‘பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ்’ சார்பில், முரளி கபீர்தாஸ் தயாரித்து வரும் படம், அந்த 7 நாட்கள். இப்படத்தினை, இயக்குநர் கே பாக்யராஜின் உதவியாளர் எம்.சுந்தர் இயக்கி வருகிறார். இப்படத்தில் கே.பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், பாரதிராஜா, அற்புதன் விஜயன், பேபி வைணுவ ஸ்ரீ, பரோட்டா முருகேசன், சாந்தகுமார், கார்த்தி, பிரதீப், ஜனா, ராம்குமார், தனசேகரன், மூர்த்தி, அப்பல்லோ ஹரி, விஜயராஜ், இளங்கோவன், ஜெய்மன், யூசுப், ஆர்.ரூபகரன், சோபியா, ரவி மற்றும் பங்கஜ் எஸ்.பாலாஜி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்திருக்க, சச்சின் சுந்தர் இசையமைத்து வருகிறார்.
கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த, அந்த 7 நட்கள் படத்திற்கும், இதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? என இயக்குநர் எம்.சுந்தரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது..,
“நான் கே.பாக்யராஜ் சாரிடம் ‘சொக்கத்தங்கம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன், பிறகு அவருடைய டிவி சீரியல்களுக்கான கதை விவாதங்களில் பங்கேற்றேன். இந்த படத்தின் கதையை படமாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன், அப்போது தான் சார் கதை கேட்கும் தகவல் கிடைத்தது, அவரிடம் கதை சொன்னேன், அவருக்கு பிடித்திருந்ததால் இந்த படம் உருவானது.
நான் இந்த கதையை எழுதி முடித்ததுமே, பாக்யராஜ் சாரிடம் பணியாற்றியதால், அவரது பட தலைப்புகளை பயன்படுத்த வேண்டும், என்று முடிவு செய்தேன். அதன்படி, ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ மற்றும் ‘அந்த 7 நாட்கள்’ தலைப்புகளை தேர்வு செய்தேன், பாக்யராஜ் சாரிடம் கதை சொல்லிவிட்டு, இந்த இரண்டு தலைப்புகளில் எதை கொடுத்தாலும் எனக்கு சம்மதம் என்றேன், அவர் ‘அந்த 7 நாட்கள்’ தலைப்பு சரியாக இருக்கும் என்றார். அதேபோல் தயாரிப்பாளரும் இந்த தலைப்பு கதைக்கு சரியாக இருக்கும் என்றதால், இதை தேர்வு செய்தேன்.
பாக்யராஜ் சார் படத்திற்கும், எனது ‘அந்த 7 நாட்கள்’ படத்திற்கும் கதை உள்ளிட்ட எந்த விசயத்திலும் ஒரு சதவீதம் கூட சம்மந்தம் இருக்காது. ஆனால், இந்த தலைப்பு என் கதைக்கு மிக பொருத்தமான தலைப்பு. காரணம், படத்தில் 7 நாட்களுக்குள் ஒரு விசயத்தை செய்து முடிக்க கூடிய கெடு ஹீரோவுக்கு இருக்கும், அது என்ன என்பது சஸ்பென்ஸ். அதே சமயம், இது திரில்லர் படம் இல்லை, முழுக்க முழுக்க காதல் கதை தான், அதில் திரில்லரை லேசாக சொல்லியிருப்பேன்.
படத்தின் நாயகனுக்காக சுமார் 15 நபர்களை பார்த்தோம், ஆனால் யாரும் அமையவில்லை. பிறகு இன்ஸ்டா மூலம் அஜித்தேஜ் என்ற நபரை பார்த்த போது அவர் சரியாக இருப்பார் என்று தோன்றியது, அவரை அழைத்து பேசி, ஆடிஷன் செய்த போது, அவர் கதைக்கான ஹீரோவாக சரியாக இருந்தார். அவர் தெலுங்கு மொழி பேசுபவர், அவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. அவரிடம் ஏழு மணி நேரம் ஆங்கிலத்தில் கதை சொன்னேன். அவரும் கதையை நன்றாக உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகியையும் இன்ஸ்டா மூலமாகத்தான் தேர்வு செய்தோம், அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். நான் உட்பட படத்தில் பணியாற்றியிருக்கும் முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் புதியவர்கள் தான். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் மிக தெளிவாக இருந்தார். இசையமைப்பாளர் சச்சின் சுந்தர் என் மகன் தான். என் மகன் என்பதற்காக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அவருடைய திறமைக்காக தான் தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். படத்தை தயாரித்தோம், பணம் கொடுத்தோம் என்று இல்லாமல் கதை மற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு என அனைத்திலும் தயாரிப்பாளர் இணைந்து செயல்பட்டார். முக்கியமாக புதியவர்களாக இருக்க வேண்டும், திறமையானவர்களாக இருக்க வேண்டும், என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு தயாரிப்பாளர் அனைவரையும் தேர்வு செய்தார், அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு பெருமை.” என்றார்.
அந்த 7 நாட்கள் படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் 45 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.