விஜய் கௌரிஷ், ஸ்மேகா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன் , மணிமேகலை, சுதா ஆகியோரது நடிப்பினில் வெளிவந்துள்ள படம், கடுக்கா. இப்படத்தினை, எஸ் எஸ் முருகராசு எழுதி இயக்கியிருக்கிறார். ‘விஜய் கௌரிஷ் ப்ரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
வெட்டித்தனமாக ஊரைச்சுற்றி வரும் நாயகன் விஜய் கெளரிஷூக்கு இரண்டு வேலைகள் மட்டுமே பிரதானம். ஒன்று, பெண்களின் பின்னால் சுற்றுவது. மற்றொன்று, மந்தையில் உட்கார்ந்து கொண்டு விளையாடுவது. இவரது வீட்டின் எதிரே குடி வருகிறார், நாயகி ஸ்மேஹா. கல்லூரிக்கு சென்றுவரும் இவருக்கு படிப்பே பிரதானம்.
விஜய் கெளரிஷ், கல்லூரிக்கு சென்று வரும் ஸ்மேஹாவை, தினமும் பின் தொடருவதோடு அவரை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி வற்புறுத்துகிறார். இந்நிலையில் விஜய்கௌரிஷின் நண்பர் ஆதர்ஷும் ஸ்மேஹாவை காதலிப்பதோடு, அவரும் கல்யாணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வருகிறார். ஸ்மேஹா இருவருக்குமே சம்மதம் தெரிவிக்கிறார். இது நண்பர்களுக்கு தெரியாது. உண்மையில், ஸ்மேஹா யாரை காதலிக்கிறார்? என்பதை எதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் சொல்வதாக கூறி, அபத்தமாக கூறுவதே ‘கடுக்கா’ படத்தின் கதை திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
நாயகன் விஜய் கெளரிஷ், அவரது நண்பராக நடித்திருக்கும் ஆதர்ஷ், நாயகி ஸ்மேஹா ஆகிய மூவருமே அறிமுக நடிகர்கள். என்றாலும் கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்துள்ளனர். வெட்டியாக ஊரைச்சுற்றிவரும் நாயகன் விஜய் கௌரிஷ், காதலிக்க பெண்களைத் தேடி பேருந்து நிலையத்தில் நிற்கும் போதும், ஒரு பெண்ணின் அம்மாவிடம் அடி வாங்கும்போதும், தனது அப்பாவித்தனம் கலந்த விஷமக்காரனாக நடித்து ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்மேஹா, எளிமையான தோற்றத்தினாலும் இயல்பான நடிப்பினாலும் எளிதில் மனம் கவர்ந்து விடுகிறார்.
இவர்களைத்தவிர ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன் , மணிமேகலை, சுதா ஆகியோரது நடிப்பும் குறிப்பிடும்படி இருக்கிறது.
ஒரு இளம்பெண், தனது படிப்பிற்கு இடையூறாக இருக்கும் இரண்டு இளைஞர்களின் காதலையும் ஏற்றுக்கொள்வதாக நடித்து ஏமாற்றி, தனது படிப்பினை தொடர்வதாக கூறியிருக்கிறார், இயக்குநர், எஸ் எஸ் முருகராசு. அதோடு இப்படியிருந்தால் மட்டுமே பெண்கள் தனது படிப்பினை தொடரமுடியும் என்கிறார். மேலும், ஸ்மேஹா கல்லூரிக்கு செல்லும்போது பேருந்தில் ஒருவர் அவரது தொடையைத் தடவுகிறார். அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத ஸ்மேஹா எளிதாக கடந்து செல்கிறார்!? இது எதைக்குறிக்கிறது? தெரியவில்லை!
பெண்கள் கொடுமைகளைக் கண்டு வெகுண்டெழவோ, தற்காத்துக்கொள்ளவோ தேவையில்லை என்றும், ஆண்களுக்கு அடிமைகளாக இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போல் சித்தரித்திருப்பது, கடும் கண்டனத்துக்குரிய செயல்!
படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது (ஈரோடு) வட்டார பாஷையும், சில காட்சிகளும்.
கடுக்கா – அபத்தம்!