அக்யூஸ்ட், திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார், பிரபு ஸ்ரீனிவாஸ். இதில் உதயா, ஜான்விகா காளக்கேரி, அஜ்மல், பவன், சுபத்ரா, ஸ்ரீதர், தயா பன்னீர்செல்வம், தீபா பாஸ்கர், டி.சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எம்.எல்.ஏ பவன், அவரது வீட்டுக்குளேயே உதயாவால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்படுகிறார். போலீஸால் கைது செய்யப்படும் அவரை, வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் பொறுப்பு போலீஸ் கான்ஸ்டபிள் அஜ்மலுக்கு கொடுக்கப்படுகிறது. அதன்படி தனது சக போலீஸாருடன் அரசுப் பேருந்தில் உதயாவை அழைத்து செல்கிறார். வழியில், ஒரு கும்பல் பஸ்ஸூக்குள் புகுந்து உதயாவை கொலை செய்ய முயற்சிக்கிறது. இந்த கும்பலின் தாக்குதலில் போலீஸ் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். மற்ற வர்கள் காயமடைகின்றனர். அஜ்மலும், உதயாவும் சிறு காயங்களுடன் தப்பிச்செல்கின்றனர். இதன் பிறகு, போலீஸூம் உதயாவை என்கவுன்ட்டர் செய்ய முயற்சிக்கிறது. இவற்றிலிருந்து மீட்டு, உதயாவை கோர்ட்டுக்கு அஜ்மல் அழைத்து சென்றாரா, இல்லையா? என்பதை சொல்வதே ‘அக்யூஸ்ட்’.
கதாநாயகனாக நடித்திருக்கும் உதயா, காதல், காமெடி, அடிதடி சென்டிமென்ட் என அனைத்து ஏரியாவையும் தொட்டுச்செல்கிறார். காதல் கிறக்கத்தில், நாயகி ஜான்விகா காளக்கேரியுடன் நெருக்கமாக நடித்திருக்கிறார். அவருடன் டான்சிலும் கலக்கியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா காளக்கேரி, வனப்புடன் வலம் வருகிறார். நடனத்தில் நளினமான அசைவுகளின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறார். க்ளைமாக்ஸில் கண்கலங்க வைக்கிறார். போலீஸ் கான்ஸ்டபிளாக அஜ்மல். கவனிக்கத்தக்க வகையில் நடித்திருக்கிறார். அஜ்மலின் ஜோடியாக சாண்டிகா. இவரது நடிப்பிலும் குறையில்லை. யோகி பாபு, சிரிக்க வைக்கிறார். பவன், சுபத்ரா, ஸ்ரீதர், தயா பன்னீர்செல்வம், தீபா பாஸ்கர், டி.சிவா ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிப்பினை கொடுத்து இருக்கிறார்கள்.
எழுதி, இயக்கியிருக்கும் பிரபு ஸ்ரீனிவாஸ், கதையை பல திருப்பங்களோடு சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால் அவை யூகிக்க கூடியதாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை.
‘அக்யூஸ்ட்’ – பெரிதாக ஈர்க்கவில்லை!