‘டியூட்’  –  (விமர்சனம்) கலர்ஃபுல் காதல் கலாட்டா!

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து, கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், டியூட்.  பிரதீப் ரங்கநாதன் , மமிதா பைஜு, நேகா ஷெட்டி,சரத்குமார், ஹிருது ஹாரூண் ,ரோகினி, வினோதினி வைத்தியநாதன், சத்யா,டிராவிட் செல்வம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரதீப் ரங்கநாதனின் முறைப்பெண் மமிதா பைஜு. இருவரும் நட்பாக பழகிவருவதுடன், தங்களது நண்பர்களுடன் இணைந்து ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். காதலில் தோல்வியடைந்த பிரதீப் ரங்கநாதனிடம், தனது காதலை தெரிவிக்கிறார், அவரது முறப்பெண்ணான மமிதா பைஜு. அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார், பிரதீப் ரங்கநாதன்.  இதனால், மனமுடையும் அவர் ஆறுதலின்றி தவிக்கிறார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மமிதா பைஜுவும், ஹிருது ஹாரூணும் காதலித்து வருகின்றனர். இதனிடையே பிரதீப் ரங்கநாதனுக்கும் மமிதா பைஜுவிற்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பதை இன்றைய இளைஞர்களுக்கு உரித்தான வகையில், கலாட்டாவும், கலகலப்புமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன்.

இந்தப்படத்தின் கதை, எங்கடா போய்க்கிட்டிருக்கு…  இன்றைய இளைய தலைமுறை? என பலரையும் புலம்ப வைத்தாலும், ஆணவக்கொலை சம்பவத்தை அட்டகாசமாக சொல்லி, சர்ச்சையான சம்பவத்தை, கலர்ஃபுல்லான கலாட்டாவாக சொல்லி, முதல் படத்திலேயே முரட்டு சம்பவம் பண்ணிட்டார், இயக்குநர் கீர்த்தீஸ்வரன். படம் முழுவதும் அடுத்தடுத்து டிவிஸ்ட்டுக்கள். அனைவரது கதாபாத்திரங்களும் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, சிறப்பு. இளைஞர்கள் இந்தப்படத்தை கொண்டாடுவார்கள்.

‘அகன்’ என்ற கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதன், கூல் டியூடாக, படம் முழுவதும் வலம் வருகிறார். அனைத்துக் காட்சிகளிலும், உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில், இந்தப்படமும் வெற்றியைக் கொடுத்துள்ளது. என்றே சொல்லலாம்.

மமிதா பைஜூவுக்கு நடிப்பினை நன்கு வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம். அதை சிறப்பாக பயன்படுத்தி கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு பெரும்பலமாக அமைந்திருக்கிறது.

மமிதா பைஜுவின் காதலனாக ஹிருது ஹாரூண். ‘ஊமை குசும்பன்’ கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் மட்டுமே நடிக்க முடியும். என்பதைப் போல் நடித்துள்ளார்.

ரோகிணி,  நேகா ஷெட்டி, சத்தியா, கருடா ராம் உள்ளிட்ட நடிகர், நடிகைகளும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

பிரதீப் ரங்கநாதனின் தாய்மாமாவாக நடித்திருக்கும் சரத்குமார், மாஸ். படத்தில் இன்னொரு கூல் டியூடாக வலம் வருகிறார். அவரது காட்சிகள் மிரட்டலாகவும், நகைச்சுவையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது, படத்திற்கான பெரும் பலமகவே இருக்கிறது. அவரும் அந்த அந்தக்கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப நடித்துள்ளார். ரசிகர்கள், இவரது வித்தியாசமான கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள்.

இன்றைய இளைஞர்களின், நட்பு , காதல், திருமணம்.  அதுபற்றிய புரிதல் வரவேற்கும்படியாக இருக்கிறது.

நடிகர், நடிகைகளின் பங்களிப்பு, கலர்ஃபுல்லான காட்சிகள், இசை, திரைக்கதையின் சுவாரஸ்யம் என அனைத்துமே சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

‘டியூட்’ – கலர்ஃபுல் காதல் கலாட்டா!