கவினின் ஆணவக் கொலையின் பாதிப்பே, ‘டியூட்’ பட க்ளைமாக்ஸ் வசனம்! –  இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பில், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டியூட்’. படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், இப்படத்தின் குழுவினர் கலந்து கொள்ள, நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில், இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பேசுகையில்,

“எனக்கு முதல் வெற்றி மேடை என்பதால் இது ரொம்பவே ஸ்பெஷலான மேடை.  இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவி சார், நவீன் சாரின் ஆதரவுக்கு நன்றி. அவர்களுக்கு இணை அவர்கள் தான். அனில் சாரின் ஆதரவுக்கும் நன்றி. மூன்று படம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருக்கிறார் பிரதீப். அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான். படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். சில விஷயங்கள் தைரியமாக வசனமாக வைப்பதற்கு பிரதீப் உறுதுணையாக இருந்தார்.

கிளைமாக்ஸில் வரும் ஆணவக்கொலை தொடர்பான வசனம், கவின் ஆணவக்கொலை சமயத்தில் ஏற்படுத்திய பாதிப்பால் தான் வைத்தோம், அந்த வசனத்தை வைக்க சொன்னது பிரதீப் தான். மமிதாவிடம் ஒரு சீன் பாதி சொல்லும்போதே உடனடியாக பிடித்துக் கொள்வார். சின்ன வயதில் இருந்தே சரத் சாரைப் பிடிக்கும். அவருடைய நகைச்சுவை காட்சிகளையும் விரும்பி பார்த்திருக்கிறேன். ரோகிணி மேம் இந்த அம்மா கதாபாத்திரத்தில் ஒத்துக் கொண்டு நடித்ததற்கு நன்றி. படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஒரு பெண் தனக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்ததெடுக்கும் உரிமை அவளுக்கு மட்டும் தான் உள்ளது. வேறு யாருக்கும் இல்லை என்பதைத்தான் ‘டியூட்’ பேசுகிறது. அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் இது. எனக்கான நல்ல அறிமுகத்தை இந்தப் படம் மூலம் கொடுத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி.

இந்த படத்தில் நான் சொன்னது புதிதல்ல, தமிழ்நாட்டில் பல பெரியவர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்கள் இதுபற்றி பேசியிருக்கிறார்கள், இப்போதும் பலர் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். நான், இந்த படத்தில் சொன்ன சமூக பிரச்சனைப் பற்றி என் படங்களில் தொடர்ந்து பேசுவேன், என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி.” என்றார்.

நடிகை மமிதா பைஜூ பேசுகையில்,

“இது என்னுடைய முதல் தமிழ் வெற்றி மேடை! சந்தோஷமாக இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள், கீர்த்தி அண்ணாவுக்கு நன்றி. பிரதீப், சரத் சார், ரோகிணி மேம், ஐஸ்வர்யா, ரிது, சாய் எல்லோரும் எனக்கு பயங்கர எனர்ஜி கொடுத்தார்கள். பார்வையாளர்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி”. என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில்,

” படத்திற்கு ஆதரவு கொடுத்த மீடியா, ரசிகர்களுக்கு நன்றி. படத்தில் வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு நன்றி. அப்பா, தாத்தா கதாபாத்திரங்கள் வெறுமனே நடிக்காமல் அந்தக் கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் ‘காஞ்சனா’, ‘போர் தொழில்’ போன்ற படங்களில் நடித்தேன். ‘டியூட்’ படத்திலும் நல்ல கதாபாத்திரம் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. அழகான சோஷியல் மெசேஜை சரியாக கீர்த்தி கொண்டு சேர்த்திருக்கிறார். மூன்று முறை இந்தப் படம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிதாக தெரிகிறது. கீர்த்தி செதுக்கிய சரத்குமாரைதான் நீங்கள் திரையில் பார்த்தீர்கள். பிரேக்கப் சீனில் மமிதா மிகச்சிறப்பாக நடித்திருந்தார். எல்லோருமே சிறப்பாக ‘டியூட்’ படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி”. என்றார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில்,

“நவீன் சார், ரவி சாருக்கு நன்றி. உலகம் முழுவதும் இந்தப் படம் வெற்றியடைந்துள்ளது. அங்கெல்லாம் கொண்டு சேர்த்த என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நிகேத், எடிட்டர் பரத், காஸ்ட்யூமர் பூர்ணிமா என அனைவருக்கும் நன்றி. ஐஸ்வர்யா, ரிது, ரோகிணி மேம், சரத் சாருக்கு நன்றி. நிறைய சீன்களில் மமிதாவின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். இப்படி ஒரு அழகான படத்தைக் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. நிறைய விவாதங்களை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது. கேரளா, ஆந்திரா, துயாய், நார்த் அமெரிக்கா, நம் தமிழ் மக்கள் என அனைவரது ஆதரவுக்கும் நன்றி”. என்றார்.