அதர்வா முரளி, லாவண்யா திரிபாதி, அஸ்வின் காக்கமனு, லட்சுமிபிரியா சந்திரமெளலி மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், ரவீந்திர மாதவா.
புதிதாக காவலர் வேலைக்குச்சேர காவல் நிலையத்துக்கு வருகிறார், அதர்வா. பணி ஆணை பெறுவதற்கு, இன்ஸ்பெக்டருக்கு அவரும் அவரைப்போலவே இன்னும் சிலரும் காத்திருக்கின்றனர். இரவு ஆகிவிடுகிறது. அப்போது அங்கு வரும் சப் இன்ஸ்பெக்டர் அவர்களை இரவு ரோந்துக்கு அனுப்பிவைக்கிறார். சந்தேகப்படும்படியான ஒருவனை அதர்வாவும் மற்றவர்களும் விரட்டிச்செல்கின்றனர். ஆள் அரவமற்ற ஒரு குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றனர். அப்போது அவர்களின் எதிரில் தோன்றும் அஸ்வின் காக்கமனு, ஒரு காவலரின் தலையை துண்டித்துவிடுகிறார். அதர்வா உள்ளிட்ட மற்ற காவலர்கள் உயிருக்கு பயந்து ஓடி மறைகின்றனர். அவர்களைத்தேடி அஸ்வின் காக்கமனுவின் ஆட்கள் செல்கின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே தணல் படத்தின் விறுவிறுப்பான கதை.
அதர்வா, காக்கி உடையில் கம்பீரமாக நடித்து அசத்தியிருக்கிறார். அவரது கதாபாத்திரத்திற்கேற்றபடி கச்சிதமாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலுமே சிறப்பாக, காட்சிகளுக்கேற்றபடி உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி கிளப்பியிருக்கிறார். அஷ்வின் ககுமானு, பார்த்தவுடன் மிரளும் தோற்றத்தில், போலீசை பழிவாங்கும் வில்லனாக மிரட்டியிருக்கிறார். அவரது தோற்றமும் நடிப்பும் அவரது கதாபாத்திரத்தினை உயர்த்திப்பிடித்திருக்கிறது.
அதர்வாவின் காதலியாக நாயகி, லாவண்யா திரிபாதி அழகான தோற்றம். சில காட்சிகள் தான் என்றாலும் கவனிக்கவைத்து விடுகிறார். அதர்வாவின் நண்பராக நடித்திருக்கும் ஷாரா, அவர் கொடுக்கும் ஐடியாக்கள் சிரிக்க வைக்கின்றன.
படம் ஆரம்பித்த 20 நிமிடங்களுக்குப் பிறகு விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இடைவேளை வரை வேகமாக நகர்கிறது. அதன் பிறகு அஷ்வின் ககுமானுவின் ஃப்ளாஷ் பேக்கில் சற்றுத்தொய்வு ஏற்படுகிறது. மற்றபடி, க்ளைமாக்ஸ் வரையிலும் சீட்டின் நுனியில் உட்கார வைத்து விடுகிறது. காவல் துறையினர் அனைவரையும் விரோதி போல் காண்பித்திருப்பது கண்டிக்கத்தக்கது. யாரோ சிலர் செய்த தவறுக்காக மொத்த சமூகத்தையும் தண்டிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதில் நியாயமும் இல்லை.
போலீஸ்காரர்களை கொல்வதற்காக, அஷ்வின் ககுமானு சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளும் படியில்லை! இயக்குநர் ரவீந்தர மாதவாவின் சமூகம் பற்றிய புரிதலும், பார்வையும் அபத்தமானது. க்ளைமாக்ஸில், சிறுவனின் கையில் கத்தியைக் கொடுத்திருப்பது அயோக்கியத்தனமானது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையிலும் குறை இல்லை. சக்தி சரவணன் ஒளிப்பதிவு, படத்தின் பலம்.