கிறிஸ்துவ மதத்திற்காக, தங்களது வாழ்வை அர்பணித்து வாழும் கன்னியாஸ்திரிகளை (Nuns) கேவலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படமே, மரியா. இத்திரைப்படத்தை, ‘Dark Artz Entertainments’ தயாரித்துள்ளது. ஹரி கே சுதன் எழுதி இயக்கியிருக்கிறார்.
சாய்ஶ்ரீ பிரபாகரன், ‘மரியா’ எனும் பெயர் கொண்டு கன்னியாஸ்திரி பயிற்சி பெறுபவராகவும், சாத்தானிசத்தை பரப்பும் தலைவராக பாவெல் நவகீதனும் நடித்துள்ளனர். ‘யாத்திசை’ திரைப்படத்தில் நடித்த சித்து குமரேசன் ஆக்னஸ் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்க, விக்னேஷ் ரவி, சுதா புஷ்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி. மணி ஷங்கர் ஒளிப்பதிவு செய்திருக்க, அரவிந்த் கோபால கிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்ஷன் இருவரும் இசையமைத்துள்ளனர்.
கன்னியாஸ்திரிகள் மடத்தில் தங்கி பயிற்சி பெற்று வரும் மரியா, வருட விடுமுறைய கழிக்க தனது உறவுக்கார பெண் ஆக்னஸ் குடியிருக்கும் வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டில் ஆக்னஸூம் அவரது தோழியும் திருமணம் செய்து கொள்ளாமல் (live-in relationship), தங்களது ஆண் நண்பர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஆக்னஸ் தன்னிடம் இருக்கும் உடைகளை கொடுத்து மரியாவை அணியச் சொல்கிறார். சிறிய தயக்கத்திற்கு பிறகு அணிந்து கொள்கிறார்.
ஒரு நாள் ஆக்னஸூம் அவரது நண்பர்களும் வழக்கம்போல் குடித்துவிட்டு, பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர். இவர்களின் நடவடிக்கை மரியாவிற்கு பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. கட்டுப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார். இதேபோல், இன்னொரு நாளும் நடக்கிறது. அப்போது ஆக்னஸின் காதலன், மரியாவை கட்டிதழுவிய படி காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் கூறுகிறார். அதற்கு மரியா, கோபமாக ‘கல்யாணம் செய்து கொள்ளாமல் வேண்டுமானால் உறவு கொள் என்கிறார். ஆக்னஸின் காதலன் மரியாவை வசை பாடிவிட்டு சென்றுவிடுகிறார்.
இந்நிலையில், கிறிஸ்துவுக்கு எதிராக செயல்படும், சாத்தானின் தத்துவங்களை பின்பற்றும் குழுவினரின் நட்பு கிடைக்கிறது. அதன் பிறகு மரியாவின் வாழ்க்கையில் நடந்தது, என்ன? என்பது தான் ‘மரியா’.
நடிகர்களை பொறுத்தவரை, முதலில் மரியாவாக நடித்த சாய்ஶ்ரீ பிரபாகரன் தான் முதலிடத்தை பெறுகிறார். இயக்குநரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து, சிறப்பாக நடித்துள்ளார். அடுத்தாக ஆக்னஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்த சித்து குமரேசன். அடுத்தாக பாவெல் நவகீதன். விக்னேஷ் ரவி, சுதா புஷ்பா உள்ளிட்டோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
கன்னியாஸ்திரியாக இருப்பவர்கள் சராசரி வாழ்க்கைக்கு ஆசைப் பட்டால், திருமணம் செய்து கொண்டு குடும்பமாக வாழ ஆசைப்படுவதில் நியாயம். ஆனால், ஹரி கே சுதனால் படைக்கப்பட்ட கதாபாத்திரம் முறையற்ற பாலியல் உறவுக்கு ஆசைபடுகிறது. இதனால், பெரும்பாலோனோர் இந்த கதாபாத்திரத்தை ஏற்க வாய்ப்பில்லை. இது, உள்நோக்கத்துடன் (நீலப்பட நாயகி போல்) உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாகவே தெரிகிறது.
கன்னியாஸ்திரி பயிற்சியின் போது, நிரந்தரமாக ஒருவர் வெளியேற விரும்பினால், கன்னியாஸ்திரிகளின் (Monastery) மடாலயமே வேண்டிய நிதி உதவிகளை செய்து கொடுக்கும். இது மாதிரியான பல விஷயங்களை மறைத்து, கன்னியாஸ்திரிகளையும், கிறிஸ்துவத்தையும் களங்கப்படுத்துவது போல் படமாக்கியிருக்கிறார், இயக்குநர் ஹரி கே சுதன்.
மரியா – அருவருப்பான படைப்பு!