்கோ த்ரில்லர் பாணியில் கொஞ்சம் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்.  காவல் துறையின் புலன் விசாரணையில் தனி மனிதர் ஈடுபடுவது சாத்தியாமா? போன்ற ஒரு சில வற்றை நீக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

’சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ , சுமாரான படம்!