‘அந்த 7 நாட்கள்’ – (விமர்சனம்.) அபத்தம்!

‘பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ்’ சார்பில், முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ள படம், அந்த 7 நாட்கள். இப்படத்தினை, இயக்குநர் கே பாக்யராஜின் உதவியாளர் எம்.சுந்தர் இயக்கியிருக்கிறார். இதில் அஜிதேஜ், ஸ்ரீ ஸ்வேதா, கே.பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், பாரதிராஜா, அற்புதன் விஜயன், பேபி வைணுவ ஸ்ரீ, பரோட்டா முருகேசன், சாந்தகுமார், கார்த்தி, பிரதீப், ஜனா, ராம்குமார், தனசேகரன், மூர்த்தி, அப்பல்லோ ஹரி, விஜயராஜ், இளங்கோவன், ஜெய்மன், யூசுப், ஆர்.ரூபகரன், சோபியா, ரவி மற்றும் பங்கஜ் எஸ்.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்திருக்க, சச்சின் சுந்தர் இசையமைத்திருக்கிறார்.

‘அந்த 7 நாட்கள்’ என்ற தலைப்பினை கேட்டவுடனே, கே. பாக்யராஜ் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டில் வெளியான, வெற்றிப்படம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். அந்நாளில் இது விவாதப்பொருளாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் இருந்தது. அதே தலைப்புடன் கே.பாக்யராஜின் உதவியாளர் எம்.சுந்தர் இயக்கத்தில் வெளியான இப்படம் எப்படியிருக்கிறது? பார்க்கலாம்.

அரசியல்வாதி நமோ நாராயணனின் ஒரே மகன் அஜிதேஜ். ‘வானியற்பியல்’ (Astrophysics) படித்து வருகிறார். இவரது வீட்டின் எதிரே வசிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள், ஸ்ரீ ஸ்வேதா அட்வகேட் பயிற்சி பெற்று வருகிறார். எதிரெதிரே வசிக்கும் அஜிதேஜ், ஸ்ரீ ஸ்வேதா இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இவர்களது காதல், பெற்றோர்களுக்கு தெரிய வர, அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

அஜிதேஜ், ‘நாசா’ செல்வதற்கான போட்டியில், 300 வருடங்களுக்கு ஒரு குறை நிகழும் (solar eclipse) சூரிய கிரகணத்தை ஆராய்ச்சி செய்கிறார். அப்போது அவரது கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. அதை பெரிதாக எடுத்துகொள்ளாத நிலையில், அந்நிகழ்வின் மூலம் அவருக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. அதாவது, அவர் யாருடைய கண்களை நேரில் பார்க்கிறாரோ, அவர்கள் எத்தனை நாட்களில் மரணமடைவார்கள் என்பது துல்லியமாக தெரிந்துவிடுகிறது. ஒரு முறை அஜிதேஜ், தனது காதலி ஸ்ரீ ஸ்வேதாவின் கண்களை பார்க்க, அவர் 7 நாட்களில் மரணமடைவது தெரியவருகிறது.  இதனால், காதலர்கள் இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

‘அந்த 7 நாட்கள்’ திரைப்படம், வெறும் காதல் கதையாக இல்லாமல், சின்ன அமானுஷ்யம், அறிவியல், மருத்துவர்கள் செய்யும் தவறு இவைகளைச் சுற்றி நடக்கிறது. திரைப்படத்தின் தலைப்புக்கேற்றபடி, 7 நட்களில் காதலர்களின் வாழ்க்கையில் வாழ்வா, சாவா? போராட்டம் நடக்கிறது. அதுவே க்ளைமாக்ஸூக்கான தொடக்கமாகவும் இருக்கிறது. கொடைக்காணலில்  நடக்கும் அந்த சம்பவத்தினை இன்னும் கொஞ்சம் அழுத்தமான திரைக்கதை மூலம் படமாக்கியிருக்கலாம். அதேபோல், கதையின் அச்சாணியாக இருக்கும், அஜிதேஜ் பயன்படுத்திய அந்த அமானுஷ்யமான டெலெஸ்கோப்பினை, 300 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய தலைவாசல் விஜய் குறித்த, பின்புலம் எதுவும் தெளிவாக சொல்லவில்லை. அது, திரைப்படத்தின் பலவீனமான ஒன்றாக இருக்கிறது.

தமிழ் சினிமாவிற்கு புதிய வரவுகளான ஆந்திராவைச் சேர்ந்த நாயகன் அஜித்தேஜ். கேரளாவைச் சேர்ந்த நாயகி ஸ்ரீஸ்வேதா. இவர்களில் துறு துறு இளைஞனாக வரும் அஜித்தேஜ், சாகும் தருவாயில் இருக்கும் காதலியுடன் சேர்ந்து சாகத்துடிக்கும் காட்சியில், பார்வையாளர்களின் மனதை தொட்டுவிடுகிறார். ஸ்ரீஸ்வேதா, படம் முழுவதும் சின்னச் சின்ன சிரிப்புகளுடனும், வசனங்களுடனும் நடித்திருப்பவர், கடைசி 15 நிமிடங்கள் பார்வையாளர்களில் சிலரது கண்களை கசிய வைத்துவிடுகிறார்.

அரசியல்வாதிகளாக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், நமோ நாராயணன் மற்றும் சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

கோபிநாத் துரை ஒளிப்பதிவும், சச்சின் சுந்தரின் இசையமைப்பும் குறை சொல்லும்படி இல்லை.

மற்றபடி காட்சிகளில் அழுத்தமில்லாததால், திரைப்படம் பார்ப்போரை எந்த விதத்திலும் கவரவில்லை!

‘வெறிநாய்க்கடி நோய்க்கு (Rabies)’ உள்ளான ஒருவர், குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் அவர் இறப்பது நிச்சயம். இன்றைய நவீன மருத்துவமும் அதையே சொல்லி வருகிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட நாட்களை தாண்டிய பின்னரும், ‘வெறிநாய்க்கடி நோய்க்கு’, பாரம்பரிய வைத்திய முறைகளால் தீர்வு இருப்பது போல் சித்தரித்திருக்கும் இயக்குநர்  எம்.சுந்தருக்கு கடும் கண்டனங்கள்!