‘பைசன்’ காளமாடன் – விமர்சனம்!

‘அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்’ மற்றும் ‘நீலம் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், பைசன். இதில் துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள், ‘அருவி’ மதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தூத்துக்குடியிலிருந்து சென்ற ஒரு சாமனியன், இந்திய கபடி அணிக்காக ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று சாதனை படைத்த நிகழ்வும், அதன் பின்னணியும் தான் கதை.

எளிய குடும்பத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (பசுபதி) என்பவரது மகன் கிட்டான் (துருவ் விக்ரம்). இவனுக்கு கபடி விளையாடுவதில் அலாதி பிரியம். அரசுப்பள்ளியில் படித்து வரும் அவனது திறமையை உண்ரும் ஆசிரியர் அவனது விளையாட்டுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். இந்நிலையில் பலவிதமான தடைகள் ஏற்படுகிறது. அதனை எப்படி எதிர்கொண்டு சாதனை படைத்தான் என்பது தான் பைசன் காளமாடன் படத்தின் மொத்தக் கதையும்.

உண்மை சம்பவத்தை கற்பனை கலந்து, புனைப்பெயருடன் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார். இயக்குநர் மாரி செல்வராஜ். சாதனை படைக்கத் துடிக்கும் ஒரு விளையாட்டு வீரரின் தடைகளையும் அதன் மூலம் ஏற்படும் வலியையும் ரத்தம் தெறிக்க சொல்லியிருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் துருவ் விக்ரம், திடகாத்திரமான உடற்கட்டில் கபடி வீரராக, களத்தில் திமிறி நிற்கிறார். அதற்காக கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. கதாபாத்திரத்தினை உணர்ந்து, சிறப்பாகவும் நடித்திருக்கிறார். தன்னை விட வயது மூத்த பெண்ணை விரும்பும் போதும், கொலையை நேரில் பார்த்து பயந்து நடுங்குவதும் என உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

துருவ் விக்ரமின் தந்தையாக நடித்திருக்கும் பசுபதி, பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அருவி மதன், அமீர், லால் ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில், பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிதும் பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவாளர் எழில் அரசுவின் ஒளிப்பதிவும் சிறப்பு சேர்த்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் மாரி செல்வராஜ், சாதிய சமூக மோதல்களை ஒரு சார்பாக சொல்லாமல் தவிர்த்திருப்பது படத்தின் சிறப்பு. 90களில் நடந்த சம்பவங்கள் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு ஒரு சில காட்சிகள் விவாதத்தை ஏற்படுத்தலாம்.

‘பைசன்’ –  வெற்றி வீரன்!