‘காந்தி கண்ணாடி’ – விமர்சனம்!

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், ஜெயி கிரன் தயாரிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், காந்தி கண்ணாடி. இதில் KPY பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, அமுதவாணன், ஆராத்யா, ‘கல்லூரி’ வினோத் மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், ஷெரீப்.

KPY பாலா, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சி தொடர் மூலமாக தமிழக மக்களால் அறியப்பட்டவர். அதன் பிறகு எளிய மக்களுக்கு உதவி செய்ததன் மூலம் ஒட்டு மொத்த தமிழக மக்களின் அன்பைப் பெற்றவர்பொரு சில் திரைப்படங்களில் நடித்திருந்தவர், காந்தி கண்ணாடி திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார். எப்படியிருக்கிறது, கந்தி கண்ணாடி? பார்க்கலாம்.

KPY பாலாவும் அவரது காதலி நமீதா கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தினை நடத்தி வருகிறார்கள். இவர்கள் நடத்தும் 60 ஆம் ஆண்டு திருமண ஒரு நிகழ்வில், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்க்கும் ( பாலாஜி சக்திவேல்) காந்தி மகான், அவருடைய காதல் மனைவி ( அர்ச்சனா) கண்ணம்மாவுடன் கலந்து கொள்கிறார். அப்போது கண்ணம்மா அதே மாதிரி திருமணம் செய்து கொள்ள ஏங்குகிறார். மனைவியின் விருப்பத்தை எப்படியாவது பூர்த்தி செய்ய விரும்புகிறார், காந்தி. அதற்காக KPY பாலாவை அணுகுகிறார். அவர் சுமார் 40 லட்சத்திற்கான பட்ஜெட்டை காந்தியிடம் தருகிறார். காந்தி, அந்தப் பணத்தை பல வழிகளில் தேடுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் கதை.

பணம் மட்டுமே முக்கியம். என வாழும் ஒரு இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், KPY பாலா. தனக்கு என்ன வருமோ அதை எளிதாக வெளிப்படுத்தியிருக்கிறார். தனது வழக்கமான பஞ்சுக்களின் மூலம் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். காதல் காட்சிகளிலும் ஓகேவான நடிப்பினை கொடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸில் கண்கலங்க வைத்து விடுகிறார். சண்டைகாட்சியில் கை தட்டல்களை பெறுகிறார்.

KPY பாலாவின் மனைவியாக நடித்துள்ள நமீதா கிருஷ்ணமூர்த்தி, கிடைத்த சில காட்சிகளில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

காந்தி மகான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் படம் முழுவதும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜமீன் கெட்டப்பில் ஆட்டம் போடும் காட்சி சூப்பர்.

காந்தி மகானின் மனைவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ச்சனா தனது சிறப்பான நடிப்பினை எளிதாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் ஷெரிப், ஒரு உணர்வுப்பூர்வமான விஷயத்தை , நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், வலுவற்ற திரைக்கதையும், வலிய திணிக்கப்பட்ட காட்சிகளும் இருப்பதால், ஈர்க்கவுமில்லை. ரசிக்கவும் முடியவில்லை!