Dawn Pictures மற்றும் Wunderbar Films தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெற்றது.
இட்லி கடை’படத்தில் தனுஷ் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, நித்யா மேனன், சத்யராஜ், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சமுத்திரகனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நட்சத்திர நடிகர் அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
முன்னணி நடிகர்களின் நடிப்பில், பெரிய பட்ஜெட்டில், பல புதிய திரைப்படங்களைத் தயாரித்து வரும் Dawn Pictures நிறுவனத்துடன் Wunderbar Films இணைந்து, இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. Red Giant Movies நிறுவனம் சார்பாக இன்பன் உதயநிதி இப்படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்ய, GK பிரசன்னா எடிட்டிங் செய்கிறார். நடனத்தைப் பாபா பாஸ்கர் அமைத்துள்ளார். உடை வடிவமைப்பை காவ்யா ஶ்ரீராம் செய்துள்ளார். PC STUNTS சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
இவ்விழாவில்…
நடிகை நித்யா மேனன் பேசியதாவது:
தனுஷ் சார் முதலில் இந்த படத்திற்காக கேட்டபோது எனக்கு டேட் இல்லை. பிறகு வேறு நடிகை வந்தார், ஆனால் மாறிவிட்டார். மீண்டும் ஷீட்டுக்கு முன்னர் ‘நீ தான் நடிக்க வேண்டும்’ என்று சொன்னார். இந்த படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். ‘திருச்சிற்றம்பலம்’ போல நான் இதற்கே செட் ஆகிறேனா? என்று கேட்டேன். அவர் ‘நீ தான் கச்சிதமாக இருப்பாய்’ என்று சொன்னார். எனக்கு இளவரசு, சமுத்திரகனி, தனுஷ் சாருடன் அதிக காட்சிகள் உள்ளன. இங்கு சத்யராஜ் சார், பார்த்திபன் சார் எல்லோரையும் பார்த்ததில் சந்தோசம். இந்த குழு என் குடும்பம் போல. இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. தனுஷ் சார், நடிகரைத் தாண்டி இயக்குநராக எனக்கு மிகவும் பிடித்திருக்கிறார். இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது…
“பொல்லாதவன்” எனக்கு மூன்றாவது படம். அப்போது நான் சின்ன பையன், தனுஷ் என் கைபிடித்து இசை விழாவிற்கு அழைத்துச் சென்றார். அப்போதிருந்து இந்த நட்பு தொடர்கிறது. என் சகோதரர் மாதிரி, அவர் ஒருத்தரை நேசித்தால், அவரிடமிருந்து ‘நோ’ என்ற சொல்லே வராது. இட்லி கடை நம் மண் சார்ந்த கதையில் ஒரு அருமையான படமாக உருவாகியுள்ளது. உங்கள் தந்தையை இந்த படம் பார்க்கும்போது நினைத்துப் பார்ப்பீர்கள். இந்த படமும் எங்கள் கூட்டணியில் வெற்றிப்படமாக இருக்கும். அருண் விஜய் சார், சத்யராஜ் சார், பார்த்திபன் சார் என அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். ஷாலினியும் நன்றாக நடித்துள்ளார். நித்யா மேனன் கலக்கியுள்ளார். Dawn Pictures க்கு நன்றி. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ் பேசியதாவது…
எனக்காகக் காத்திருக்கின்ற ரசிகர்களுக்கு நன்றி. ராஜ்கிரண் சார் எங்கள் குடும்பமே உங்களுக்குக் கடமைப்பட்டுள்ளது. என் அப்பா படத்தின் முதல் ஹீரோவும் நீங்கள் தான். என் முதல் பட ஹீரோவும் நீங்கள் தான், நன்றி. சத்யராஜ் சார், உங்களோடு நடிக்கவேண்டும் என ரொம்ப நாட்களாக ஆசை. நீங்கள் பெரிய நடிகர். உங்களுக்கு எப்படி நடிக்கச் சொல்ல வேண்டும் என தயக்கம் இருந்தது. ஆனால், அதை உடைத்து, எனக்கு ஆதரவாக இருந்து நடித்ததற்கு நன்றி. அருண் விஜய் சார், நீங்கள் கதை கேட்ட உடனே நடிக்க ஒப்புக்கொண்டீர்கள், நன்றி. எனக்காக மண், புழுதி என உருண்டு புரண்டு நடித்தார். மிகப்பெரிய உழைப்பாளி. பார்த்திபன் சார், நீங்கள் நினைத்தது போல இது சின்ன ரோல் இல்லை. படம் பார்க்கும் போது புரியும்.
ஷாலினி சிறப்பாக நடித்ததற்கு நன்றி. நித்யா மேனன், அவர் நடிப்பதில் பெரிதாக ஈடுபாடு இல்லை என்று சொல்வார், ஆனால் சினிமாவுக்கு அவரை நிறையப் பிடித்துள்ளது. அவர் இன்னும் நிறைய நடிக்க வேண்டும். இப்படத்தில் நடித்த சமுத்திரகனி சார், இளவரசு சார், எல்லோரும் என் குடும்பம் மாதிரி. அனைவருக்கும் நன்றி. ஆகாஷ் பாஸ்கரன், நானே உங்களை சில முறை தான் பார்த்துள்ளேன். என்னை முழுதாக நம்பியதற்கு நன்றி. ஜீவி மாதிரி ஒரு நண்பன் கிடைத்தது ஆசீர்வாதம். அவர் இப்படத்தில் ரீல்சுக்கு மியூசிக் போட மாட்டேன், கதைக்கு உண்மையான மண் சார்ந்த இசை தான் செய்வேன் என முடிவு செய்து இசையமைத்துள்ளார். நன்றி ஜீவி. கிரண், இந்த படத்திற்கு பெரிய சப்போர்ட் நன்றி. பிரசன்னா, என்னுடைய எல்லா படத்திற்கும் அவர் தான் எடிட்டர். என்னுடன் தொடர்ந்து கூட இருப்பது அவர் தான். நன்றி. ஜாக்கி, உங்கள் திறமை தான் உங்கள் எதிரி. நீங்கள் போட்ட செட், செட் மாதிரியே தெரிவதில்லை. அதனால் உங்களைப்பற்றி யாருக்கும் தெரியவில்லை. இந்த படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. உடை வடிவமைப்பாளர் காவ்யா உங்கள் டீமிற்கும் நன்றி. ஷ்ரேயாஸ்-ன் கடும் உழைப்புக்கு நன்றி. அவரை எல்லோரும் பாராட்டுவதைக் கேட்கப் பெருமையாக உள்ளது. நன்றி.
இட்லி கடை என்ன டைட்டில் இது எனக் கேட்டார்கள். பொதுவாக படத்திற்கு ஹீரோ பெயர் தான் வைப்பார்கள், இதில் இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில். ஒரு முறை தனியாக இருக்கும் போது இளையராஜா சார் பாடல் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த பாடல் என் கிராமத்திற்கும், என் பாட்டி வீட்டிற்கும் கூட்டிப்போனது. அங்கு ஒரு பஸ் ஸ்டாண்ட் இருக்கும், ஒரே ஒரு கடை இட்லி கடை இருக்கும். அதிலிருந்து எனக்கு தினமும் இட்லி சாப்பிட வேண்டும். ஆனால் காசு இருக்காது. அப்போது உழைத்து 2 1/2 ரூபாயில் சாப்பிட்ட இட்லியில் கிடைத்த சந்தோசம், நிம்மதி இப்போது இல்லை. அந்த இட்லி கடையை வைத்தே ஏன் ஒரு படம் பண்ணக்கூடாது எனத் தோன்றியது. அந்த கிராமத்தையும், சென்னையில் நான் பார்த்த விசயங்களையும் வைத்து உருவானது தான் “இட்லி கடை”. நாம் நம் வாழ்க்கையில் நம் தந்தை, பாட்டன், முப்பாட்டன் கதைகளை மறந்து போய்விடக்கூடாது. நாம் வந்த வழிகளையும் நம் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். வந்த வழியையும் வாழ்ந்த வாழ்க்கையையும் என்றைக்கும் மறக்கக் கூடாது. இப்படத்தில் என் பாட்டி ஒரு சீனில் நடித்திருக்கிறார். இது எனக்கு மிகவும் பர்ஸனல் படம். என்னை ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டீர்கள், சமீபமாக உங்களை சந்தித்து வருகிறேன். நிறைய பேர் டாக்டராக, இன்ஞினியராக, டீச்சராக இருப்பதாகச் சொன்னீர்கள். அது தான் எனக்கு மிகப்பெரிய கர்வமும் சந்தோஷமும். “இட்லி கடை” படம் உங்களை மகிழ்விக்கும். நன்றி.
இப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.