ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள மதராஸி திரைப்படத்தினை இயக்கியிருக்கிறார், ஏ. ஆர். முருகதாஸ். இதில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜாம்வால், பிஜு மேனன், சபீர் கல்லரக்கல் , விக்ராந்த் , ‘தலைவாசல்’ விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘அமரன்’ எனும் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு, நடிகர் சிவகார்த்திகேயனும், சல்மான்கான் நடித்த ‘சிக்கந்தர்’ படத்தின் படு தோல்விக்குப் பிறகு, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸூம் இணைந்திருக்கும் திரைப்படம், மதராஸி. அதனால், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸூக்கு ரசிகர்களிடம் பெரிதான ஈர்ப்பு ஏற்படவில்லை. சிவகார்த்திகேயனின் ஈர்ப்பினால் மட்டுமே இந்தப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. ரசிகர்களிடம் இந்தப்படத்தின் மூலமாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நம்பிக்கையை பெற்றாரா, இல்லையா? பார்க்கலாம்.
உலகளாவிய ஆயுதக்கடத்தல் மற்றும் கள்ளச்சந்தையில், (வித்யூத் ஜாம்வால்) விராட், (ஷபீர் கல்லரக்கல்) மற்றும் அவரது நண்பரான சிராக் இருவரும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டில் ஆயுதங்களை விற்க முடிவு செய்கின்றனர். அதன் படி, லோக்கல் ரௌடிகளிடமும், அடிதடியில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் இலவசமாக துப்பாக்கியை கொடுத்து வருகிறார்கள். இதற்காக பல லாரிகளில், ஆயிரக்கணக்கன துப்பாக்கிகளை தமிழ் நாட்டிற்குள் கொண்டுவந்து பதுக்கி வைக்கிறார்கள். இது, ‘NATIONAL INVESTIGATION AGENCY’ (NIA) தேசிய புலனாய்வு முகமைக்கு தெரிய வைக்கிறது. அவர்களை கைது செய்ய, ஆயுதக் கடத்தல் தடுப்பு பிரிவின் அதிகாரி (பிஜு மேனன் பிரேம் நாத்) தலைமையில் ஒரு பிரிவு இயங்குகிறது.
இந்நிலையில், (சிவகார்த்திகேயன்) ரகுராம், காதலி (ருக்மணி வசந்த்) மாலதி தன்னை நிராகரித்து விட்டதாக நினைத்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார். இவரை, தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆயுதக்கடத்தல் கும்பலை பிடிக்க முடிவு செய்கிறார், ‘NIA’ அதிகாரி பிரேம் நாத். இதற்கு பின்னர் என்ன நடந்தது? என்பதே மதராஸி படத்தின் கதை.
ரகுராம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். காதல் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் அட்டகாசமான நடிப்பினை கொடுத்துள்ளார். அவருக்கும் ருக்மணி வசந்த்துக்குமான காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமோ! என எண்ணத் தோன்றுகிறது.
சிவகார்த்திகேயனின் காதலியாக மாலதி பாத்திரத்தில் நடித்திருக்கும் ருக்மிணி வசந்த், ரசிகர்களை தனது வசீகரத்தின் மூலம் எளிதில் ஈர்த்து விடுகிறார். நடிப்பிலும் குற வைக்கவில்லை!
வில்லனாக வித்யூத் ஜாம்வால், அட்டகாசமான உடற்கட்டுடன் மிரட்டியிருக்கிறார். சிவகார்த்திகேயனை விட இவருக்கு பில்டப் காட்சிகள் அதிகம். இவரது நண்பனாக நடித்திருக்கும் சபீர் கல்லரக்கல்லும் குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்துள்ளார்.
NIA அதிகாரியாக பிஜு மேனன் ஓகேவான நடிப்பினை கொடுத்துள்ளார். இவரது மகனாக நடித்திருக்கும் விக்ராந்த், லிவிங்ஸ்டன், ‘தலைவாசல்’ விஜய், வினோதினி வைத்தியநாதன், சந்தான பாரதி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
சுதீப் இளமோனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக இருக்கிறது. அனிருத்தின் இசையமைப்பு பெரிதாக ஈர்க்கவில்லை!
சில வெற்றிப்படங்களை கொடுத்த, எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், லாஜிக் என்ற ஒன்றை முற்றிலும் மறந்து, ஒரு அமெச்சூர் தனாமான படைப்பினை கொடுத்திருக்கிறார். அதிலும், அவர் ‘NATIONAL INVESTIGATION AGENCY’ (NIA) தேசிய புலனாய்வு முகமை பற்றியும், அது இயங்கும் விதம் பற்றியும், காட்சிகள் அமைத்திருப்பது சிறுபிள்ளைத்தனமானது.
மொத்தத்தில், சிவகார்த்திகேயனுக்காக ‘மதராஸி’ படத்தினை பார்க்கலாம்!