‘ஜேஷன் ஸ்டுடியோஸ்’ சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ கடந்த வாரம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
வெளியான நாள் முதல் நேர்மறை விமர்சனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாராட்டு, மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் ‘அக்யூஸ்ட்’, திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இதன் காரணமாக, காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தயாரிப்பாளர்கள் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம் மற்றும் எம். தங்கவேல் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் கர்நாடகாவிலும் ‘அக்யூஸ்ட்’ வசூல் சிறப்பாக அமைந்துள்ளதால் அங்கும் காட்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படக்குழுவினர் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தபோது அவர்கள் படத்தில் நடித்தவர்களை அவரவர் கதாபாத்திரங்களின் பெயர்களை வைத்தே அழைத்து மகிழ்ந்தனர். குறிப்பாக நாயகன் உதயாவை அவரது கதாபாத்திரமான கணக்கு என்று அழைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இரண்டு மணி நேரம் 10 நிமிடம் போனதே தெரியவில்லை என்று ரசிகர்கள் படக்குழுவினரிடம் தெரிவித்தனர். பஸ் சண்டை காட்சி உள்ளிட்ட பல காட்சிகளை அவர்கள் நினைவு கூர்ந்து பாராட்டினார்கள்.
இது குறித்து பேசிய உதயா,
“இந்த வெற்றியை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். இதற்கு காரணமான படக்குழுவினர், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கை ஆக்குகின்றோம்,” என்றார்.
‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். நடிகர் உதயாவின் வெள்ளி விழா ஆண்டு திரைப்படமான ‘அக்யூஸ்ட்’, உதயாவின் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். ‘அக்யூஸ்ட்’ படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, முன்னணி எடிட்டரான கே.எல்.பிரவீன் படத் தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கம் – ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.