‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்’ தயாரித்து, பவன் இயக்கியிருக்கும் இணையத் தொடர், வேடுவன். இதில் கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், சிரவ்நிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்க, எழுதி இயக்கியிருக்கிறார் பவன்குமார்.
‘அயலி’, ‘தலைமைச் செயலகம்’, ‘விலங்கு’, ‘ஆட்டோ சங்கர்’, ‘சட்டமும் நீதியும்’ போன்ற பரபரப்பான இணையத்தொடர்களை வெளியிட்ட ஜீ 5 டிஜிட்டல் தளம், இந்த ‘வேடுவன்’ இணையத் தொடரினையும் வெளியிடுகிறது. இந்த க்ரைம் இணையத் தொடர், ஏழு அத்தியாயங்களை கொண்டுள்ளது.
சூரஜ் ( கண்ணா ரவி), தமிழ் திரையுலகில் பிரபலமான ஹீரோ. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அவருக்கு, ஒரு சூப்பர் ஹிட் படத்தினை கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் ஏற்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் ஒருவர், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலீஸ் அதிகாரியின் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்தினை கதையாக சொல்கிறார். சூரஜ்ஜிற்கு கதை மிகவும் பிடித்துப்போகிறது. அதோடு இந்தப்படம் தனக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும் என நினைக்கிறார். சூரஜ், நினைத்தது நடந்ததா, இல்லையா? என்பதை, விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்வதே ‘வேடுவன்’ இணையத் தொடர்.
சூரஜ் எனும் பிரபல நடிகராகவும், அருண்மொழிவர்மன் என்ற காவல்துறை அதிகாரியாகவும் இருவேறுபட்ட நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார், கண்ணாரவி. இந்த கதாபாத்திரங்களுக்காக அவர் மெனெக்கெட்டிருப்பது நன்கு தெரிகிறது. நடிப்பின் மூலம் ரசிகர்களை கவரும் வேலையையும் கச்சிதமாக செய்திருக்கிறார். இருந்தாலும், சில லாஜிக் மீறல்களால், சுவாரசியம் குறைகிறது. சில இடங்களில் வசனங்கள் தனி கவனத்தைப் பெறுகிறது. ஒரு சில எபிசோட்களில் மட்டுமே சுவாரசியம். மற்றவற்றில் மிஸ்ஸிங்!
கண்ணாரவியின் மனைவியாக நடித்திருக்கும் ஷிரவ்னிதா ஸ்ரீகாந்த், சஞ்சீவ் வெங்கட், வினுஷா தேவி உள்ளிட்டோரும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் தொடரின் பலமாக இருக்கிறது.
வேடுவன் – வேட்டைக்காரன்!