‘தேர்ட் ஐ என்டர்டெய்ன்மென்ட்’ தயாரித்து, சண்முகம் முத்துசாமி இயக்கியிருக்கும் திரைப்படம், டீசல். இதில் ஹரிஷ் கல்யாண், வினய் ராய், அதுல்யா ரவி , சாய்குமார், அனன்யா, கருணாஸ் ,போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர், சாய் கிருஷ்ணா, ஜாகிர் உசேன், மாறன், கேபிஒய் தீனா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எம் எஸ் பிரபு, ரிச்சர்ட் எம் நாதன் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
சென்னை, துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை, அதன் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக கடற்கரை ஓரத்தில் ராட்சத குழாய் பதிக்கப்படுகிறது. இதனால், அந்த கடற்கரை அருகில் உள்ள பல மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதால், அங்கு வசிக்கும் மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதை பெரிதாக கருதாத அரசு, அந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. சிலர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இத்திட்டத்திற்கு எதிராக, நாயகன் ஹரிஷ் கல்யாண் எதிர்த்து நிற்கிறார். இதன்பிறகு என்ன நடந்தது? என்பது தான், டீசல் படத்தின் கதை.
டீசல் திரைப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கும் சண்முகம் முத்துசாமி, ராட்சத குழாய் பதிக்கும் திட்டத்தால் பாதிக்கப்படுவது மீனவமக்கள் மட்டுமல்ல. ஒட்டு மொத்த தமிழக மக்களும் அந்த திட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை காட்சிகளினூடே சொல்லியிருப்பது திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.
ஹரிஷ் கல்யாண், வாசு என்ற மீனவர் கதாபாத்திரத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரமெடுத்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கேற்ப நடித்து, ஒரு மீனவரைப்போலவே காட்சி தருகிறார். அடிதடி காட்சிகள் மட்டுமின்றி சென்டிமென்ட் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கும்படி நடித்திருக்கிறார். குறிப்பாக அம்மாவுடன் பேசும் காட்சியை சொல்லலாம்.
அதுல்யா ரவிக்கு நடிப்பினை வெளிப்படுத்துபடியான காட்சிகளில்லை. ஆனால் படம் முழுவதும் வருகிறார்.
வினய் ராய், அதுல்யா ரவி , சாய்குமார், அனன்யா, கருணாஸ் ,போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர், சாய் கிருஷ்ணா, ஜாகிர் உசேன், மாறன், கேபிஒய் தீனா, தங்கதுரை போன்றோரும் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
இவர்களில் மாறன், தங்கதுரை ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள்.
திபு நினன் தாமஸின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையிலும் பெரிதாக குறையில்லை.
ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் எம்.எஸ்.பிரபு ஆகியோரது ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக மீனவ கிராமங்களையும், கடற்புரத்தை காட்டிய விதம் ரம்மியமாக இருக்கிறது.
வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவில் முக்கியமான சமூகப்பிரச்சனையை, சுட்டிக்காட்டி பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறார். இயக்குநர் சண்முகம் முத்துசாமி.