‘இந்திரா’ – விமர்சனம்!

‘இந்திரா’ திரைப்படத்தினை ‘ஜே எஸ் எம் மூவி புரொடக்‌ஷன்’ , ‘எம்பரர் என்டர்டெயின்மென்ட்’  நிறுவனங்களின் சார்பில், ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். இதில் வசந்த் ரவி, சுனில், மெஹ்ரின் பிர்சாடா, அனிகா சுரேந்திரன், கல்யாண் , ராஜ்குமார், சுரேஷ்மூர், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார் சபரிஷ் நந்தா.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் (வசந்த் ரவி) போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரகுமார். தனது  மனைவி (மெஹ்ரின் பிர்சாடா) கயல் உடன் வசித்து வருகிறார். இந்திரா, ஒரு நாள் குடி போதையில் விபத்தை ஏற்படுத்தியதன் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். திரும்ப பணிக்கு சேர்வதற்கு முயற்சிக்கும் போது உயரதிகாரிகள் அவரை சேர்க்க மறுக்கிறார்கள். இந்நிலையில், அடுத்தடுத்து ஆண் மற்றும் பெண்கள் தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக கொலை செய்யப்படுகிறார்கள். போலீஸார் திணறுகின்றனர்.

இந்திராவிற்கு திடீரென கண்பார்வை பறிபோகிறது. அவரது மனைவி கயலின் ஆறுதலுடன் இருந்து வருகிறார்னொரு நாள் கயல் கொலை செய்யப்படுகிறார். இந்திரா, மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகிறார். அதன் பிறகு, கொலையாளியை கண்டுபிடிக்க தானே களமிறங்குகிறார், இந்திரா. கொலையாளி யார், எதற்காக இந்த கொலைகளைச் செய்கிறார்? என்பதே ‘இந்திரா’ படத்தின் கதை.

இந்திரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வசந்த் ரவி, மன அழுத்தம், குடிப்பழக்கத்திற்கு ஆளானவராக, அந்த கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்திருக்கிறார். மனைவியுடனான காதல், கோபம், இயலாமை ஆகிய உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். பார்வையிழந்தவராக கொலையாளியுடன் நடக்கும் சண்டைக்காட்சியில் கைதட்டல்களை பெறுகிறார்.

கயல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மெஹ்ரீன் பிர்சாடா நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை. கிடைத்த காட்சிகளில் வந்து போகிறார்.

அனிகா சுரேந்திரனும் அப்படியே வந்து போகிறார். இவரது காதலனாக நடித்திருப்பவர் கவனம் ஈர்க்கிறார்.

அபிமன்யு என்ற சீரியல் கில்லராக நடித்திருக்கிறார், தெலுங்கு நடிகர் சுனில். கொடுத்த கதாபாத்திரத்தில் குறைவில்லாமல் நடித்துள்ளார்.

வசந்த் ரவியின் நண்பராக நடித்திருக்கும் ராஜ்குமார், போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கும் நடன இயக்குநர் கல்யாண் ஆகியோரும் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவு சில காட்சிகளில் மிரட்டியுள்ளது.

அஜ்மல் தஹ்சீன் இசை ஓகே!

முதல் பகுதியை விட, இரண்டாம் பகுதி விறுவிறுப்பாக நகர்கிறது.

மொத்தத்தில் ‘இந்திரா’ ஒரு சில டிவிஸ்டுகளுடன் கூடிய ஆவரேஜ் க்ரைம் த்ரில்லர்!