திமுக வில், கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய, வன்னியர் சங்க தலைவரும், பாமக வின் எம்.எல்.ஏ-வுமான மறைந்த காடுவெட்டி (குருநாதன்) குருவின் வாழ்க்கை வரலாறு தான், இந்த படையாண்ட மாவீரா.
காடுவெட்டி குரு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர். மேலும், பல கட்சித் தலைவர்களையும் எதிர்த்து, அரசியல் களத்தில் தனக்கென ஒரு தனி பாணியை வைத்துக்கொண்டவர். டெல்ட்டா பகுதிகளில் தனிப்பெரும் மக்கள் செல்வாக்கு கொண்டவர். சில கட்சிகள், பல கோடிகள் கொடுத்து தங்களது கட்சிக்குள் இழுக்க முயற்சித்தன. அதை மறுத்தவர் கடைசி வரை, பாமக கட்சியிலேயே தொடர்ந்து வந்தார். அவர் நோய்வாய் பட்டிருந்த சமயம், அவருக்கும் பாமக கட்சிக்கும் பிணக்குகள் இருந்து வந்தது, குறிப்பிடத்தக்கது.
காடுவெட்டி குரு மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் இருந்த நிலையில், பல கட்சியினர், அவரை மக்கள் முன் பயங்கரவாதியாக சித்தரித்தனர். ஆனால், அவர் சாதி பாகுபாடின்றி தனது தொகுதி மக்களுக்கு பல வகைகளில் உதவி செய்தும், தமிழ் தேசியத்தை நோக்கி மக்களை நகர்த்திச் சென்றவர். இதோடு, அவர் வாழ்வில் நடந்த மேலும் பல விஷயங்களை தொகுத்து கமர்ஷியலாக கொடுத்திருக்கிறார், இயக்குநர் வ.கெளதமன்.
காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் வ.கெளதமன், தன்னால் முடிந்தவரை நடித்து, அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். சில காட்சிகளில் அவரிடம் விஜயகாந்த் சாயல் தெரிகிறது. பாடல்களிலும், சண்டைகாட்சிகளிலும் தனிக்கவனம் பெறுகிறார்.
நாயகி பூஜிதா பொன்னாடாவுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை. கிடைத்த காட்சிகளில் தன்னை முன்னிலைப் படுத்த முயற்சிக்கிறார்.
சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை ஓகே. ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு, கமர்ஷியல் படத்திற்கேற்றபடி இருக்கிறது.
மாற்றுக்கட்சியினரால் காடுவெட்டி குரு மீதான, சாதிய மற்றும் பயங்கரவாத பிம்பத்தை மாற்றியமைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.