அமீர்கான் கதாபாத்திரத்தில் நடித்த செல்வராகவன்!

‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்கும் திரைப்படம், ஆர்யன். இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருக்க, செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் மானசா செளத்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்க, ஜிப்ரான் இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார், அறிமுக இயக்குநர் பிரவீன்.கே.  இத்திரைப்படம், வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகிறது.

‘ஆர்யன்’ படம் குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் கூறியதாவது..,

‘இயக்குநர் பிரவீனும், நானும் மும்பை சென்றிருந்த போது, அமீர்கானை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  அப்போது ஆர்யன் திரைப்படத்தின் கதை குறித்து பேசினோம் . இரவு 10 மணிக்கு பேச ஆரம்பித்து, அதிகாலை 6 மணி வரை பேசினோம். அவருக்கு கதை மிகவும் பிடித்துப் போக நான் அந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நீங்கள் ஹீரோவாக நடியுங்கள் என்றார். எங்களுக்கு சந்தோஷம். அதற்கான, அடுத்த கட்ட வேலைகளை தொடங்கினோம். நீண்ட நாட்களாக அவருடன் கதை விவாதம் நடந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால், அவர் நடிக்கமுடியாமல் போன, அந்த வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார். இயக்குநர் பிரவீன், முதலில் செல்வராகவனிடம் கதை சொன்ன போது விஷ்ணு விஷால் எப்படி சம்மதித்தார்? என்று கேட்டுள்ளார். அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக எழுதப்பட்டிருக்கும்.

ஆர்யன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படம் தான். வில்லன் செல்வராகவன் என்பதை சொல்லிவிட்டாலும், அவர் செய்யும் செயல்கள் தான் சிறப்பு. பார்வையாளர்கள் யூகிக்க முடியாத வகையில் எழுதப்பட்டுள்ளது. அதோடு, இதுவரை பார்த்திராத விஷயமாக இருக்கும். எனக்கு இந்த படத்தின் கதையை கேட்ட உடனே நடிக்க வேண்டும் என தோன்றியது. செல்வராகவன் கதாபாத்திரம் குறித்து, போலீஸ் உயரதிகாரியாக இருந்த எனது அப்பாவிடம் கேட்டேன். அப்படியே அதிர்ச்சியாகி விட்டார். பொறுத்திருந்து தான் பிடிக்க முடியும் என்றார். அந்த அளவிற்கு ‘ஐபிஎஸ்’ அதிகாரிகளையே அலற விடும்  புதிதான கதாபாத்திரம். படம் பார்த்த பிறகு, நான் சொல்வது உங்களுக்கு புரியும்

ஆர்யன், சைக்கோ த்ரில்லர் படம் என்றாலும், வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருக்காது. ஆனால், பயமுறுத்தும் காட்சிகள் இருக்கும். என்றார்.